
தனிக்கட்சி தனயன்... தடுமாறும் ஸ்டாலின்!
அதிகாரத்தைப் பிடிக்க அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. அமர்க்களமாகத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டன அரசியல் கட்சிகள். மைக் செட், கட்சித் தோரணங்கள், ஆளுயர மாலைகள், ஆரத்தித் தட்டுகள் எனத் தேர்தல் காட்சிகள் இப்போதே தலைவர்களின் கண்களில் நிழலாடுகின்றன. முதல் ஆளாக ஈரோட்டில் பிரசாரத்தை ஆரம்பித்து `ஆளில்லாத கடையில் டீ ஆத்த’த் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி. தம்பிகள், தங்கைகள் படைப்பிரிவை அணிதிரட்டி ‘கோட்டை’க்கு வழி தேடுகிறார் அன்புமணி. கொரோனா நிவாரண பேக்கேஜை பிரசார பேக்கேஜாக மாற்றியிருக்கிறார்கள் அ.தி.மு.க, தி.மு.க கழகக் கண்மணிகள். வாக்குச்சாவடிகள் தயாராக இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், கட்சித் தலைவர்கள் தங்களது வியூகங்களைக் கட்டமைக்கத் தயாராகிவிட்டார்கள். அவர்களின் முகாம்களுக்குள் ஒரு சுற்று வலம்வந்தோம். கண்ட காட்சிகள் அப்படியே இங்கே...
தனிக்கட்சி தனயன்... தடுமாறும் ஸ்டாலின்!
எல்லாக் கட்சித் தலைவர்களும் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றனர் என்றால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கே தயாராகிவிட்ட மனநிலையில் மந்தகாசப் புன்னகையைச் சிந்துகிறார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 90-ஸ் கிட்ஸ்களையே கிளர்ந்தெழவைக்கிறது அவரது சிகை அலங்காரம். ஸ்டாலின் என்ன பேச வேண்டும், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று அனுதினமும் படுத்தியெடுக்கிறது 11 பேர் கொண்ட குழு ஒன்று. பிசிறில்லாமல் பழமொழிகளை உச்சரிக்க, பயிற்சி வகுப்புகள் நடப்பதாகவும் கேள்வி. ஆக, மனிதர் அசராமல் உழைக்கிறார். தந்தைக்குச் சற்றும் சளைக்காமல் இளைஞரணியைத் திரட்டி ‘தனிக்கட்சி’யே நடத்துகிறார் தனயன் உதயநிதி. அதைச் சமாளிக்கத் தடுமாறுகிறார் ஸ்டாலின். சித்தரஞ்சன் சாலை கிச்சனில் அன்றாடம் மூன்று வேளையும் சமைக்கப்படுகின்றன சுடசுடத் தேர்தல் திட்டங்கள்!

இன்னொரு பக்கம், தொகுதிக்கு நூறு பேர் எனக் கட்சி சார்பற்ற 23,400 பேரை பணிக்கு அமர்த்தியிருக்கிறது ஐபேக் டீம். சர்வேதான் சர்வகட்சி நிவாரணம் என்கிற கார்ப்பரேட் கணக்கை, பிணக்கில்லாமல் செய்து முடிக்கும் முனைப்பிலிருக்கிறார்கள் கோட்டு சூட்டு போட்ட இன்ஸ்டன்ட் உடன்பிறப்புகள்! இன்னொரு பக்கம் பிரியாணி தொடங்கி பீட்சா வரைக்கும் பில் க்ளெய்ம் செய்து உடன்பிறப்புகளுக்கு உதறல் ஏற்படுத்துகிறது சர்வே டீம் ஒன்று. அலைபேசி வாயிலாக சர்வே எடுத்துவரும் இந்த டீம், மாநிலம் முழுவதும் தி.மு.க-வுக்கு அலை அலையாய் ஆதரவு இருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
கட்சிரீதியாகவும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் நடந்துவருகிறது. மாவட்டங்களைப் ‘பிரித்தாளும்’ பணிகளுக்குக் கச்சிதமாக ஐடியா கொடுக்கிறது ஐபேக் டீம். பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்தா கொடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளின் கடந்தகாலச் செலவுக்கணக்கு கதறல்கள் கடைசிவரை கட்சித் தலைமைக்குக் கேட்கவில்லை என்பது தனிக்கதை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘நமக்கு நாமே’ பயணத்தை மேற்கொண்டார் ஸ்டாலின். இந்தமுறை ‘எங்கள் நம்பிக்கை ஸ்டாலின்’, ‘தமிழகத்தின் நம்பிக்கை ஸ்டாலின்’ என்கிற கோஷங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
கனவு காணும் பன்னீர்... ஆல் பாஸ் எடப்பாடி!
இரட்டைத் தலைமையா, ஒற்றைத் தலைமையா என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கிறது அ.தி.மு.க. ஆனாலும், இடியாப்பத்துக்கு மேட்சிங்காக காரசாரமாக ஆட்டுக்கால் பாயா தயார்செய்து, தேர்தல் வேலையைச் சூட்டோடு சூடாக ஆரம்பித்துவிட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள். கட்சியை கம்பெனியாக்கும் வித்தையை மறக்காமல் செய்து முடித்திருக்கிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்த்துவைக்க
39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கட்சி சார்பில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, 15,000 ரூபாய் சம்பளமும் வழங்குகிறார்கள். 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். பெட்ரோல் அலவன்ஸ் 3,000 ரூபாய் தனி. இப்படிச் சம்பளத்துக்காக மட்டுமே சுமார் அரைக்கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறதாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததாக இதையும் ஆட்சி சாதனைக் கணக்கில் எடப்பாடி சேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இவையல்லாமல், அமைச்சர்களின் மதியூக அரசியல் வியூகங்கள் தனி. விஞ்ஞானரீதியில் ஓட்டு சேகரிப்பது குறித்து ஆய்வு செய்துவருகிறார் செல்லூர் ராஜூ. ‘தெருமுனை’ பிரசாரங்களுக்கு திட்டமிட்டுவருகிறார் ஜெயக்குமார். டெல்லி பாலத்தை கில்லியாக செப்பனிட்டு வருகிறார்கள் வேலுமணியும் தங்கமணியும். துணைக்கு யாருமில்லாத நிலையிலும் துணை முதல்வர் கனவை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை பன்னீர்செல்வம். அடுத்தமுறையும் தானே அமைச்சராக ஜல பிரதிஷ்டை செய்துவருகிறார் ராஜேந்திர பாலாஜி. பதவியைத் தக்கவைக்க வில்லேந்தி வினைபுரிகிறார் விஜயபாஸ்கர். இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக ‘பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்... அரியர் ஆல் கிளியர்’ என எல்லாப் பந்துகளையும் பெவிலியனுக்குத் தூக்கியடித்து, அமைச்சர்களையே அசரடிக்கிறார் எடப்பாடி!
சீரியஸாக யோசிக்காமலும் இல்லை. ஒவ்வொரு தொகுதியின் நீண்டகாலப் பிரச்னை குறித்தும் தகவல் சேகரிக்கப்படுகிறது. அப்படிப் பிரச்னைகள் இருக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரென்றால் உடனடியாக மேலிடத்துக்கு ‘நோட்’ பறக்கிறது. இதுவரை 74 தொகுதிகளின் பிரச்னைகளும் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகத் தகவல்.
‘ஹைஜாக்’ டி.டி.வி... அஸ்தமனமான 18 பேர்!
கட்சி தொடங்கிய புதிதில், மிஸ்டர் கூலாகக் களமிறங்கினார் டி.டி.வி.தினகரன். எந்தக் கேள்விக்கும் அசராத புன்னகையுடன் அவரளித்த பதிலைப் பார்த்து ‘அடுத்த எம்.ஜி.ஆர் இவரல்லவோ...’ என புளகாங்கிதம் அடைந்தார்கள் 2.0 ரத்தத்தின் ரத்தங்கள். அ.தி.மு.க-வை ‘ஹைஜாக்’ செய்வார் என்று எதிர்பார்த்து இவர் பின்னால் அணிதிரண்டார்கள் சில டஜன் எம்.எல்.ஏ-க்கள். கள நிலவரமறிந்து கப்சிப் என யூ டர்ன் போட்டதில், 18 பேர் மட்டுமே தினகரன் ‘பிளான்’-ல் சிக்கினார்கள். சொல்லி வைத்தாற்போல அவர்கள் அத்தனை பேரின் அரசியல் வாழ்க்கையையும் அஸ்தமனம் செய்தார் தினகரன்.
இடையே கொரோனா வந்தது. புதுச்சேரி ஆரோவில்லில் அடைக்கலமானார் தினகரன். வெளியே தலைகாட்டாதவர், அன்றாடம் அறிக்கை அரசியலை மட்டும் கைவிடவில்லை. ஆனாலும், கடைசி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தினகரனை நம்பியவர்கள். காரணம், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி பெற்ற ஓட்டு சதவிகிதம். ஆம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 15.4 சதவிகித வாக்குகள் அதிகம் என்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள். கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி என வட தமிழகத்திலும் கவுன்சிலர்கள் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் இரண்டு யூனியன்களை வசமாக்கியிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அ.ம.மு.க-வுக்குப் புது ரத்தம் பாய்ச்ச சசிகலாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். சிறையிலிருந்து அவர் வெளியே வந்தால் அ.ம.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவாரா, அ.தி.மு.க-வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவாரா என்பதுதான் இரு கட்சித் தொண்டர்களின் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இப்படியான சூழலில்தான் வரும் தேர்தலை எதிர்கொள்கிறார் தினகரன்!
