Published:Updated:

`ஓ.பி.எஸ் மீது எனக்கு மரியாதை அதிகம்!'- ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த விளக்கம்

`நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன்.'

குருமூர்த்தி
குருமூர்த்தி

திருச்சியில் நேற்றிரவு நடந்த துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, ``சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபோது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார். இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவர் சொன்னபோது, அப்போது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம். இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை. பல சமயங்களில் அ.தி.மு.க-வின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால்தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா.. நீ ஆம்பளையா.. என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்" என்றார்.

ரஜினிக்கு... கிருஷ்ணராக மாறுகிறாரா குருமூர்த்தி?- ராஜகுருவின் லாஜிக் அரசியல்!

தொடர்ந்து சர்ச்சையாகப் பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து குருமூர்த்தி தற்போது ஒரு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `ஓ.பி.எஸ்-ஸிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அ.தி.மு.க-வினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அ.தி.மு.க-வை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே `ஜெயாவை ஆதரித்த துக்ளக்.. அவரை ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல' என்று கூறினார். இதற்குப் பதில் கூறும்போது ஓ.பி.எஸ் சந்திப்பு, அவர் எப்படி அ.தி.மு.க-வை மீட்டார் என்று கூறினேன். எனவே, முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்துப் பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அ.தி.மு.க-வில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பி.எஸ் மேல்தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து' என விளக்கம் கொடுத்துள்ளார்.

Vikatan