Published:Updated:

``ராகுல்தான் `கேப்டன்'; பிரியங்கா எடுத்த முடிவு சரியானது”- அசோக் கெலாட்

விஷ்ணுராஜ் சௌ

``காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை.''

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் `கேப்டன்’. காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை" என உறுதிபடக் கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய அரசியலில் தற்போது விடைதெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் கேள்விகளில் ஒன்று, அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதுதான். கடந்த மே மாதம் 23-ம் தேதி 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. காங்கிரஸ் கட்சியால் கடந்த 2014 தேர்தலைப்போலவே எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாத நிலையில், காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தாம் வகித்துவந்த கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் அளித்தார், ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்களும், மாற்றுக் கட்சியைச் சார்ந்த தலைவர்களும் ராகுல் காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் எனக் கருத்து தெரிவித்துவந்தனர். ஆனால், ராகுலின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில், கூடிய விரைவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி அக்கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசோக் கெலட்
அசோக் கெலட்
ANI

இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ``ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் கேப்டன். அதுவே மேற்கொண்டும் தொடரும். எங்கள் கட்சிக்குள் தலைவர்களுக்கான தட்டுப்பாடு ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரியங்கா காந்தியின் சோன்பத்ரா பயணம் குறித்து பேசியவர், ``ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் பணி என்பது மக்களின் வலிகளை அறிந்துகொள்வதுதான். பிரியங்கா சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தார். அவரை ஒட்டுமொத்த நாடே பாராட்டி வருகிறது. ஆனால், சோன்பத்ரா செல்ல பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன? ஒருவேளை, அவர் அங்கு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்" என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.