Published:Updated:

சாதி கட்சியாகிவிட்டது அ.தி.மு.க! - போட்டுத்தாக்கும் ‘அஸ்பயர்’ சுவாமிநாதன்

அஸ்பயர் சுவாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்பயர் சுவாமிநாதன்

தோல்வி குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவோர் அறிவிப்பையும் கட்சி இதுவரை வெளியிடவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில், ‘இது ரிக்‌ஷாகாரன் கட்சி’ என்று பெருமையாகப் பேசப்பட்டது

சாதி கட்சியாகிவிட்டது அ.தி.மு.க! - போட்டுத்தாக்கும் ‘அஸ்பயர்’ சுவாமிநாதன்

தோல்வி குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவோர் அறிவிப்பையும் கட்சி இதுவரை வெளியிடவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில், ‘இது ரிக்‌ஷாகாரன் கட்சி’ என்று பெருமையாகப் பேசப்பட்டது

Published:Updated:
அஸ்பயர் சுவாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்பயர் சுவாமிநாதன்

2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி, இரட்டைத் தலைமை சர்ச்சைகள், சசிகலா ஆடியோ... என அ.தி.மு.க-வில் பஞ்சாயத்துகளுக்குப் பஞ்சமே இல்லை. இந்தநிலையில்தான், ‘கட்சித் தலைமை சரியில்லை’ என்று குற்றம்சாட்டி வெளியேறியிருக்கிறார் கட்சியின் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ‘அஸ்பயர்’ சுவாமிநாதன். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட ‘அஸ்பயர்’ சுவாமிநாதனிடம் பேசினோம்...

“ `அ.தி.மு.க-வில் திறமைக்கு மரியாதை இல்லை; கட்சித் தலைமையிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை’ என்றெல்லாம் குற்றம்சாட்டியது ஏன்?’’

“கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கின்போது கட்சியின் ஐடி விங்கை திடீரென ஐந்தாகப் பிரித்து, அதில் சென்னை மண்டலச் செயலாளராக என்னை நியமித்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் சென்னை மண்டலம். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சம்பந்தமே இல்லாமல் கோவையுடன் சேர்த்துவிட்டனர். இது என்னவிதமான தொலைநோக்குப் பார்வை? அடுத்து, ‘வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு’ என்றார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வமோ, ‘இது தற்காலிகமானதுதான்’ என்றார். இதேபோல், ‘வெற்றிநடை போடுகிறது தமிழகம்’ என்று எடப்பாடி சொன்னால், ‘மக்கள் முதல்வர், பத்தாண்டு பட்ஜெட் சாதனை செய்தவர்’ என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார் பன்னீர்செல்வம். ஆக, கட்சித் தலைமைகளிடையே ஒற்றுமை இல்லை என்பது கடைக்கோடித் தொண்டனுக்கும் வெளிப்படையாகத் தெரிகிறதுதானே... இதையெல்லாம் சுட்டிக்காட்டி குறைகளைச் சரிசெய்யும் திறமையானவர்களை ஓரங்கட்டுகிறார்கள். அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.”

“சென்னை மண்டலத்தில், அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தத் தோல்விக்கு தலைமைமீது குற்றம்சாட்டியிருக்கிறீர்கள். அதேசமயம், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் என்ற வகையில் தோல்விக்கு நீங்களும் பொறுப்பேற்பீர்களா?

“சென்னை மண்டலத்தில் ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க வெற்றி பெறாததற்கு நானும் பொறுப்பேற்கிறேன். அதனால்தான், அந்தப் பதவியிலிருந்து என்னை விடுவித்து, ‘என்னைவிடவும் பொருத்தமான இளைஞரை நியமனம் செய்யுங்கள்’ என்று ஏற்கெனவே நான் கட்சிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால், தோல்வி குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவோர் அறிவிப்பையும் கட்சி இதுவரை வெளியிடவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில், ‘இது ரிக்‌ஷாகாரன் கட்சி’ என்று பெருமையாகப் பேசப்பட்டது. ஜெயலலிதா காலத்தில், ‘யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் வர முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு ஒரு தரப்பினர் மட்டுமே பலன்களை அனுபவித்து வருகிறார்கள். அதனால்தான், கட்சித் தலைமைமீது நான் குற்றம்சாட்டினேன்.’’

“ஒரு தரப்பினர் மட்டுமே பலன் அனுபவித்துவருகின்றனர் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?’’

“உதாரணமாகச் சொல்வதென்றால், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் தலைமை நிலையச் செயலாளர். சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் அவர்தான்... எல்லாவற்றுக்கும் மேலாக அவரேதான் முதல்வராகவும் இருந்தார். எப்படி ஒரே நபர் கம்பெனியின் சேர்மனாக, ஜெனரல் மேனேஜராக, ஏரியா மேனேஜராகவெல்லாம் இருக்க முடியும்?”

சாதி கட்சியாகிவிட்டது அ.தி.மு.க! - போட்டுத்தாக்கும்  ‘அஸ்பயர்’ சுவாமிநாதன்

“எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீங்கள் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டு பன்னீர்செல்வத்துக்கும் பொருந்தும்தானே?’’

“எடப்பாடி அண்ணனை மட்டும் நான் சொல்லவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், துணை முதல்வர் எனப் பல பொறுப்புகளில் இருந்துவந்த பன்னீர்செல்வத்தையும் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். ஏன் இப்படி ஒரு தரப்பினர் மட்டுமே அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவருகின்றனர் என்பதுதான் என் கேள்வி. கட்சியிலுள்ள அனைவரிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால், வெளியே சொல்ல முடியாமல் குமுறிக்கொண்டிருக்கின்றனர்.’’

“அ.தி.மு.க-வில் இன்று ‘சாதி அரசியல்’ மேலோங்கிவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு வைத்திருக்கிறீர்கள்... எதைவைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?’’

“நடந்து முடிந்த தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கூட்டணிகள் தொடர்பான முடிவுகளைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும். கவுண்டர், வன்னியர் சமூகங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தைப் பிற சமூகங்களுக்கு அளிக்கவில்லை. அதனால்தான், அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சியாகச் சுருக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது.’’

“பட்டியல் சமூகத்திலுள்ள குறிப்பிட்ட பிரிவுகளை ஒன்று சேர்த்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற அறிவிப்பையும் அ.தி.மு.க அரசு வெளியிட்டிருக்கிறதுதானே?’’

“இது ஒன்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது அல்ல... மத்திய அரசுதான் நிறைவேற்றித் தந்திருக்கிறது. இதற்கான பெருமை மத்திய அரசைத்தான் சேரும்.’’

“சமீப நாள்களாக அ.தி.மு.க-வினருடன் சசிகலா தொலைபேசியில் பேசிவருவது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நினைக்கிறீர்கள்?’’

“சசிகலாவின் பேச்சு தொண்டர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவசர அவசரமாக அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து, சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார்கள். ‘சசிகலா கட்சியின் உறுப்பினரே இல்லை’, ‘சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தமே இல்லை’ என்றெல்லாம் சொல்லிவந்தவர்கள், இப்போது ஏன் சசிகலாவை நினைத்துக் கவலைப்பட வேண்டும்?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism