மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் நடத்தப்படும் குமாரசபா புஸ்தகலாயா அறக்கட்டளை, 1990-ம் ஆண்டு முதல் 'டாக்டர் ஹெட்கேவார் பிரக்யா சம்மான்' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கு பங்களித்தவர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருதை, சமீபத்தில் பெற்றிருக்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பராசரன். இதற்கான விழா, டிசம்பர் 25-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு, ஆர்.எஸ்.எஸ் முன்னாள் பொதுச்செயலர் பையாஜி ஜோஷி, 'ஜோகோ' கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் விருதை வழங்கினர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் போன்ற பதவிகளை வகித்துள்ள பராசரனுக்கு தற்போது 96 வயதாகிறது. சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி வழக்கில், கடவுள் ராமரையும் ஒரு புகார்தாரராக இணைத்ததில் தொடங்கி, ராமரின் வழக்கறிஞராகவும் வாதாடியவர். இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் 2019-ல் தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு காரணமான பராசரனை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுவதாக விழாவில் பேசிய பையாஜி ஜோஷி தெரிவித்தார்.
ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் சம்பத் ராய், ‘5000 ஆண்டுகால ஸ்ரீ ராம ஜென்ம பூமி வழக்கின் நடவடிக்கைகள் எப்படி நடந்தன’ என்பதை எடுத்துரைத்ததோடு, ‘வெற்றி என்பது நமது இந்து கலாசாரத்தின் வெற்றியே தவிர இது கோயில் சண்டை அல்ல. இது இந்துஸ்தானின் பெருமை’ என்றார்.

பையாஜி ஜோஷி, டாக்டர் ஹெட்கேவாருடன், பராசரனிடம் காணப்படும் ஒற்றுமைகளை எடுத்துரைத்தார். இறுதியாக பராசரன் பேசுகையில், "இந்த வழக்கில் நான் ஒரு கருவிதான். கடவுள் ராமர்தான் என்னை வழிநடத்தினார். சம்பத் ராய் எனக்கு பல ஆவணங்களை வழங்கி, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க உதவினார்" என பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.