Published:Updated:

அயோத்தி தீர்ப்பு!- தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

அயோத்தி
அயோத்தி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததை அடுத்து இன்று அதன் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து நாட்டில் உள்ள பல தலைவர்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்:

அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பு இந்தியாவின் சமூகத் துணிவை மேலும் பலப்படுத்தும். இதைச் சமநிலையுடன் எடுத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ராகுல் காந்தி :

அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை மதித்து, நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இந்தியர்களாகிய நாம் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய நேரம் இது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் :

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது. விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல் சமமான சிந்தனையுடன் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் :

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரசத் தீர்ப்பாகவே தெரிகிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவக் கூடாது. இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது.

சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

நடிகர் ரஜினிகாந்த் :

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் இணைந்து பாடுபட வேண்டும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வத் :

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குக்குச் சரியான முடிவு வந்துள்ளது. இது யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரது முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.