Published:Updated:

மியான்மர்: வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பலி; ராணுவ ஆட்சியின் கோரம்!

மியான்மர் ராணுவத் தாக்குதல் ( ட்விட்டர் )

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:

மியான்மர்: வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பலி; ராணுவ ஆட்சியின் கோரம்!

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மியான்மர் ராணுவத் தாக்குதல் ( ட்விட்டர் )

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து, அதன் தலைவரான ஆங் சான் சூகி (Aung San Suu Kyi ) ஆட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ராணுவத் தரப்பு 'தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது' எனக் குற்றம்சாட்டியது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்கவிருந்த ஆங் சான் சூகிக்கு எதிராகச் சதிசெய்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது .

மியான்மர் தாக்குதல்
மியான்மர் தாக்குதல்
ட்விட்டர்

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம்கொண்டு அடக்கியது. ஆனாலும், மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்த நிலையில், நேற்று மியான்மரின் சகாயிங் மாகாணத்தின் கன்பாலு டவுன்ஷிப்பிலுள்ள பசி கி (Pazi Gyi) கிராமத்துக்கு வெளியே, ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் 'மக்கள் பாதுகாப்புப் படை' எனும் இயக்கம் ஓர் அலுவலகத்தைத் திறப்பதற்கான விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

விழா காலை 8:30 மணியளவில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும்போது மியான்மர் ராணுவம், அந்தக் கூட்டத்தின் மீது நேரடி வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதல் நடத்தி சில நிமிடங்களில்  ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

மியான்மர் தாக்குதல்
மியான்மர் தாக்குதல்
ட்விட்டர்

இது குறித்து அமெரிக்கச் செய்தி நிறுவனமான அசோசியேட்டடு  பிரஸ், 'கொல்லப்பட்டவர்களில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஆட்சி எதிர்ப்பு ஆயுதக்குழுக்களும், பிற எதிர்க்கட்சி அமைப்புகளின் தலைவர்களும் அடங்குவர்' என்று தெரிவித்திருக்கிறது. ராணுவ ஆட்சி நடைபெறுவதால் அங்கு அறிக்கை வெளியிடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக வெளிவரவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்து, ஐ.நா பொதுச்செயலாளர்  ஆன்டோனியோ குட்டெரஸ் (António Guterres), 'மியான்மர் மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதலை நிறுத்துமாறு ராணுவத்துக்கு என் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

மியான்மரின் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசு, இந்தத் தாக்குதலை, "பயங்கரவாத ராணுவத்தின் கொடூரமான செயல். மேலும், இது அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராகப்  பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு போர்க்குற்றம்" என்றும் தெரிவித்திருக்கிறது.