Published:Updated:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்படி எதிர்கொள்வது? - ஆளுநரின் `திடீர்’ டெல்லி விசிட் பின்னணி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தையும் நேரில் சந்தித்துப் பேசினார் முருகன். முதல்வர் எடப்பாடியின் ரியாக்‌ஷன் சரியில்லை என்பதாலேயே, கவர்னர் காதில் விஷயத்தைப் போட்டிருக்கிறார் முருகன்.’

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், திடீரென இன்று (4.11.20) டெல்லிக்குப் போயிருக்கிறார். பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கப்போகிறார். நவம்பர் 6-ம் தேதியன்று பி.ஜே.பி தலைவர் முருகன், திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க நாள் குறித்தார். ஆனால், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யாத்திரைக்கு அனுமதிக் கூடாது என்று குரல் கொடுத்துவருகின்றனர். தமிழக அரசு இதுவரை யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. அதை வலியுறுத்தி, நேற்று (நவம்பர் 3) பி.ஜே.பி தலைவர் முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்.

எல்.முருகன்
எல்.முருகன்

அதேநாளில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தையும் நேரில் சந்தித்துப் பேசினார் முருகன். முதல்வர் எடப்பாடியின் ரியாக்‌ஷன் சரியில்லை என்பதாலேயே, கவர்னர் காதில் விஷயத்தைப் போட்டிருக்கிறார் முருகன். யாத்திரை அனுமதி விஷயத்தில் கவர்னர்,`தகுந்த பாதுகாப்பு கொடுத்து சில கன்டிஷன்களைப் போட்டு தமிழக அரசு யாத்திரைக்கு அனுமதிக்கலாமே...' என்றுதான் நினைக்கிறாராம். ஆனால், முதல்வர் பழனிசாமி அதை விரும்பவில்லை. தமிழக உயரதிகாரிகளிடம் கவர்னர் தரப்பில் பேசப்பட்டதாம். யாத்திரையை அனுமதித்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள்.

வேல் யாத்திரை: எம்.ஜி.ஆர் புகைப்பட சர்ச்சை... முற்றுகிறதா பா.ஜ.க Vs அ.தி.மு.க மோதல்?

பிரதமர் மோடி கொரோனா பரவலைச் சுட்டிக்காட்டி கூட்டம் கூடக் கூடாது என்கிறார். ஊரடங்கை நவம்பர் வரை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு நீடித்திருக்கிறது. தமிழக அரசும் அதேபோல் நீடித்திருக்கிறது. ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர் முருகனோ, பிரதமர் மோடியின் உத்தரவுக்கு எதிராக நடந்துவருகிறார். கொரோனா அதிகமாக பரவிக்கொண்டிருந்த நேரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு முதல்வரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால், அனுமதி தரப்படவில்லை. அதேபாணியில் இப்போது மீண்டும் அனுமதி கேட்கிறார்.

கொரோனா பரவல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்பதில் முதல்வர் எடப்பாடி உறுதியாக இருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை கவர்னர் பன்வாரிலால் ஏற்கவில்லையாம். யாத்திரை விஷயத்தில் கவர்னருடன் முதல்வருக்கு மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. `நாளை (நவம்பர் 5) முருகனின் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். தொடர்ந்து முதல்வர் பழனிசாமி முரண்டு பிடிப்பதால், அடுத்து என்ன செய்வது?’ என்பது குறித்து ஆலோசனை நடத்தவே கவர்னர் பன்வாரிலால், டெல்லிக்குப் போயிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஏற்கெனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 7.5% ஒதுக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். அதற்கு முறைப்படி கவர்னரின் ஒப்புதல் தேவை. ஆனால், நாள்கள் பல ஆகியும் தனது முடிவை அறிவிக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தார் கவர்னர். வேண்டுமென்றே கவர்னர் காலதாமதம் செய்வதாக நினைத்த முதல்வர் பழனிசாமி, அதிரடியாக உள் ஒதுக்கீடு செய்ய அரசாணையை வெளியிட்டார். அதிர்ந்துபோன கவர்னர், வேறு வழியில்லாமல், அதே நாளில் ஒப்புதலைக் கொடுத்தார். இந்த விஷயத்தில் முதல்வர் பழனிசாமி எரிச்சலுட்டும் வகையில் நடந்துகொண்டதாக கவர்னர் ஏகத்துக்கும் கோபமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனை..! அமைச்சர்கள் - ஆளுநர் சந்திப்பின் பின்னணி

ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். தீர்மானத்துக்கு ஒப்புதல் வேண்டி கவர்னர் பன்வாரிலாலுக்கு அனுப்பினார்கள். ஆனால், ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதில் கவர்னர் பன்வாரிலால் உறுதியாக இருக்கிறார். இரண்டு வருடங்கள் ஒடிவிட்டன. இதிலும் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால், விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.`ஏன் கவர்னர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்கிறார்?' என்று நீதிமன்றம் கேள்வி கேட்டதும், தர்மசங்கடத்துக்கு உள்ளானார் கவர்னர். இந்த விஷயத்திலும் முதல்வர் பழனிசாமி ஏதாவது அதிரடி முடிவு எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறாராம் கவர்னர் பன்வாரிலால்.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

அதை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவே கவர்னர் திடீரென டெல்லிக்குப் போயிருக்கிறார். இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை வரவிருக்கிறார். அவர் வந்ததும், தமிழக அரசு நிர்வாகத்தில் பரபரப்பான நடவடிக்கைகளை எடுப்பார் என்று தெரிகிறது. நடப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு