Published:Updated:

ஆடியோ, வீடியோ விவகாரங்கள்... அலறும் தமிழக பாஜக!

தமிழக பாஜக அண்ணாமலை - கே.டி.ராகவன்
தமிழக பாஜக அண்ணாமலை - கே.டி.ராகவன்

`தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைப்போம்’ என்று முழங்கிக்கொண்டிருந்த பா.ஜ.க-வின் தலைவர்கள் தொடர்பான ஆடியோ, வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படித் தொடர்ச்சியாக பாலியல் புகார்களும் சர்ச்சைகளும் வெளியாவதன் பின்னணி என்ன?

தமிழக பாஜக தலைவர்கள் மீதான பாலியல் புகார்கள்தான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றன. கமலாலயத்தைச் சுற்றி அரசல் புரசலாக இருந்த பாலியல் புகார்கள், தற்போது வீடியோவாகவும் ஆடியோவாகவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், அண்ணாமலை குறித்த ஆடியோக்கள் வெளியாகியிருப்பது தமிழக பாரதிய ஜனதாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோ வெளியானபோது ’கே.டி.ராகவனைக் கட்சியிலிருந்து நீக்க அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்’ என விமர்சனம் செய்தவர்கள் அண்ணாமலையின் ஆடியோ வெளியானபோது ‘இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே’ என்றரீதியில் அண்ணாமலைக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி என முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
நரேஷ்

ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் இருந்தவர்கள், ‘அடுத்து யாருடைய ஆடியோ வீடியோ வெளியாகும்... அதை எப்படி எதிர்கொள்வது’ என்ற பீதியில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்குள் என்ன நடக்கிறது... அங்கிருக்கும் தலைவர்களுக்கு என்னதான் ஆச்சு என பா.ஜ.க-வின் சில சீனியர் தலைவர்களிடம் விசாரித்தோம்...

ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்

``பெண் விவகாரத்தில் பல நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நூற்றுக்கணக்கில் புகார்கள் வந்திருப்பதால், மேலிடத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஒரு தலைவர் மீது மட்டும் 134 புகார்கள் வந்துள்ளன’ என பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி அதிர்ச்சியைக் கிளப்பினார். மேலும் `இனிமேல் தமிழக பா.ஜ.க தலைவர்கள் யாரும் நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கக் கூடாது. அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கக் கூடாது’ எனவும் கடிந்துகொண்டவர் ‘மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் எச்சரித்தார் எனத் தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. தனியார் நாளிதழில் இப்படி ஒரு செய்தி வெளியாகக் காரணமாக கே.டி.ராகவன் இருந்திருக்கிறாராம். அப்போது தலைவராக இருந்தவருக்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதைத் தடுக்கவே அவர் இவ்வாறு செய்திருக்கிறார் எனப் பேச்சு. ஆனாலும் அந்தப் புகாரைக் கண்டுகொள்ளாத டெல்லி மேலிடம் அவருக்கு மத்தியில் அமைச்சர் பதவியைக் கொடுத்துவிட்டது” என்றவர்கள், தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு எதிராகவும் டெல்லியில் பல புகார்களை சில மூத்த தலைவர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

அண்ணாமலை  - கே.டி ராகவன்
அண்ணாமலை - கே.டி ராகவன்

``அண்ணாமலையும், தற்போது மத்திய அமைச்சர் பதவி கிடைத்த முன்னாள் தலைவரும் தமிழக பா.ஜ.க-வில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தை ஒடுக்கினால்தான் தாங்கள் நிலைக்க முடியும் என முடிவு செய்தனர். அதன் முதற்கட்டமாக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஓரங்கட்டப்பட்டார். அதற்கடுத்து அவர்களுக்குப் பெரிய இடைஞ்சலாக இருந்தது கே.டி.ராகவன்தான். அவரை ஹெச்.ராஜா மாதிரி ஓரங்கட்டாமல் நிரந்தரமாகக் கட்சியிலிருந்து விலக்க நினைத்தார்கள்” என்றவர்கள்,

