அயோத்தியா மண்டபம்:
கடந்த 1954-ம் ஆண்டு, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் பொதுமக்களின் நன்கொடையாலும், காணிக்கைகள் மூலமும் செயல்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டுவந்தது. இந்த அமைப்பில் நிதி முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் அடிப்படையில், கடந்த 2013-ம் ஆண்டு இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த தனி நீதிபதி வேலுமணி, அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறி, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த அமைப்பின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகவன ஈர்ப்பு தீர்மானம்:
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ``ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தேர்தல் மூலம் தேர்வாகும் நிர்வாகிகளைக்கொண்டு நடத்தப்படுகிறது. எந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்களாலும் நடத்தப்படவில்லை" என்று கூறப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ``அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவை, தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று பேசினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். மேலும், எந்த இடைக்காலத் தடையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்கள்.
நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அயோத்தியா மண்டபம் விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், `மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபம், சட்டவிரோதமாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருப்பதாக’ சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ``கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தே புகார்கள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு விசாரணையில் இந்து அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டது தெரியவந்தது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தச் சென்றனர். அப்போது அங்கிருந்த 50-ம் மேற்பட்டோர் கூட்டம் கூடி, பூட்டுப்போட முயன்றனர். பாஜக தலைவர் தலைமையில் அங்கு கூட்டம் கூடினார்கள்" என்று பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாஜக-வுக்கு முதல்வர் அட்வைஸ்:
தொடர்ந்து பேசியவர், `` ஒருசிலர் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டார்கள். மாவட்ட ஆட்சியருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தாசில்தார் மூலம் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது. அங்கே உள்ள திருமண மண்டபம், காரிய கொட்டகையில் அதிக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. இந்தியாவிலே ஏ.சி வசதியுடன்கூடிய காரிய கொட்டகை அங்கேதான் உள்ளது. அங்கே சிலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ராமர், சீதை, அனுமன் சிலைகள் இருந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மாய பிம்பத்தை ஏற்படுத்தி, குளிர்காய நினைத்தால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முதல்வர் அஞ்ச மாட்டார்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், `` இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மிகவும் விளக்கமாகப் பேசியுள்ளார். பாஜக உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள். நமது மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியைப் பற்றி நான் மத்திய அமைச்சர்களிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அதற்கு ஆதரவாக இருந்து அதைப் பெறும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். தேவையில்லாமல் இதிலே அரசியலைப் புகுத்தி அதன் மூலம் உங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``ஒரு தனியார் அமைப்பின் கீழ் உள்ள மண்டபத்தின் பிரச்னைக்கு பாஜக ஏன் வரிந்துகட்டிக்கொண்டு வந்து நிற்க வேண்டும்... அவர்கள் இந்துக்கள் அதனால் வருகிறோம் என்று சொன்னால், வன்னியர் மண்டபத்திலும், நாடார் மண்டபத்திலும் பிரச்னை ஏற்படும்போது அவர்கள் வந்தார்களா... அவர்களும் இந்துக்கள்தானே... இந்த மண்டப விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ததும், நீதிமன்றம் சென்றதும் அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான். ஜெயலலிதாவை யாரும் குற்றம் சொல்வதே கிடையாதே... என்ன காரணம்?"

அன்று ஜெயலலிதா இந்த மண்டபத்தில் எதுவும் நடக்க விட மாட்டேன் என்று சொன்னார். இன்றைய திமுக அரசு பூஜை முதல் அங்குள்ள பள்ளி, திருமண மண்டபம் வரை அனைத்தையும் செயல்படுத்த அனுமதித்திருக்கிறது. அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணம் முதல் கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் வரை திமுக அரசு திறம்படச் செய்துவருவதை அனைவரும் அறிவார்கள். அந்த மண்டபத்தில் நிதி மோசடி நடைபெற்றது என்று புகார். அந்தப் புகாரைக் கூறியதும் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர்தான். மேலும், இப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை எடுத்திருக்கிறது. இப்படிக் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜக கைவிடவேண்டும்" என்று பேசினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``பாஜக என்ன செய்ய வேண்டும் என்றும் எப்படிச் செய்ய வேண்டும் என்றும் திமுக அறிவுரை சொல்லும் அளவுக்கு இப்போது எதுவும் ஆகிவிடவில்லை. `திமுக அரசியல் செய்கிறது’ என்று சொன்னபோது, `அரசியல்தான் செய்ய முடியும்... பிறகு அவியலா செய்ய முடியும்?’ என்று கூறிய திமுக, இப்போது பாஜக-வை அரசியல் செய்கிறது என்று குற்றம்கூறுகிறது. திமுக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, இந்துக்களின் அமைப்புகளின் மீதும், இந்து இயக்கங்களின் மீதும் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.

தமிழகத்தில் பாஜக அடக்க முடியாத ஒரு பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. இதை நன்கு அறிந்துகொண்ட திமுக, பாஜக-வை ஒடுக்குவதற்கான வேலையைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. அரசு நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. அரசு தன்னுடைய அடக்குமுறையை அவிழ்த்துவிடும்போது அதை எதிர்த்து போராட்டத்தானே செய்ய வேண்டும்... அதைத்தான் பாஜக செய்தது. பாஜக அனைவருக்குமான கட்சி. யாருக்குப் பிரச்னை என்றாலும் பாஜக வந்து நிற்கும். எதையாவது பேச வேண்டும் என்று பேசக் கூடாது" என்று கூறினார்.