கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பலர் பொறுப்புவகித்தனர். என்றாலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள். குறிப்பாக, செங்கோட்டையன் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், அந்தத் துறையில் குளறுபடிகளும் பல்டிகளும் அன்றாட நடவடிக்கைகளாக மாறியிருந்தன.

தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த நிலையில்தான் தி.மு.க ஆட்சியிலும் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. சமீபத்தில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்துவது என்கிற அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, 2018-ம் ஆண்டு எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் 2,381 அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில், 2019-2020-ம் கல்வியாண்டில், சுமார் 60,000 குழந்தைகள் சேர்ந்தனர். அதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படவில்லை. மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி மழலையர் வகுப்புகளை மூடுவது என்று முடிவுசெய்த பள்ளிக்கல்வித்துறை, மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க., பா.ம.க உட்பட பல கட்சிகளும் அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தன.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை மூடுவதென்று அரசு முடிவெடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்தியைப் பார்க்கும்போது, அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது” என்று அறிக்கை வெளியிட்டார்.
மேலும் அந்த அறிக்கையில், “அரசுப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2,381 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, பெற்றோர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தி.மு.க அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நடைமுறையில் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டிருக்கிற திட்டங்களை படிப்படியாக நிறுத்திவருகிறது.

மழலையர் பள்ளிகளை மூடும் நடவடிக்கையால், தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறையும் நிலை உருவாகும். இது ஒரு சங்கிலித்தொடர்போல் மேல்நிலை வகுப்பு வரை செல்லும் நிலை உருவாகும். இது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வழிவகுக்கும். தனியார்மயத்துக்கு வித்திடும் செயல் என்று பொதுமக்களும், கல்வியாளர்களும் கருதுகிறார்கள். இது கல்வியை வியாபாரமாக ஆக்குவதற்குச் சமம். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு முன்பு இருந்ததைப்போலவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, மழலையர் வகுப்புகளை மூடும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற்றிருக்கிறது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை மூடக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்று அரசு தனது முடிவைக் கைவிட்டிருக்கிறது என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு என்ன காரணம், இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
மழலையர் வகுப்புகளை எடுத்துவந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சில முடிவுகளின் அடிப்படையில், மழலையர் வகுப்பு ஆசிரியர்களை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக மாற்றுவதற்கும், மழலையர் வகுப்பு குழந்தைகளை அங்கன்வாடிகளுக்கு மாற்றவும் தொடக்கப் பள்ளி இயக்குநரான அறிவொளியின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கல்வித்துறையில தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறியிருந்தாலும்கூட, ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகளும், ஓர் ஆசிரியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகளும் இருக்கும் அவலம் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்களில் சில லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்குப் போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம். அப்படியிருக்கும்போது, குழப்பமான, குளறுபடியான ஆலோசனைகளுக்கும் முடிவுகளுக்கும் இடம் கொடுக்காமல், தெளிவான, சரியான திசையில் பள்ளிக்கல்வித்துறை பயணிக்க வேண்டும்.