Published:Updated:

`இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது...’ - தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?!

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

“அ.தி.மு.க-வின் சில மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட்டி வருகிறார்.” - ஸ்ரீராம் சேஷாத்ரி

Published:Updated:

`இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது...’ - தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?!

“அ.தி.மு.க-வின் சில மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட்டி வருகிறார்.” - ஸ்ரீராம் சேஷாத்ரி

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

ஒரு கட்சியிலிருந்து மாற்று கட்சிக்கு வருவதும், போவதும் வாடிக்கையான விஷயம்தான். ஆனால், சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து, அ.தி.மு.க-வில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இணைந்ததால் இப்போது இரு கட்சிக்கும் இடையிலான கூட்டணியே கேள்விக்குறியாகியிருக்கிறது. பா.ஜ.க-விலிருந்து விலகிய நிர்மல், அண்ணாமலையை விமர்சித்து காட்டமான அறிக்கையைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே அ.தி.மு.க-வில் சேர்கிறார். இதற்கு பதிலடி தரும் வகையில், மாநில பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவரும், அண்ணாமலையின் நண்பருமான அமர் பிரசாத், எடப்பாடி தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா என்று விமர்சிக்கும் வகையில், “அ.தி.மு.க ஒரு கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு இதைச் செய்திருக்கக் கூடாது. நான்காண்டு காலம் 420-களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி போன்று பிழைப்புவாதிகள் வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” என்று பதிவிட்டிருக்கிறார்.  

அமர் பிரசாத்
அமர் பிரசாத்

இந்தக் கருத்தின் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகளிடையே சமூக வலைதளங்களில் மோதல் வலுத்திருக்கிறது. இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க தலைவர்கள் பலரும் பதில் சொல்லி வருகிறார்கள். இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைமையின் கருத்தால் கூட்டணி முறியுமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால், இது அமர் பிரசாத்துக்கும், நிர்மலுக்கும் நடக்கும் மோதல் மட்டுமல்ல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு வெளியானபோதே, “அ.தி.மு.க ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். இதை நாங்கள் முன்பே சொன்னோம். ஆனால், எங்கள்மீது கோபம் அடைந்தனர்” என்று அண்ணாமலை கூற, “ஊடகங்களில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்” என்று அ.தி.மு.க தரப்பில் பதில் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் சலசலப்புகள் தலைதூக்க ஆரம்பித்தன.

இதன் அடுத்தகட்டமாகத்தான், சக கூட்டணிக் கட்சியின் நிர்வாகியை இணைத்ததன் மூலமாக, பா.ஜ.க-விலிருந்து யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க-வுக்கு வரலாம் என்கிற வாசலை திறக்கிறாரா... அல்லது, பா.ஜ.க கூட்டணியை விட்டுச் சென்றாலும் பரவாயில்லை என்று சொல்லாமல் சொல்கிறாரா... என்கிற விவாதத்தைக் கூட்டணிக்குள் உருவாக்கியிருக்கிறார் எடப்பாடி. நிலைமை இவ்வாறு இருக்க, “திராவிடக் கட்சிகளைச் சார்ந்துதான் பா.ஜ.க வளரும் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. இன்று பா.ஜ.க-விலிருந்து ஆட்களை அழைத்துச் சென்றால்தான் திராவிடக் கட்சிகள் வளரும் என்கிற நிலை தமிழ்நாட்டில் வந்துவிட்டது. யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. இதற்கும் ஓர் எதிர்வினை உண்டு. அதற்கான காலமும் நேரமும் வரும்” என்று சமிக்ஞையாக அ.தி.மு.க-வுக்கு தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே எடப்பாடியின் புகைப்படங்களை பா.ஜ.க-வினர் சேதப்படுத்தியதும், அதற்கான எதிர்வினைகள் அ.தி.மு.க தரப்பிலும் கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு முன் பல முறை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பா.ஜ.க-வை விமர்சிப்பதும், அதைக் கண்டு எடப்பாடி மௌனமாக இருந்ததும், அந்த விமர்சனங்களுக்கான பதில்கள் பா.ஜ.க., அ.தி.மு.க தரப்பில் மாறி மாறி கொடுத்ததும் தொடர்கதையாக இருந்த நிலையில், இப்போது இருவருக்குமான மோதல் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், “பா.ஜ.க, தன்னுடைய  கூட்டணிக் கட்சியை எப்போதும் நேர்மறையாகவே அணுகிவருகிறது. இரண்டாம் கட்ட தலைவர்களுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் உரசல்களைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சியை வளர்க்க வேண்டும், அதற்குண்டான வேலைகள் என்னென்ன என்பதில் கவனம் செலுத்துகிறோம். அதனால்தான் பா.ஜ.க-வைத் தவிர்த்து யாருமே அரசியல் செய்ய முடியாது என்கிற நிலைக்கு வளர்ந்திருக்கிறோம். எங்கள் வாயிலிருந்து தவறான புரிதலைத் தரும் வார்த்தைகள் ஏதும் வராது. அதற்காக பா.ஜ.க சும்மா இருந்துவிடும் என்றும் அர்த்தம் கிடையாது. அனைத்து விஷயங்களிலும் தேவையான தகுதிகள் இருப்பதால்தான் இன்று ஓர் இடத்தில் இருக்கிறோம்.

ஏ.பி.முருகானந்தம்
ஏ.பி.முருகானந்தம்

தன்னுடைய கட்சி பிரதான கட்சியாக வர வேண்டும் என்பதுதான் அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களின் லட்சியமாக இருக்க முடியும். அந்த நோக்கத்தில் தெளிவாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கூட்டணி விவகாரம் குறித்து மாநிலத் தலைவரும், தேசிய தலைமையும்தான் முடிவுசெய்வார்கள்” என்றார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணியைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை. வலிமை வாய்ந்த, பலம் கொண்ட அ.தி.மு.க தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கட்சி. வரும் காலத்தில் ஆளப் போகும் கட்சி. இதனால் கொள்கை, லட்சியங்கள் பிடித்து விருப்பப்பட்டு இணைபவர்களை வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் ஒரு தலைவரின் உருவ பொம்மை, கொடும்பாவி எரிப்பது வேண்டத்தகாத, விரும்பத்தகாதச் செயல். இதை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். மற்ற கட்சிகளைவிட அதிக தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. அது பா.ஜ.க-வுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது” என்றார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி, “பா.ஜ.க., அ.தி.மு.க இடையேயான உரசல் நடந்துகொண்டிருந்தாலும், இந்த நேரம் வரை தலைமை அளவில் கூட்டணியோடுதான் இருக்கிறார்கள். பொதுவாக பா.ஜ.க வரலாற்றில் என்றைக்குமே தங்கள் கூட்டணிக் கட்சியை வெளியே அனுப்பியது கிடையாது. கூட்டணியில் இருப்பவர்கள்தான் விலகுவார்கள். ஆனால், அப்படி விலகுவதற்கான சூழல் அ.தி.மு.க-விடம் இல்லை. காரணம், பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியே செல்கிறதா என்கிற முடிவை பா.ஜ.க-தான் எடுக்குமே தவிர, அ.தி.மு.க எடுக்கக்கூடிய இடத்தில் இல்லை.

ஸ்ரீராம் சேஷாத்ரி
ஸ்ரீராம் சேஷாத்ரி

2024-ல் பா.ஜ.க கூட்டணி இல்லாமல் இருந்தால், ‘நமக்கு நல்லது...’ என்று யோசிக்கக்கூடிய இடத்தில்தான் இருக்கிறார் எடப்பாடி. ஏனென்றால் பா.ஜ.க கூட்டணியிலிருந்து சென்றால் தி.மு.க-விலிருந்து காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வுடன் இருந்தால், இப்போதிருக்கும் 12 கட்சிகளோடு தி.மு.க வலுவான கூட்டணியாக இருக்கும். எனவே, அ.தி.மு.க-வுக்குப் பலம் வாய்ந்த கூட்டணி வேண்டுமென்றால் வேறு கட்சிகள் இல்லை. பெரிய கூட்டணி அமையாத பட்சத்தில் எதிரணியில் இருக்கும் கூட்டணியை உடைக்க முடியுமா... என்று பார்க்கிறார் எடப்பாடி. அதற்கு முன் பா.ஜ.க கூட்டணியை முறிக்கத் தயார் என்பதை நிர்மல் குமார் விஷயத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அ.தி.மு.க-வின் பல மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தை கட்டமைக்க அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட்டிவருகிறார். ஒருவேளை அ.தி.மு.க-வின் தயவு பா.ஜ.க-வுக்குத் தேவையில்லை என்று தேசிய தலைமை முடிவுசெய்தால் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு முன்பே ஒருசில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புண்டு. இருந்தாலும், கர்நாடக மற்றும் அடுத்தடுத்து வருகின்ற மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அ.தி.மு.க விஷயத்தில் தேசிய தலைமை முடிவெடுப்பார்கள்” என்றார்.

ப்ரியன், பத்திரிகையாளர்
ப்ரியன், பத்திரிகையாளர்

“இது அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கான மோதல் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஈரோடு கிழக்கில் பிரசாரம் செய்தார்கள். இவர்கள் தோல்வி என்பது இருவருக்கும் கிடைத்த தோல்வி. எனவே, அந்த விஷயத்தோடு ஸ்டாலின் அகில இந்திய தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டது போன்ற விஷயங்களைத் திசை திருப்பவே இருவரும் மாறி மாறி வசை பாடி நாடகமாடுகிறார்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.