Published:Updated:

மகனை வீழ்த்த அம்மாவின் பாணி... அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள்!

அ.தி.மு.க
அ.தி.மு.க

வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு எல்.இ.டி டி.வி (அ) வாஷிங் மெஷின், ஆண்ட்ராய்டு செல்போன், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் என ஏராளமான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் வகையில் பல அதிரடியான வியூகங்களை அந்தக் கட்சி வகுத்துவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு, மூன்று மாதத்துக்குள் நடைபெறவிருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். அகில இந்தியத் தலைவர்களின் வருகையும் தமிழகத்தில் அடிக்கடி நிகழ்ந்துவருகிறது. ஒருபுறம் தேர்தல் பிரசாரப் பணிகள் என்றால் மறுபுறம் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புப் பணிகளும் கட்சிகளின் சார்பில் தீவிரமாக நடந்துவருகின்றன.

தேர்தல் களத்தில் நண்பன் கூட்டணிக் கட்சிகள் என்றால், கதாநாயகன் தேர்தல் அறிக்கைகள்தான். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வாக்குகளை அல்ல பல வாக்குறுதிகளை வெளியிடுவர். நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றாலும், சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கூட்டணிக் கட்சிகளும் மக்களைக் கவரும் வகையிலான தேர்தல் அறிக்கையும் சரியாக அமைந்துவிட்டாலே வெற்றிக்குப் பக்கத்தில் நெருங்கிவிடலாம்.

தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடும் கருணாநிதி
தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடும் கருணாநிதி

அந்தவகையில், ஆளும்கட்சியான அ.தி.மு.க-வில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், ஜே.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, அன்வர் ராஜா, டாக்டர் வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு இதுவரை 72 கவர்ச்சிகர அறிவிப்புகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் முதல்வரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

``தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு எல்.இ.டி டி.வி (அ) வாஷிங் மெஷின், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் என ஏராளமான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் வகையில் பல அதிரடியான வியூகங்களை அந்தக் கட்சி வகுத்துவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

2011 தேர்தல் அறிக்கை...
2011 தேர்தல் அறிக்கை...

இது குறித்து, அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

``டி.வி ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டதால் அந்தத் திட்டம் நிச்சயமாக இல்லை. வாஷிங் மெஷின் கொடுப்பது பற்றி யோசிக்கப்பட்டது. ஆனால், அதுவும் வேண்டாம், பெண்களைக் கவரும் வகையில் வேறு ஏதாவது கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஐம்பது சதவிகித மானிய விலையில் இரு சக்கர வாகனம் கொடுக்கும் திட்டமும் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப், டேப்லெட் கொடுக்கும் திட்டமும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, வீடு கட்டுவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக 15 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியில் கடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்துக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 2,000 ரூபாய் ஆகியவை கொடுக்கப்படவிருக்கின்றன.

அதேபோல, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே தனியார் வேலைகளுக்கும் செல்லும் வகையில் வழிமுறைகள் மாற்றப்படவிருக்கின்றன. ஒரு தனியார் நிறுவனத்துக்கு எவ்வளவு பேர் தேவை என்பதை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அரசுதான், அதற்கேற்ப மாணவர்களை இன்டர்வியூவுக்கு அனுப்பும். அதேபோல, எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு மதியத்துக்கு மேல், அவர்கள் விரும்பும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும். நான்காண்டுகளாக இருக்கும் பொறியியல் படிப்புகள் மூன்றாண்டுகளாக குறைக்கப்படவிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது போன்ற 72 கவர்ச்சிகர அறிவிப்புகள் இருக்கின்றன. அவை முதல்வரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகுதான் எங்களின் அறிக்கை வெளியிடப்படும். காரணம், 2006-ம் ஆண்டில் நாங்கள் அறிவித்த பிறகு, இலவச டி.வி., இரண்டு ரூபாய்க்கு அரிசி என கருணாநிதி அறிவித்துவிட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற முக்கியக் காரணம் அந்தத் தேர்தல் அறிக்கைதான். அதனால் அவர்களின் அறிக்கை வந்த பிறகு, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து எங்கள் அறிக்கை வெளியாகும்'' என்கிறார்கள்.

டார்கெட் `தினகரன்’.. எடப்பாடி பழனிசாமி சசிகலாவைத்  தவிர்ப்பதன் பின்னணி என்ன? #TNElection2021

ஜெயலலிதா வழியில் எடப்பாடி!

அ.தி.மு.க-வினர் சொல்வதுபோல, 2006 சட்டமன்றத் தேர்தலில் கதாநாயகனாக இருந்தது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என தி.மு.க-வின் பல அறிவிப்புகள் அந்தக் கட்சிக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்தன. அதுவரை இலவசங்களையும் இது போன்ற நலத்திட்டங்களிலும் பெரிதாக கவனம் செலுத்தாத ஜெயலலிதா, 2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த வித்தையைக் கருணாநிதியிடமிருந்துதான் அவர் கற்றுக்கொண்டார். பின்னாளில் கருணாநிதியை வெல்லவும் அதே ஆயுதத்தைப் பயன்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார். 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், இலவச மிக்ஸி, ஃபேன், முதியோர் உதவித்தொகை உயர்வு, திருமண உதவித்தொகை உயர்வு எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டது தி.மு.க.

ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி

ஆனால், 2006-ம் ஆண்டு முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாதிரி இந்த முறை செய்யவில்லை ஜெயலலிதா. தி.மு.க-வின் அறிக்கைக்காகக் காத்திருந்து, அதைவிடக் கூடுதலாக, இலவச மிக்ஸி, ஃபேன் மட்டுமல்லாமல் கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் எனப் பல அதிரடி அறிவிப்புகளை அள்ளி வீசினார். அது தேர்தலில் அவருக்குக் கைகொடுக்கவும் செய்தது. தொடர்ச்சியாக அந்த யுக்தியை பயன்படுத்திவந்தார். கருணாநிதியிடமிருந்து ஜெயலலிதா கற்றுக்கொண்ட வித்தையை, அ.தி.மு.க `அம்மா' விடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதை கருணாநிதியின் மகனை வெல்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தவிருக்கிறார். இதைத்தான், துணை முதல்வர் ஓ.பி.எஸ், ``அம்மா வழியில் அண்ணன்’’ எனப் புகழாரம் சூட்டினாரோ என்னவோ... ஆனால், தேர்தல் அறிக்கையைத் தாண்டி தேர்தலில் வெற்றிபெற மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியது அவசியம்... ஆளும் அ.தி.மு.க அதைப் பெற்றிருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு