Published:Updated:

வாரிசு `அட்ராசிட்டி’... அலட்சியம், சர்வாதிகாரம் - நாசரின் அமைச்சர் பதவிப் பறிப்பு பின்னணி!

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்

இதுவரை தமிழ்நாடு அமைச்சரவைக்குள் மாற்றம் இருந்ததே தவிர, அமைச்சர்கள் யாரும் பதவியிறக்கம் செய்யப்படவில்லை. ஆனால், இந்த முறை ஆவடி சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகப் பறித்திருக்கிறார்.

Published:Updated:

வாரிசு `அட்ராசிட்டி’... அலட்சியம், சர்வாதிகாரம் - நாசரின் அமைச்சர் பதவிப் பறிப்பு பின்னணி!

இதுவரை தமிழ்நாடு அமைச்சரவைக்குள் மாற்றம் இருந்ததே தவிர, அமைச்சர்கள் யாரும் பதவியிறக்கம் செய்யப்படவில்லை. ஆனால், இந்த முறை ஆவடி சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகப் பறித்திருக்கிறார்.

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்

தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்படி, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், அமைச்சரவை இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், அரசு அதிகாரி ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியது பெரும் சர்ச்சையானது. அதேபோல, துறைரீதியான செயல்பாடும் குறிப்பிடும்படியாக இல்லையென்று தலைமைக்கு ரிப்போர்ட் சென்றது. இதையடுத்து, ராஜ கண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். அந்தத் துறையின் அமைச்சரான சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டார்.

ஆசிம் ராஜா, நாசர்
ஆசிம் ராஜா, நாசர்

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோதும், அமைச்சரவை சிறிய மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மாற்றத்துக்குள்ளாக்கப்பட்ட அமைச்சரவையிலிருந்து முதன்முறையாக நாசர் தூக்கியடிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

அமைச்சர் பதவி பறிபோகும் அளவுக்கு நாசர் என்ன செய்தார் என்ற பின்னணி குறித்து அறிவாலய சீனியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"பால்வளத்துறை அமைச்சர் நாசரும் அவரின் குடும்பத்தாரும் தலைமையிடம் மிக நெருக்கமாக இருப்பவர்கள்தான். நாசரின் இல்லத் திருமண நிகழ்வுக்கு நேரில் சென்றிருந்தார் முதல்வர். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இருந்தே நாசரின் செயல்பாடு முற்றிலுமாக மாறியது.

ஆவடி மேயர் உதயகுமார்
ஆவடி மேயர் உதயகுமார்

திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் நாசர் மீது புகார் சொல்லாத ஆட்களே இல்லையென்றே சொல்லலாம். அவரின் மகனான ஆசிம் ராஜாவுக்கு, ஆவடி மாநகரக் கழகச் செயலாளர் பதவியைப் பெற்றுக்கொடுத்தார்.

ஆவடி புதிய மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் மகனை மேயராக்க வேண்டுமென எண்ணி, அதற்கான காய்களை நகர்த்தினார். ஆனால், ஆவடி மேயர் பதவி பட்டியலினப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும், மேயர் தனது சொல்பேச்சைக் கேட்டு, மகனின் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே உதயகுமார் என்பவரைத் தலைமையிடம் பேசி நியமிக்கவைத்தார். அன்றுமுதல் பெயரளவுக்குதான் உதயகுமார் மேயர். சகலப்பணிகளையும் ஆசிம்தான் கவனிக்கிறார். மாநகராட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிம்தான் முடிவுகளை எடுக்கிறார்.

மேயர் அருகே ஆசீம் ராஜா
மேயர் அருகே ஆசீம் ராஜா

கோப்புகளை ஆசிம் தரப்பு பார்த்த பின்னர்தான் உதயகுமார் கையொப்பம் போடுவதுதான் ஆவடி மாநகராட்சி அலுவலக வழக்கமாகவே இருக்கிறது. நாசர் திருவள்ளூர் மத்திய மாவட்டமாக இருந்தாலும், திருவள்ளூர் மொத்தமும் அவர்களின் கண்ட்ரோலில்தான் இருக்கிறது. கட்சிக் கூட்டங்களுக்கு பேனர், போஸ்டரில் நாசர், ஆசிம் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

மாநகராட்சியில் வரும் டெண்டர்கள் தொடங்கி, லேண்ட் அப்ரூவல், வீட்டுமனைப் பட்டா, குடிநீர் சப்ளை என திருவள்ளூரில் தனி அரசையே இருவரும் நடத்திவந்திருக்கிறார்கள். இது குறித்து தலைமையிடம் புகார்கள் குவிந்தன. மேலும், தலைமையிடம் மிக நெருக்கமாக இருக்கும் சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரிடமும் நாசருக்கும், ஆசிமுக்கும் பகையாகியிருக்கிறது. இதனால், நாசரை அழைத்து தலைமை கண்டித்தது.

ஆசிம் ராஜா
ஆசிம் ராஜா

ஆனாலும், போக்கில் மாற்றம் இல்லாததால் ஆசிமின் ஆவடி மாநகரச் செயலாளர் பதவி கடந்த பிப்ரவரியில் பறிக்கப்பட்டது. இதற்கிடையே, ஆவடியில் ஒரு நில விவகாரத்தில் ஆசிம் ராஜா தலையிட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தலைமையிடம் சென்றிருக்கிறது. அந்தப் புகார்களையெல்லாம் உளவுத்துறை மூலம் விசாரிக்கவே, ரிப்போர்ட்டும் நாசருக்கும் ஆசிம் ராஜாவுக்கு எதிராகவே இருந்தது.

அதேபோல, பால்வளத்துறையின் கீழ் செயல்படும், ஆவின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும், அமைச்சரின் செயல்பாடுகளால் சொதப்பல் ஆகிவிட்டது. அதிகாரிகளிடம் அவர் காட்டிய ஈகோ காரணமாக, 40 லட்சம் லிட்டர் கொள்முதலான பால், தற்போது 27 லட்சம் லிட்டராக சரிந்திருக்கிறது.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

அதேபோல, செயலிழந்த கூட்டுறவு பால் சங்கங்களைச் சரிசெய்ய போதிய கவனம் செலுத்தாதது, ஆவின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதது, பால் தட்டுப்பாடு குறித்த புகாருக்கு எந்த பதிலும் சொல்லாமல், அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததது என துறைரீதியாகப் பல புகார்கள் இருக்கின்றன. மேலும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடு வழக்கை நீர்த்துப்போகும் வேலையில் செயல்பட்டதாகவும், சமீபத்தில் துறை அதிகாரி ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் புகார்கள் இருக்கின்றன.

நாசர்
நாசர்

மேலும், அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பொக்லைன் இயந்திரத்தை ஓட்டுவது, நிர்வாகிகளைக் கற்களாலும், கையாலும் தாக்குவது என நாசரின் அக்கப்போர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நாசரின் அட்ராசிட்டி 'திராவிட மாடல்' என்ற முன்னெடுப்புக்குத் தடையாக இருப்பதாக தலைமை கருதியது. அதன்படியே, நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது" என்றனர் விரிவாக...

நாசரின் நிலைமையைப் பார்த்து, மற்ற அமைச்சர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டால் சரி...