Published:Updated:

ராமநாதபுரம்: பாஜக மாவட்டத் தலைவரைக் கொல்ல ஸ்கெட்ச்; கூலிப்படையை ஏவியது யார்? - அதிர்ச்சிப் பின்னணி!

பா.ஜ.க மாவட்டத் தலைவரைக் கொல்லவந்த கூலிப்படையினர்

தரணி முருகேசனின் விவசாயப் பண்ணைக்கு ஆளுநர் வருகைதரவிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அவரைக் கூலிப்படையினர் கொலைசெய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ராமநாதபுரம்: பாஜக மாவட்டத் தலைவரைக் கொல்ல ஸ்கெட்ச்; கூலிப்படையை ஏவியது யார்? - அதிர்ச்சிப் பின்னணி!

தரணி முருகேசனின் விவசாயப் பண்ணைக்கு ஆளுநர் வருகைதரவிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அவரைக் கூலிப்படையினர் கொலைசெய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க மாவட்டத் தலைவரைக் கொல்லவந்த கூலிப்படையினர்

ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்டத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மாவட்டப் பொருளாளராக இருந்த தரணி முருகேசனை புதிய மாவட்டத் தலைவராக நியமித்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஏற்கனவே கதிரவனுக்கும், தரணி முருகேசனுக்குமிடையே உட்கட்சி மோதல் இருந்துவந்தது அறிந்த ஒன்று. இந்த நிலையில், திடீரென கதிரவன் தூக்கப்பட்டு தரணி முருகேசன் நியமிக்கப்பட்டது கதிரவனின் ஆதரவாளர்களை அதிருப்தி அடையச் செய்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்துக்குள் கதிரவனின் ஆதரவாளர்கள் புகுந்து நாற்காலிகளை வீசி எறிந்தது சலசலப்பை‌ ஏற்படுத்தியது.

தரணி முருகேசன் வீட்டில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு
தரணி முருகேசன் வீட்டில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு

இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தரணி முருகேசன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொள்ள சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் முகக்கவசம் அணிந்த இருவர் அவரின் வீட்டை அங்கும் இங்குமாகச் சுற்றி நோட்டமிட்டு வந்திருக்கின்றனர். தரணி முருகேசன் கடையில் பணியாற்றும் ஊழியர், அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தபோது, வாள் மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர்.‌ இது குறித்து தரணி முருகேசனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி முடிந்து இரவு வீட்டுக்கு வந்த தரணி முருகேசன் வரவேற்பு அறையில் ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த முகக்கவசம் அணிந்த மர்ம‌ நபர்கள் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தரணி முருகேசன் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை தரணி முருகேசன் ஆதரவாளர்கள் தடுத்துநிறுத்தி சுற்றிவளைத்து பிடித்துத் தாக்கினர்.

கேணிக்கரை காவல் நிலையம்
கேணிக்கரை காவல் நிலையம்

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி தங்கதுரை, தரணி முருகேசன் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிடிபட்ட இருவரையும் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட விசாரணையில், கைதானவர்கள் சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மோகன் என்பதும், அவர்கள் இருவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், இவர்களை அனுப்பியது யார்... என்ற தகவலை இருவரும் தெரிவிக்க மறுப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன், அவரது ஆதரவாளர்கள் வக்கீல் சண்முகநாதன், விக்கி என்கிற விக்னேஸ்வரன், பாலா என்கிற சேட்டை பாலா ஆகியோர்தான் மாவட்டத் தலைவரை கூலிப்படையை ஏவி கொலைசெய்ய திட்டமிட்டதாக தரணி முருகேசன் ஆதரவாளர் கணேசன் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

தரணி முருகேசன் வீட்டில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு
தரணி முருகேசன் வீட்டில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு

அதன் பேரில் அவர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். நாளை மறுநாள் தரணி முருகேசனின் விவசாயப் பண்ணைக்கு ஆளுநர் வருகைதரவிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அவரைக் கூலிப்படையினர் கொலைசெய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.