Published:Updated:

`அயோத்தி தீர்ப்பு'- அடுத்து என்ன நடக்கும்?

இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்த அயோத்தி வழக்கில், இந்து அமைப்புகளுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி என்ன நடக்கும்?…

அயோத்தி
அயோத்தி

`அயோத்தியில் காலியான இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. மசூதிக்கு அடியில் இருக்கும் கட்டிட வேலைபாடுகள் இஸ்லாமிய கட்டிடக்கலை அல்ல’ என இந்திய தொல்லியல்துறை அறிக்கை அளித்துள்ளது. இக்கருத்தை புறந்தள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனடிப்படையில் பார்த்தால், பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே, அந்த இடத்தில் வேறொரு கட்டடம் இருந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேவேளையில், 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அயோத்தி
அயோத்தி

‘ராமஜென்மபூமியில்தான் ராமர் பிறந்து வளர்ந்தார்’ என்கிற இந்துக்களின் நம்பிக்கையை புறந்தள்ளமுடியாது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சன்னி வஃக்பு வாரியம், ஷியா வாரியம், நிர்மோகி அகாராவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உத்தரவிட்டுள்ளது. இனி என்ன நடக்கும்?…

1. மூன்று மாதத்திற்குள் இத்தீர்ப்பை அமல்படுத்த தேவையான திட்டத்தை மத்திய அரசு வகுத்து செயல்படுத்தும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கும், அயோத்தியிலேயே மற்றொரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கும் வழிபாட்டிற்காக ஒதுக்கப்படும். இதற்கான பணிகளை மத்திய அரசு இனி செய்ய வேண்டும். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்.

2. ராமர் கோவில் கட்டுவதற்கு 'அயோத்தி அறக்கட்டளை' உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த அறக்கட்டளையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? என்பது மத்திய அரசு அறிவிக்கும்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

3. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் யார் மறுசீராய்வுக்குச் சென்றாலும், ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இத்தீர்ப்பை ஒருமனதாக வழங்கியுள்ளதால், அதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பது சிரமம் தான்.

4. பி.ஜே.பி.யின் தேர்தல் வாக்குறுதியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிரதானமாக இடம்பெற்றுள்ளதால், அக்கட்சிக்கு இத்தீர்ப்பு வலு சேர்க்கும்.