‘கிட்னாப்’ முருகன்... ஆட்டுக்குட்டி அண்ணாமலை!
‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்கிற தமிழிசையின் குரல் டெல்லி வரை கேட்டதில் அகமகிழ்ந்த மோடி டீம் அவரை தெலங்கானா கவர்னராக்கியது. தொடர்ந்து லேட்டாகத் தேர்வு செய்தாலும், லேட்டஸ்ட்டாக முருகனை மாநிலத் தலைவராக நியமித்தது கட்சித் தலைமை.
எல்.முருகனை ‘எல் போர்டு’ முருகனாகக் கேலி செய்து காண்டானார்கள் பதவிக்காகக் காத்திருந்த சீனியர்கள். ஆனால், சத்தமில்லாமல் சாதிக்கிறார் முருகன். தி.மு.க-விலிருந்து
வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் என சீனியர்களையே ‘கிட்னாப்’ செய்து கிலியேற்றினார். போதாக்குறைக்கு இவர் அறிவித்துள்ள இன்னோவா கார் பரிசுத் திட்டத்தால் ‘கீ’ கொடுத்ததுபோல வேலை செய்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள். ஆனாலும், கட்சிப் பதவி கிடைக்காத முருகனின் எதிர்கோஷ்டியினரோ, “பார்த்து... அண்ணன் கடைசியில ரிமோட் கார் கொடுத்துடப் போறாரு...’ என்று உள்குத்து வேலை செய்யவும் தவறுவதில்லை. இவர்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாய் தன் ஆட்டுக்குட்டிகளை ஓட்டிவருகிறார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.
மாநிலம் முழுவதும் கட்சியின் பூத்களை ஐந்து ஐந்தாகப் பிரித்து, ‘சக்தி கேந்திரம்’ என்ற பெயரில் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இவர்கள் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன. ‘உங்களின் ஒருவன் வேட்பாளர்’ என்கிற திட்டத்தில் தொகுதியில் பிரபலமான ஒருவரை கட்சியில் இணைத்து, அவரை வேட்பாளராக்கும் ஐடியாவும் முருகன் வசம் உள்ளது. தவிர, வருகிற தேர்தலில் கெங்கவல்லி, ராசிபுரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடவும் தயாராகிவருகிறார் முருகன். ஆனாலும், ஹை கோர்ட், ஆண்மை, ஆன்ட்டி இந்தியன் தொடங்கி இறுதியாக ‘கந்த சஷ்டி’ அரசியல் வரைக்கும் இவர்கள் செய்த அரசியல், வரும் தேர்தலில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

கதறும் கதர்... சிதறும் கூட்டணி?!
‘‘வீரம்கிறது என்ன தெரியுமா... பயமில்லாத மாதிரி நடிக்கிறது!’’ என்கிற ‘குருதிப்புனல்’ டயலாக் இன்றைய காங்கிரஸ் கதர்ச் சட்டைகளுக்கு நன்றாகவே பொருந்துகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே காங்கிரஸைக் கழற்றிவிடும் முனைப்பில் உசுப்பேற்றிவருகிறார்கள் பதவி வாய்ப்பை இழந்த உடன்பிறப்புகள். இருதரப்பிலும் உரசல்கள் தொடர்ந்தன. க்ளைமாக்ஸ் காட்சியாக, உள்ளாட்சித் தேர்தல் பதவிப் பங்கீடு விவகாரத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ளாத குறையாகச் சண்டையிட்டார்கள் கதர்ச் சட்டைகள். ஆக, தி.மு.க தலைமை எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸைக் கழற்றிவிடும் என்பதுதான் களநிலவரம். ஆனாலும், சற்றும் மனம் தளராமல், ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் ஆளாகத் தைரியமாக ஈரோட்டில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. இதற்கிடையே கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா, “கமல், ரஜினியே வந்து அழைத்தாலும் நாங்கள் தி.மு.க-வை விட்டுப் போக மாட்டோம்!” என்று சம்மனே இல்லாமல் ஆஜராகி, உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
‘அக்னி டாட்டூ’ அன்புமணி; அமையுமா கூட்டணி?!
“அன்புமணியை முதல்வராக்காமல் விட மாட்டோம்” என்று கையில் அக்னிக் கலச டாட்டூவுடன் களமிறங்கியிருக்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். வன்னியர்குல ‘பாகுபலி’போல அவரும் சளைக்காமல் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை எனும் முப்படைகளை உருவாக்கியிருக்கிறார். இணையம் வழியாகத் தினமும் தேர்தல் போர்க்கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. தவிர, ‘தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம்’ எனும் பெயரில் புதிய அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சில வழிமுறைகளைப் பின்பற்றி, 12-ம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம், வேலைகளைத் தேடாமல் புதிய தொழில்முனைவோராக எப்படி உருவாகலாம் என்பதுவரை ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் இன்றுவரை இடம்பெற்றிருந்தாலும், கூட்டணி ரயில் எந்நேரம் தடம்மாறும் என்பது கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே வெளிச்சம்!
திகில் கதை சீமான்... தேர்தலில் ‘கவரிமான்’!
ஆமைக்கறி, கறி இட்லி, ஆ.க-74 என்று தொண்டர்களை எப்போதும் அட்டென்ஷனிலேயே வைத்திருக்கிறார் சீமான். கொரோனா ஊரடங்கால், நெஞ்சு விம்மிப்புடைக்க இவர் சொல்லும் திடீர் திகில் கதைகளைக் கேட்க முடியாமல் ஏங்கிக்கிடக்கிறார்கள் தம்பிமார்கள். அதேசமயம்
இவர் கிழித்த கோட்டைத் தாண்டாமல் தாண்டவமாடுகிறது தம்பிகள் பட்டாளம். ஆனாலும், தமிழகத்தில் எந்தவொரு கட்சித் தலைவரும் சீமானின் தன்னம்பிக்கைக்கு முன்பு ஈடாக நிற்க மாட்டார்கள். ஆம், இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, இம்முறையும் தனித்துக் களமிறங்கவே முடிவுசெய்துள்ளது. 234 தொகுதிகளைச் சமமாகப் பிரித்து, அதில் பாதியைப் பெண்களுக்கு ஒதுக்கவும் முடிவெடுத்திருக்கிறார் செந்தமிழன் சீமான். இந்த முறை சிவகங்கைத் தொகுதியைக் குறிவைத்துக் களமாடப் போகிறாராம்!
தரைதட்டிய கப்பல்; தாளம் தப்பும் முரசு?!
ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை தேர்தல் பஜாரில் கடும் டிமாண்டில் இருந்தது கேப்டனின் கப்பல். ஆனால், இன்றோ தரைதட்டிய கப்பலை ஏலம் எடுக்கக்கூட யாருமில்லை. இப்போதைக்கு அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், எந்தக் குதிரையில் சவாரி செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது சாலிகிராமம். திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி என்கிற ஃபார்முலாவைத் தவறாமல் தக்கவைக்க இப்போது அந்தக் கட்சி தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தொண்டர்களுக்கு முகம் காட்ட அவசர அவசரமாக அமெரிக்க மருத்துவமனையிலிருந்து அழைத்துவரப்பட்டார் விஜயகாந்த். முன்புபோல அவரால் சுறுசுறுப்புடன் செயல்பட முடியாவிட்டாலும், தனது பிறந்தநாள் தொடங்கி விசேஷ நாள்கள் அனைத்திலும் தலைகாட்டி தன் தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறார். ஒருகாலத்தில் சுமார் 10.1 சதவிகிதம் அளவுக்கு வாக்குவங்கியை வைத்திருந்த தே.மு.தி.க, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளே பெற்றது. இந்த சதவிகித அடிப்படையில்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி சீட் ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும். இதனால், டென்ஷனில் இருக்கிறது கேப்டன் படை.
ஆயிரம் விளக்கு... அத்தனை பேரையும் குழப்பு!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் டார்ச் லைட்டைவைத்து ஆயிரம் விளக்குக்கே வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறார் கமல்ஹாசன். அவரது ‘இந்தியன் - 2’ சினிமாவில், இந்திய தேசிய ராணுவத்திலிருந்து தேச விடுதலைக்குப் பின்பு ஊர் திரும்பும் இந்தியன் தாத்தா, தமிழகத்தில் புதிய இளம் தலைவர்களை உருவாக்குவாராம். படத்தின் ஒன்லைன் இது. அதேபோல நிஜத்திலும் இளந் தலைவர்கள் படையை உருவாக்கத் திட்டமிடுகிறார் கமல். ஆனால், படைக்கு தக்க ஆட்கள்தான் இன்னும் சிக்கவில்லை. இங்குமல்லாமல் அங்குமல்லாமல் ‘மய்யமாக’ அவர் பேசுவதால், அவரின் கட்சி நிர்வாகிகள் மட்டுமன்றி, தொண்டர்களும் குழப்பத்தில்தான் உள்ளார்கள். ஆனால், எதற்கும் அசராமல் சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர்களைத் தமிழகம் முழுவதும் அறிவித்துள்ளார் கமல்.
இப்படியாக, தமிழக தேர்தல் மேடையில் விதவிதமாக வேஷம்கட்டத் தயாராகி வருகிறார்கள் தலைவர்கள்.
வாக்காளப் பெருமக்களே... உஷார்!