Published:Updated:

ஒன் பை டூ: உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

வாக்கு எண்ணிக்கையையாவது முறையாக நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம்

பிரீமியம் ஸ்டோரி

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கும் இந்தக் கருத்து மிகவும் சரியானது. இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்த முடிவெடுத்தபோதே நாங்கள் அதை எதிர்த்தோம். நாங்கள் அச்சப்பட்டதுபோல பல்வேறு முறைகேடுகளுடன்தான் இந்தத் தேர்தல் முடிந்திருக்கிறது. தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களில், 12.9.2021-க்கு முன்பு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் பத்தாயிரம் பேரை புதிய வாக்காளர்களாகச் சேர்த்திருக்கிறார்கள். அதனால்தான், முதற்கட்டத் தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் இவ்வளவு வாக்குகள் பதிவானதே இல்லை. அதுமட்டுமல்ல... வாக்குப்பதிவின்போதும் பல்வேறு முறைகேடுகள், அத்துமீறல்கள், அராஜக நடவடிக்கைகளில் தி.மு.க அரசு ஈடுபட்டது. உதாரணத்துக்கு, திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் மாலை 4:45 மணிக்கே வாக்குப்பதிவு மையத்தின் கேட்டை பூட்டிவிட்டார்கள். அங்கு 600 பேருக்கும் மேல் வாக்களிக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், எங்கள் கட்சியில் நன்றாக வேலை செய்யக்கூடியவர்களைத் தேடிப்பிடித்து காவல்துறையினர் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவிவகிக்கும் எங்கள் கட்சியின் ராஜசேகர் என்பவர் இந்த முறை வென்றுவிடக் கூடாது என்பதற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். மாமல்லபுரம் அருகே பூந்தண்டலத்தில் வாக்குச்சீட்டில் குளறுபடிகள் நடந்துள்ளன. இவ்வளவு முறைகேடுகள் நடந்திருப்பதால்தான், வாக்கு எண்ணிக்கையையாவது முறையாக நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம்!’’

பாபு முருகவேல்
பாபு முருகவேல்
இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“தோல்வி பயத்தில்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்துவதற்கு பயந்த இயக்கம்தான் அ.தி.மு.க. இந்தத் தேர்தலையேகூட தி.மு.க-வும், பல தன்னார்வலர்களும் நீதிமன்றப் படியேறித்தான் நடத்த முடிந்தது. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தவுடனேயே தோல்வி பயத்தில், ‘இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்’ என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால், அ.தி.மு.க-வின் கூட்டணிக்கட்சி ஆட்சியிலுள்ள புதுச்சேரியில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த அறிவிப்பு வந்தபோது வாய் திறக்காமல் அமைதி காத்தார்கள். நிர்வாக வசதிக்காக இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதையும் தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கிறது. அதேசமயம், ஒரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்கொள்ளவும் தி.மு.க தயாராகவே இருந்தது. தேர்தல் நடைபெற்ற பல பூத்களில், அ.தி.மு.க-வினரின் அராஜகத்தை எதிர்த்து தி.மு.க-வினர் போராடியிருக்கிறார்கள். சிறு சிறு சம்பவங்களை, தனிநபர் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த தேர்தலே முறைகேடாக நடந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்களுக்கு பதிலளிக்கவேண்டியது, அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்கவேண்டியது மாநிலத் தேர்தல் ஆணையம்தான்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு