Published:Updated:

`காடுவெட்டி குருவை கொன்னுட்டீங்க!' - பா.ம.க-வை விமர்சித்து டிக் டாக் வெளியிட்ட உதவி இயக்குநர் கைது

``காடுவெட்டி குருவை அப்போலோவில் வைத்து விஷ ஊசிபோட்டு கொன்றார்களே.''

கைதான சத்தியமூர்த்தி
கைதான சத்தியமூர்த்தி

காடுவெட்டி குரு மற்றும் பா.ம.க-வை கடுமையாக விமர்சனம் செய்து அதை டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பியதால் சாதிய மோதல் நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்ட திரைப்பட உதவி இயக்குநரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள முதுகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரின் மகன் சத்தியமூர்த்தி. இவர் சென்னையில் தங்கியிருந்து சினிமாவில் உதவி இயக்குநராகவும் இரவு நேரத்தில் உணவகங்களில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றியும், காடுவெட்டி குருவை அப்போலோவில் வைத்து விஷ ஊசிபோட்டு கொன்றார்களே. அதைக் கேட்கத் துப்பில்லாதவர்கள் நீங்கள் என்று கடுமையான வார்த்தைகளால் பா.ம.க-வினரை விமர்சனம் செய்து வன்முறையைத் தூண்டும் விதமாக வீடியோவில் பேசி அதைச் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

இந்த வீடியோ பதிவு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கிராம நிர்வாக அதிகாரி, மீன் சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது டிக் டாக்கில் பேசி வெளியிட்ட சத்தியமூர்த்தி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் சத்தியமூர்த்தியைக் கைது செய்து அரியலூர் அழைத்து வந்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

ஏப்ரல் 18-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, சிலரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிலையில், அரியலூர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த சிலர், ஒரு சமூகத்தினரைப் பற்றி இழிவாகப் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டுவருகின்றனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

அரியலூர் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகவே ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரைப் பற்றி அவதூறான முறையில் வீடியோக்களை டிக் டாக், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிவருவதால், குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பதற்றமான சூழல் உருவாகிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இப்படியான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எஸ்.பி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்து. இதுவரையிலும் ஆறு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.