அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க படிப்படியாக முன்னெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அண்மையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிக்க, உயரதிகாரம் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, முஸ்லிம் பெண்களின் நலனுக்காக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ``நாட்டின் இன்றைய தேவை பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் தானே தவிர பொது சிவில் சட்டமல்ல' என அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

இப்தார் விருந்துக் நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி, ``மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக உறுப்பினர்களும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இன்று நாட்டில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மாநிலங்களுக்கு நிலக்கரி கொண்டுசெல்லப்படுவதற்காக பயணிகள் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இதன் மீதான கவனம் தான், நாட்டின் தற்போதைய தேவையே தவிர, பொது சிவில் சட்டமல்ல" என கூறினார்.