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ... கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆடியோவில் அண்ணாமலை சொல்வதுபோல அரசியலிலிருந்து அவரை முழுவதுமாக ஓரங்கட்ட பாலியல் புகாரைக் கிளப்புவதுதான் சரி என முடிவு செய்து இந்த வீடியோ நாடகத்தைக் கச்சிதமாக அரங்கேற்றிவிட்டார். அரசியலில் தங்களுக்கு எதிரியாக இருந்த கே.டி.ராகவனை முற்றாகக் கட்சியிலிருந்து நீக்க பா.ஜ.க முன்னாள் தலைவரும், இன்னாள் தலைவரும் போட்ட ஸ்கெட்ச்சில் கே.டி.ராகவன் கச்சிதமாக மாட்டிக்கொண்டார். இதனால், தங்களுக்குக் குடைச்சலைக் கொடுத்த கே.டி.ராகவனைக் கட்சியிலிருந்து நீக்கியதோடு அதே சமூகத்தின் பிற தலைவர்களையும் அடக்கிவிட்ட நிம்மதியில் இருக்கிறார்கள்” என்றவர்களிடம், அண்ணாமலை ஆடியோ வெளியானது யார் போட்ட ஸ்கெட்ச் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

``அண்ணாமலைக்குக் கட்சியை நன்றாகக் கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. அதனால், தன்னுடன் பழகும் எல்லோரையும் நம்பி பிரச்னைகளைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார். அரசியலுக்குப் புதியவர் இல்லையா... அதனால் யாரிடம் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியவில்லை. அது அவருக்கு அவரே போட்டுக்கொண்ட ஸ்கெட்ச் மாதிரிதான் இருக்கிறது” என நழுவினார்கள்.

கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?

அண்ணாமலை ஆடியோ வெளியானதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``அண்ணாமலைக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டது ஒரு முக்கியப் புள்ளிதான். கொங்குப் பகுதி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற ஆசையிலிருக்கும் அவருக்கு, அதற்கு அண்ணாமலை இடையூறாக இருப்பார் என்ற எண்ணமும் உண்டு. அதனால் அவரை காலி செய்யத் திட்டமிட்டவர், அவருக்கு எதிராகவும் சில விஷயங்களைத் திரட்டத் தொடங்கினார். இயல்பாக அண்ணாமலை இடமறிந்து பேசத் தெரியாதவர் என்பது அவருக்குச் சாதகமாகவும், இவருக்குப் பாதகமாகவும் மாறிவிட்டது.

கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, எடப்பாடி என நான்கு பேர் இருக்க, அண்ணாமலை ஐந்தாவது பெரிய தலையாக உருவெடுப்பதில் அ.தி.மு.க-வினருக்கும் உறுத்தல் இருக்கத்தான் செய்தது. எனவே அவர்களும் இதை ரசிக்கவே செய்கிறார்கள்” என்றவர்கள்...

``தி.மு.க-விலோ ஸ்டாலினுக்கு எதிராக வளர்ந்துவிடுவார்களோ என விஜயகாந்த், சீமான், அன்புமணி ஆகியோரை காமெடி செய்து டம்மி ஆக்கியதுபோல, உதயநிதிக்கு எதிராக அண்ணாமலை உருவாகிவிடுவார் என்பதால் அவரை காமெடி செய்து டம்மி ஆக்க முயன்றுவருகிறார்கள். அதற்கு இந்த ஆடியோவும் உதவி செய்வதால் அவர்களுக்கு அதில் ஏக குஷிதான். எனவே இது கே.டி.ராகவனுக்கு எதிரானது இல்லை. ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு எதிரான ஸ்கெட்ச்” எனச் சில காரணங்களை அடுக்கினார்கள். ``ஏற்கெனவே மக்களைவிட்டு மிகத் தூரமாகச் சென்றுவிட்ட பா.ஜ.க இப்படியான விஷயங்களால் இன்னும் விலகிச் சென்றுகொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

தமிழக பாஜக
தமிழக பாஜக
நரேஷ்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் நாடகங்கள் என்னென்ன, அவற்றில் யாரெல்லாம் சிக்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு