Published:Updated:

100 நாள் வேலைத் திட்டம்: `செயலி மூலம் வருகைப் பதிவு' - காங்கிரஸ் எதிர்ப்பும், பாஜக பதிலும்!

100 நாள் வேலைத் திட்டம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்வோர், தங்களது வருகைப் பதிவை (NMMS) மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

100 நாள் வேலைத் திட்டம்: `செயலி மூலம் வருகைப் பதிவு' - காங்கிரஸ் எதிர்ப்பும், பாஜக பதிலும்!

ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்வோர், தங்களது வருகைப் பதிவை (NMMS) மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
100 நாள் வேலைத் திட்டம்

ஆப் மூலம் வருகைப் பதிவு!

மத்திய அரசு அனைத்து மாநில மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஆணையர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், "மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மொபைல் செயலி (National Mobile Monitoring System App: NMMS) மூலம் இரண்டு நேர முத்திரையிடப்பட்ட மற்றும் புகைப்படங்களுடன் பணியிடத்தில் வருகையைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இது கடந்த மே 21-ல் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை
மத்திய அரசு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை

மேலும் 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் இடங்களில் 2022-ம் ஆண்டு, மே 1-ல் கைமுறை வருகைப் பதிவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடு மே 16, 2022 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இப்போது, ​​NMMS மூலம் அனைத்துப் பணிகளுக்கும் வருகைப் பதிவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. இந்த ஏற்பாடு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். அதன்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்!

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நாடு முழுவதிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் 9 கோடிப் பணியாளர்களும் தங்களின் வருகையை இனி மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்று ஊரகவளர்ச்சித்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு பதிலாக, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வேலையாட்கள் தங்களின் கூலியைப் பெறுவதில் சிக்கலை உருவாக்கும்.

ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை
ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை
ட்விட்டர்

விலையுர்ந்த ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், குறிப்பாக பெண்கள், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பார்கள். சுருக்கமாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இந்த நடவடிக்கை காரணமாக அதன் மதிப்பை இழக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் செலவினங்களைக் குறைப்பதற்காக மோடி அரசு எடுத்திருக்கும் இந்தக் கொல்லைப்புர நடவடிக்கை ஏழைகள் மீதான அப்பட்டமான தாக்குதல். இந்த நடவடிக்கை ஊழலுக்கு வழிவகுத்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்கள் தங்களின் அதிகாரத்தை இழக்கச் செய்யும்.

வெளிப்படைத்தன்மையைக் குலைக்கிறது!

மொபைல் செயலி மூலம் வருகையைப் பதிவுசெய்யும்போது ஆவணங்கள் அனைத்தும் மொபைலிலேயே இருக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் முடிக்கப்பட்ட வேலைகளுடன் தொடர்புடையதாக ஊதியம் இருக்கிறது. ஆனால், செயலியில் இது குறித்த விவரங்கள் இல்லை. இந்தப் புதிய முறை நடைமுறைக்கு ஏற்றது இல்லை என்பது மட்டுமல்ல, இது வெளிப்படைத்தன்மையை குலைக்கிறது. முந்தைய நடைமுறையில் அனைவரும் வேலைக்கு வரும்போது கையெழுத்திட வேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இது சமூக தணிக்கைக்கும் உட்பட்டுத்தப்பட்டது. புதிய செயலியின் மூலம், சர்வர் செயலிழந்திருக்கும்போது, தொழிலாளர்கள் வேலை மற்றும் ஊதியத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல் குழுப் படம் எடுப்பதற்கு, குறிப்பிட்ட நேரத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டியிருக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களைப் பாதியாகக் குறைக்கும் நடவடிக்கையுடன் இது இணைந்திருக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்காகத்தான்..!

கொரோனா பெருந்தொற்று, மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை ஆகியவை காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும் இருக்கின்றன. இந்த இரண்டு திட்டங்களின் மீதும் நடத்தப்பட்டிருக்கும் இரட்டைத் தாக்குதல் காரணமாக ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனினும், இது குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன'' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "ஊழலை ஒளிப்பதற்காகத்தான் பல்வேறு சீர்திருத்தங்களை, மாற்றங்களை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாஜக அரசு கொண்டுவருகிறது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் போன்றவற்றின் மூலமாகப் பல்வேறு ஓட்டைகளை அடைத்து இதுவரை 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுவந்த ஊழல்களைத் தடுத்திருக்கிறது. மேலும் திமுக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செயலி மூலம் வருகைப் பதிவேடு உருவாக்கும் திட்ட மேற்கொள்ளப்பட்டுவந்தது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆனால் செயல்படுத்த முடியவில்லை. தற்போது திட்டத்தில் 20- க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இடங்களில் ஆப் மூலமான வருகைப் பதிவேட்டை அமைப்பது முற்றிலும் சரியே. இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். ஊழல் குறையும். 100 நாள் பணி செய்பவர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்பதை முழுமையாகத் தெரிவிக்கும். பெரும்பாலானோர் இந்த முறையைப் பின்பற்றி, தற்போது பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சிகள் எதையாவது சொல்ல வேண்டும் என்று இருக்காமல், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை வரவேற்க வேண்டும்" என்றார்.