Published:Updated:

``தேசபக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது!" - அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வழங்கியுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகி மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு

`பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? #AyodhyaVerdict

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ``அயோத்தி வழக்கு விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை. ராம பக்தியோ அல்லது ரஹீம் பக்தியோ தேசபக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. நாட்டு மக்கள் அனைவரும் அமைதியையும் ஒற்றுமையையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்

உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், எந்த ஒரு சர்ச்சையையும் உரிய சட்டத்தின் கீழ் இணக்கமாகத் தீர்க்க முடியும் என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது. இது நமது நீதித் துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் காட்டியுள்ளது.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் இன்று உச்சநீதிமன்றம் இணக்கமான முடிவு வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாதங்களை எடுத்துவைக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச்செய்யும்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்

இன்றைய தீர்ப்புக்குப் பிறகு 130 கோடி இந்திய மக்கள் அமைதியைப் பேணிக்காத்து வருகின்றனர். இது இந்திய மக்களின் உள்ளார்ந்த உறுதியை வெளிப்படுத்துகிறது. மக்களின் இந்த ஒற்றுமை நம் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.