Published:Updated:

தென் மாவட்ட அமைச்சர்களுக்குக் குறி! - டி.டி.வி.தினகரனின் தேர்தல் வியூகம்

டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க பிரித்தாலும், ஒன்பது தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அ.தி.மு.க.

தென் மாவட்ட அமைச்சர்களுக்குக் குறி! - டி.டி.வி.தினகரனின் தேர்தல் வியூகம்

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க பிரித்தாலும், ஒன்பது தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அ.தி.மு.க.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

பத்தாண்டுக் கால காத்திருப்புக்குப் பிறகு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று தி.மு.க துடிக்கிறது. அ.தி.மு.க-வோ எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தவிக்கிறது. இந்தக் கட்சிகளின் கணக்கு இப்படியென்றால், துரோகத்துக்கு பழிதீர்க்கக் காத்திருக்கிறது அ.ம.மு.க என்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள். அதனால்தான், சசிகலா ஒதுங்கிக்கொண்டபோதும் விடாப்பிடியாகக் களத்தில் நிற்கிறார் தினகரன். அதுவும், தென் மாவட்டங்களில் போட்டியிடும் அமைச்சர்களில் ஒருவர்கூட வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதுதான் தினகரனின் லட்சியம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க பிரித்தாலும், ஒன்பது தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அ.தி.மு.க. இம்முறை, ‘அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது’ என்பதில் தீவிரமாகவே இருக்கிறது அ.ம.மு.க. ‘‘அ.தி.மு.க ஜெயிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் விருப்பம். தென் மாவட்டங்களில் எங்கள் வேட்பாளர்கள் நிச்சயமாக இருபதாயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பிரிப்பார்கள். துரோகம் செய்ததற்கான பலனை அவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’’ என்று வெளிப்படையாகவே பேசிவருகிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள்.

மார்ச் 11-ம் தேதி வரை, இரண்டு கட்டங்களாக 65 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார் தினகரன். கடந்தமுறை ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரன், இம்முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். முதற்கட்டமாக, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதை அவர் உறுதி செய்திருக்கிறார். கோவில்பட்டியில், ஒரு யூனியன் சேர்மன் பதவி அ.ம.மு.க வசம்தான் இருக்கிறது. அந்த யூனியனில் 10-க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களை அ.ம.மு.க பெற்றிருக்கிறது. கோவில்பட்டி தொகுதியை தினகரன் தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.

உதயகுமார், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்
உதயகுமார், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்

தினகரனின் வியூகங்கள் என்னென்ன? அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தினகரனின் ஹிட் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பது அமைச்சர்கள்தான். இந்தப் பட்டியலில் முதல் ஆளாக இருக்கிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ஏனென்றால், முதன்முதலாக சின்னம்மாவை முதலமைச்சராக முன்மொழிந்த உதயகுமார், சின்னம்மா சிறைக்குச் சென்றதுமே முதல் ஆளாக ஓடிச் சென்று எடப்பாடியுடன் கைகுலுக்கினார். மேலும், எடப்பாடியைக் குளிர்விப்பதற்காக தினகரனுக்கு அவர் கொடுத்த டார்ச்சர் கொஞ்ச நஞ்சமல்ல.

அதற்குப் பழிவாங்கும் விதமாகத்தான் உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியை மருது சேனை இயக்கத்துக்கு ஒதுக்கியிருக்கிறார் தினகரன். அந்த அமைப்பின் நிறுவனரான கரு.ஆதிநாராயணத் தேவர் திருமங்கலத்தில் போட்டியிடுகிறார். உதயகுமாருக்கும் ஆதிநாராயணத் தேவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அமைச்சரை எதிர்த்துப் பல போராட்டங்களை அவர் நடத்தியிருக்கிறார். வேறு யாரை நிறுத்தினாலும் உதயகுமார் விலைக்கு வாங்கிவிடுவார் என்பதால், விலைக்கு வாங்கவே முடியாத ஆளாக ஆதிநாராயணத் தேவரை தினகரன் தேர்வுசெய்திருக்கிறார். அகமுடையார் சமூக வாக்குகள் கணிசமாக உள்ள இந்தத் தொகுதியில் அந்தச் சமூக வாக்குகளும், அ.ம.மு.க வாக்குகளும் திரண்டாலே ஆர்.பி.உதயகுமார் அவுட் ஆகிவிடுவார்” என்றவர்கள் அடுத்தடுத்த அமைச்சர்கள் சிலரைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினகரன்
தினகரன்

“தினகரனின் அடுத்த குறி துணை முதல்வர் பன்னீர்செல்வம்தான். அவர் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் நாயுடு சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. அதை உடைத்தாலே பன்னீருக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைத்த தினகரன், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமியை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார். எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘பூக்கடை’ சேகரும் பத்தாயிரம் வாக்குகளையாவது பிரிப்பார்.

ஒரத்தநாடு தொகுதியில் அ.ம.மு.க சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மா.சேகர், ஒருகாலத்தில் வைத்திலிங்கத்தையே அரசியலில் ஆளாக்கியவர். வரும் தேர்தலில் வைத்திலிங்கத்துக்கு எதிராக அவர் சுமார் ஐம்பதாயிரம் வாக்குகளையாவது வாங்குவார் என்பதால், வைத்திலிங்கத்துக்கு இப்போதே உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து நேரடியாகக் களம் காண்கிறார் தினகரன். இதுவே எங்கள் தொண்டர்களுக்குப் புது உத்வேகத்தை அளித்திருக்கிறது. அங்கு தினகரனை வெற்றிபெறச் செய்வதற்கான வேலைகளை தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா செய்துவருகிறார். தவிர, 2.76 லட்சம் வாக்காளர்களைக்கொண்ட கோவில்பட்டி தொகுதியில் கிட்டத்தட்ட 25 சதவிகித மக்கள், மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தினகரனின் சாதகமான அம்சம்.

 கடம்பூர் ராஜூ, சீனிவாசன்
கடம்பூர் ராஜூ, சீனிவாசன்

‘அம்மாவை நாங்க யாருமே பார்க்கலை. அம்மா இட்லி சாப்பிட்டார்னு நான் சொன்னது உண்மையில்லை’ என்று பல்டியடித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அதே சமூகத்தைச் சேர்ந்த ராமுத்தேவரை நிறுத்தியிருக்கிறார் தினகரன். அவரும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். அதேபோல, அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வெற்றிவேலின் மகனை நிறுத்தவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள் தினகரனின் அபிமானிகள்.

தினகரனின் வியூகங்கள் வெல்லுமா... அமைச்சர்களைக் கவிழவைப்பாரா? பார்க்கத்தானே போகிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism