Published:Updated:

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

ஆடிட்டர் குருமூர்த்தி

முன்பெல்லாம் கருணாநிதியா, ஜெயலலிதாவா எனத் தலைவர்களுக்குள் போட்டி நடக்கும். இதுவரைக்கும் தலைவர்கள்தான் முன்னிற்பாங்க. இப்போது கட்சி ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது.

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

முன்பெல்லாம் கருணாநிதியா, ஜெயலலிதாவா எனத் தலைவர்களுக்குள் போட்டி நடக்கும். இதுவரைக்கும் தலைவர்கள்தான் முன்னிற்பாங்க. இப்போது கட்சி ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது.

Published:Updated:
ஆடிட்டர் குருமூர்த்தி
தேர்தல் பரபரப்பு இருக்கற நேரத்தில் என்னைப் போய் பார்க்க வந்திருக்கீங்களே’’ என்று சொல்லிச் சிரித்தபடி நம் கேள்விகளுக்குத் தயாரானார் ஆடிட்டர் குருமூர்த்தி. பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர் என அடையாளங்கள் கொண்டவர். நேரடி அரசியலில் இறங்காவிட்டாலும், தமிழக அரசியல் வட்டாரங்களில் எப்போதும் அடிபடும் பெயர். ரஜினி முதல் சசிகலா வரை எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் இருக்கிறது பதில்.
“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

‘`கூட்டணிகள் முடிவாகிவிட்டன. எப்படி இருக்கும் தேர்தல் களம்?’’

‘`தமிழகத்தில் முதல்முறையா இப்போதுதான் கட்சி-கூட்டணிகளுக்குள் போட்டி என்று வந்திருக்கு. முன்பெல்லாம் கருணாநிதியா, ஜெயலலிதாவா எனத் தலைவர்களுக்குள் போட்டி நடக்கும். இதுவரைக்கும் தலைவர்கள்தான் முன்னிற்பாங்க. இப்போது கட்சி ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது. எடப்பாடியை அ.தி.மு.க முன்னிறுத்துகிறது. ஸ்டாலினை தி.மு.க முன்னிறுத்துகிறது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் தங்கள் கட்சியைத் தாண்டி ஓட்டுகளை ஈர்க்கும் ஆளுமை இருந்தது. அடுத்தவர்களின் சரி, தவறுகளைக் கூறி மக்கள் ஆதரவைத் திருப்ப முடிந்தது. அது இப்போது இல்லை. எடப்பாடியால் அ.தி.மு.க-வுக்கோ, ஸ்டாலினால் தி.மு.க-வுக்கோ ஒரு எக்ஸ்ட்ரா ஓட்டு வராது. இது தலைவர்கள் முன்னின்று நடத்தாத தேர்தல். இதுதான் தமிழக அரசியலில் நடந்திருக்கும் மிகப்பெரிய மாற்றம்.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``ஆனால், ‘ஸ்டாலின்தான் வாராரு’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி தி.மு.க பிரசாரம் செய்யுதே?’’

‘`ஆளுமை என்பது விளம்பரத்தாலோ, கட்சியே ஒரு ஆளை முன்னிலைப்படுத்துவதாலோ வராது. ஆளுமை இயற்கையானது. ஒரு தலைவரை உருவாக்க முடியாது, அவர் தானாக உருவாகணும். ஆளுமை உள்ள ஒருவரை யாரும் அடையாளப்படுத்தவில்லை என்றாலும்கூட, வாய்ப்பு வரும்போது அவர் தானாக தலைமைக்கு வந்துவிடுவார். எம்.ஜி.ஆர் அப்படித்தான் வந்தார்.’’

``எடப்பாடி பழனிசாமி இப்போது தன்னை ஓர் ஆளுமையாக உருவாக்கிக்கொண்டார் எனக் கருதுகிறீர்களா?’’

‘`சார், எடப்பாடி எனக்கே ஓர் ஆச்சர்யம்தான். ஸ்டாலினாவது இத்தனை ஆண்டுகளாக முன்னிலைப்படுத்தப்பட்டு மேலே வந்தார். அவருக்கு இன்னும் முன்பே கருணாநிதி வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். கருணாநிதி தன் வாழ்நாளிலேயே கட்சி என்ற சொத்தை ஸ்டாலினுக்குக் கொடுத்திருக்கலாம். தாமதமாகத் தலைமைக்கு வந்தாலும், எல்லா சீனியர்களையும் சமாளித்துக் கட்சியைக் காப்பாற்றிவிட்டார். எடப்பாடியை திடீரென்று அடையாளம் கண்டு முதல்வர் ஆக்கினார்கள். இந்த நான்கு வருஷங்களில் கட்சிக்குள்ளும், வெளியிலும் அவர் தனக்கென ஓர் இடத்தைப் பிடிச்சிருக்கார். அதில் சந்தேகமே இல்லை.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் விஷயத்தில் உங்களுக்குத் தோல்விதானே?’’

‘`வெளியில் எல்லோரும் நான் ரஜினியை அரசியலுக்குள் வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றதாகப் பேசுகிறார்கள். அது உண்மை இல்லை. ‘நீங்க அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னது நான்தான். ‘உங்கள் உடல்நிலையைப் பாருங்கள். அரசியல் நெருக்கடிகள் தரும் அழுத்தத்தை உங்களால் தாங்க முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். அவரை எப்படியாவது அரசியலுக்கு இழுக்க வேண்டும் என நிறைய பேர் பேசினார்கள். நான் அப்படிப் பேசவில்லை. அரசியலுக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்று அவரிடம் பேசியிருக்கிறேன். அவர் இப்போதும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார். எந்தெந்த நேரத்தில் அவருடன் என்ன பேசினேன் என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவது நன்றாக இருக்காது. ஒருவேளை ரஜினியிடம் என்றைக்காவது யாராவது கேட்டால், இந்த உண்மையை அவர் சொல்லக்கூடும்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அவர் அறிவித்தது எனக்கே ஆச்சர்யம். அதுதான் உண்மை. 2020 நவம்பர் 21-ம் தேதி அமித் ஷா சென்னை வந்தபோது அவரை நான் சந்தித்தேன். ‘ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்’ என்றுதான் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால், 25-ம் தேதி ரஜினி எனக்கு போன் செய்து ‘கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்’ என்றார். அப்போதும் நான், ‘இது உங்கள் முடிவு. இந்த முடிவில் யாருக்கும் பங்கு கிடையாது’ என்றுதான் சொன்னேன்.

அடுத்த மாதமே உடல்நிலை காரணமாக அவர் அரசியலை விட்டு விலகுவதாக முடிவு எடுத்தபோது எனக்கு வியப்பில்லை. அப்போதும் என்னிடம் பேசினார். உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தபோதே, இப்படித்தான் ஆகும் என எதிர்பார்த்தேன். அது நடந்தது. இப்போதும் ரஜினியும் நானும் அடிக்கடி அரசியல் பற்றிப் பேசுகிறோம். அவர் வந்திருந்தால் தமிழக அரசியல் மாறியிருக்கும் என்பது உண்மை.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``சசிகலா அரசியலை விட்டு விலகியதில் உங்கள் பங்கு என்ன?’’

‘`சசிகலாவை அரசியலிலிருந்து விலக வைப்பதில் எனக்கு ஒரு ரோல் இருந்தது என்று சொல்வது தவறு. ‘அ.தி.மு.க-வின் ஒரு பிரிவுக்குத் தலைவராக இருப்பதா, அல்லது, முழுமையான அ.தி.மு.க-வுக்குத் தலைவராக இருப்பதா’ என்பதில் அவர் மனதில் ஒரு குழப்பம் இருந்தது. ‘சிறையிலிருந்து விடுதலையானதும் அ.தி.மு.க கொடியோடு திரும்பி வந்தால், கட்சியில் ஒரு குழப்பம் வரும், தன்னை எல்லோரும் தலைவியாக ஏற்றுக்கொள்வார்கள்’ என்று அவர் நினைத்திருக்கலாம். அவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, ‘அ.தி.மு.க கலகலத்துவிடும்’ என்று பத்திரிகைகளே எழுதின. அவருக்கு ஆலோசனை கொடுத்தவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், வட்டச்செயலாளர் மட்டத்தில்கூட யாரும் சசிகலா பக்கம் போகவில்லை. அதனால் அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது. அவங்க ஒரு ரிஸ்க் எடுத்தாங்க. அது எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. அதனால் இப்படி முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இவர் இப்படித்தான் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என என்னால் கணிக்க முடிந்தது. அவருக்கு வேறு வழியில்லை. அந்த நேரத்தில் அவர் பல பேரிடம் பேசியிருக்கலாம். அவர் குடும்பத்திலிருந்து என்னிடம்கூடப் பேசினார்கள். அவர் சார்பிலும் பேசினார்கள். நான் இந்த விஷயத்தில் ஈடுபடவில்லை. ஈடுபட விரும்பவும் இல்லை. அவர் முடிவை வரவேற்கிறேன். ஆனால் அவர் இந்த முடிவை எடுக்க நான் காரணமில்லை, நான் எடுக்க வைக்கவில்லை.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் இணைந்திருந்தால் வலுவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா?’’

‘`அ.தி.மு.க-வில் இருக்கும் பெரும்பாலான தொண்டர்கள் சசிகலா குடும்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் உண்மை. சசிகலா பொதுச்செயலாளரானபோது ‘இந்தக் கட்சியை அவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று என் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டவர்கள் உண்டு. ‘இந்தக் கட்சியை ஒரு குடும்பம் கைப்பற்றிக்கொண்டால் தமிழகம் என்ன ஆகும்’ என்ற பயம் எனக்கும் இருந்தது. இவர்களை அந்தக் கட்சி ஏற்கவில்லை. அரசியலில் ஏற்பு ரொம்ப முக்கியம். அது இல்லாமல் யாரும் தலைவராக உருவெடுக்க முடியாது.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``இதுவரை வந்திருக்கும் கருத்துக்கணிப்புகள் தி.மு.க வெற்றிபெறும் என்கின்றன. உங்கள் கணிப்பு என்ன?’’

‘`தி.மு.க-வுக்கு சாதகமான சூழல் இருப்பது நிஜம். ஆனால், எந்த அளவுக்கு சாதகமான சூழல் இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்களோ, அதைவிடக் குறைவாகவேதான் இருக்கிறது. இது எனக்குக் கிடைக்கும் தகவல். அதெல்லாம் பப்ளிஷ் பண்ற சர்வே கிடையாது. நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது தி.மு.க-வுக்கு நல்ல ஆதரவு இருந்தது. கடந்த ஓராண்டில் அது கணிசமாகக் குறைந்துவிட்டது. அ.தி.மு.க அரசு சுதாரித்துக்கொண்டு பல நல்ல முடிவுகளை எடுத்ததே காரணம். இன்னொரு காரணம் ஸ்டாலின். ‘இந்த ஆட்சி நிலைக்காது, கவிழ்ந்துவிடும்’ எனத் திரும்பத் திரும்ப ஸ்டாலின் சொன்னார். அவருடைய அந்தக் கணிப்புகளைத் தாண்டி இந்த ஆட்சி நிலைத்ததை ஸ்டாலினின் தோல்வியாக எல்லோரும் நினைத்தார்கள். தி.மு.க-வினர்கூட நினைத்தார்கள். ஒரு தலைவர் ஒரு விஷயத்தைச் சொல்லி நடக்கவில்லை என்றால், அது அவரை பலவீனமாக்கி விடும். 18 எம்.எல்.ஏ-க்கள் போனபிறகும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினால் முடியவில்லை. ‘ஸ்டாலின் செய்த எல்லா முயற்சிகளையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றார்’ என்பதே எடப்பாடிக்கு பலம் சேர்த்தது. எடப்பாடியின் பர்சனாலிட்டி வெளிப்படக் காரணமே, ஸ்டாலின் அவரை வீழ்த்த முடியாமல் போனதுதான்.’’

``காங்கிரஸ் 25 தொகுதிகள் பெற்றதை விமர்சனம் செய்கிறீர்கள். தமிழகத்தில் தாங்கள் வளர்ந்திருப்பதாகச் சொல்லும் பா.ஜ.க 20 தொகுதிகளைத்தானே பெற்றது?’’

‘`பா.ஜ.க இந்தத் தேர்தலை தனது வாழ்வா, சாவா தேர்தலாக நினைக்கவில்லை. நமக்கு எத்தனை எம்.எல்.ஏ-க்கள் கிடைப்பார்கள் என்றுதான் பார்க்கிறது. ‘இத்தனை இடங்கள் கிடைத்தால்தான் தனக்கு லைப்... பிடித்தால்தான் மரியாதை’ என நினைக்கவில்லை. பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியை வலுவாக்க நினைத்ததே தவிர, இத்தனை சீட்டுகளைப் பிடுங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்கள் 30 சீட் வேண்டுமென்று கேட்டிருந்தால், அ.தி.மு.க விரும்பாவிட்டாலும் மறுத்திருக்க முடியாது. ஆனால், பா.ஜ.க அதைச் செய்யவில்லை. அதை மானப் பிரச்னையாகவும் மாற்றவில்லை. காங்கிரஸ் கண்ணீர் விட்டு மானப் பிரச்னையாக மாற்றியது. அதனால்தான் கேள்வி வருகிறது.’’

``கமல் தனி அணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறாரே?’’

‘`அவர் இந்த இரண்டு கட்சிகளோடும் சேராமல் தனியாக, உறுதியாக நிற்கிறதே பெரிய விஷயம். ஆனால், ஒரு கட்சியை ஆரம்பிக்க நல்ல டீம் வேணும்; கட்சி அமைப்பை உருவாக்கும் திறமை வேணும். நீங்கள் பிரபலமாக இருப்பதாலேயே இதெல்லாம் வந்துவிடாது. இந்த இரண்டும் இல்லாமல் அரசியல் செய்வது கஷ்டம். ரஜினிக்கேகூட இந்தப் பிரச்னை இருந்தது. இது இல்லாமல்போனால் ஸ்ட்ரெஸ், டென்ஷன், பிரச்னைகள் வருமே தவிர, நல்ல ரிசல்ட் வராது.’’

“நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவில்லை!”

``தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?’’

‘`இந்தத் தேர்தலில் நிறைய தொகுதிகளில் அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் நின்றாலும், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தச் சூழலை வைத்து அமித் ஷா சொல்லியிருக்கலாம். ஆனால், கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு நல்லதல்ல. கூட்டணி ஆட்சிக்குத் தேவையான ஒழுங்கு இங்கு தலைவர்களிடம் இல்லை. அங்கும் இங்கும் இழுப்பார்கள். இன்னொரு பக்கம் குடும்பத்திலும் இழுப்பார்கள். அவர் சொல்வதைக் கேட்பதா, இவர் சொல்வதைக் கேட்பதா என்ற குழப்பம்தான் மிஞ்சும்.’’

``ரிசர்வ் வங்கி இயக்குநர், பா.ஜ.க-வுக்கு ஆலோசனை சொல்லும் ஆடிட்டர், பத்திரிகையாளர்... எது உங்கள் ரோல்?’’

‘`ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பிரச்னை இருந்தது. அப்போ மத்திய அரசின் கருத்தை அங்கு எடுத்துச் சொல்வதற்கு மதிக்கத்தக்க ஓர் ஆளுமை வேண்டும் என பிரதமர் மோடி நினைத்தார். அவர் கேட்டுக்கொண்டதால் அங்கு போனேன். நான் இதுவரை எங்கும் எந்தப் பதவியையும் எதிர்பார்த்ததில்லை; ஏற்றுக்கொண்டதும் இல்லை. ரிசர்வ் வங்கி இயக்குநர் என்பது பெரிய பதவி கிடையாது. நான் பா.ஜ.க ஆலோசகர் என்று சொல்வதும் சரியல்ல. பா.ஜ.க-வில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். மூன்று தலைமுறைத் தலைவர்களுக்குப் பழக்கம். நான் ஏதாவது சொன்னால் அதை ஒதுக்காமல் கேட்டுக்கொள்வார்கள். மதிப்பார்கள்; அதன்படி நடப்பார்கள் என்று அர்த்தம் அல்ல. மற்றபடி, அதை வைத்து நான் எனக்காக எதையும் செய்துகொண்டதில்லை. நான் எப்போதுமே பத்திரிகையாளர்தான். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில்தான் எழுதிவந்தேன். சோ என்னைத் தமிழில் எழுத வைத்தார். சோ மறைவுக்குப் பிறகு ‘துக்ளக்’கை நடத்திவருகிறேன். சோவுக்கும் எனக்கும் கருத்துரீதியாக முரண்பாடு இல்லை. மோடி தலைமையிலான மத்திய அரசை சோ ஆதரித்தார். நானும் ஆரம்பத்திலிருந்து ஆதரித்துவருகிறேன். 2001 முதல் தி.மு.க-வை எதிர்த்து அ.தி.மு.க-வை சோ ஆதரித்தார். நானும் அதையே செய்கிறேன். தி.மு.க ஒழிக்கப்பட வேண்டிய சக்தின்னு சோ சொன்னார். அதிலிருந்தும் நான் மாறவில்லை.’’

``குடும்பத்தலைவிகளுக்கு 1,000 ரூபாய் என்கிறார் ஸ்டாலின். 1,500 ரூபாய் என்கிறார் எடப்பாடி. ‘இலவசம் என்று கூறி ஏமாற்றுகிறார்கள்’ என்கிறார் சீமான். நீங்கள் இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகள் பக்கமா? சீமான் பக்கமா?’’

‘`குடும்பத்தலைவிகளுக்குப் பணம்னு ஆரம்பிச்சது கமல்ஹாசன்தான். அவர் சொன்னப்புறம் அசாம்ல காங்கிரஸ் தர்றதா சொன்னாங்க. தமிழ்நாடுதான் இந்த மாதிரி விஷயங்களை எப்பவுமே ஆரம்பிக்கும். இந்தத் தடவை கமல்ஹாசன் ஆரம்பிச்சிருக்காரு. ஓசி டிவி, ஓசி அரிசின்னு பழக்கிட்டாங்க. இலவசம் தர்ற நிலையில இப்ப தமிழ்நாடு இல்லை. ஏற்கெனவே நிறைய கடன் இருக்கு. அரசாங்கத்தின் பேர்ல கடன் வாங்கித் தேர்தல்ல ஜெயிக்கறது இப்ப வழக்கமாகிப்போச்சு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டு பேருமே இப்படித்தான் பண்றாங்க. இதுல நியாயம், நியாயமில்லைன்னு சொல்றதுக்கு என்ன இருக்கு?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism