Published:Updated:

பட்டியல் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம்; பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் நியமனத்தின் பின்னணி என்ன?

பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளநிலையில், பட்டியலின மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்கை நியமித்திருக்கிறது காங்கிரஸ். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பூசல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (17.09.2021) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர் சிங். நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கைக்க் கடைப்பிடித்துவந்தார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறுகட்ட கூட்டங்கள் நடத்தியும் இருவருக்கும் இடையிலான மோதலை காங்கிரஸ் கட்சியால் சரிசெய்ய முடியவில்லை. இதற்கிடையே வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் அமரீந்தர் சிங்குக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸில் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிவிட்டு, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். காலிஸ்தான் பிரச்னை காரணமாக 1997 வரை எந்த முதல்வரும் ஐந்து ஆண்டுகள் முழுவதுமாக ஆட்சி நடத்தியதில்லை. அதன் பிறகு தற்போது 25 ஆண்டுகள் கழித்து பஞ்சாப் மாநில முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சிரோன் மணி அகாலிதளம் மூன்று முறை ஆட்சி அமைத்திருக்கிறது. அதன் பிறகு 2017-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அமரீந்தர் சிங் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மாற்றப்பட்டு பட்டியலின மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

Tamil News Today: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்!

இந்தியாவில் சாதி, மத அடையாளத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலான கட்சிகள் தேர்தலை அணுகிவருகின்றன. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், இந்த அடையாள அரசியல் மிகத் தீவிரமாக எல்லோராலும் முன்னெடுக்கப்பட்டது. இந்தியா முழுமையையும் ஒரே தத்துவத்தின்கீழ் கொண்டுவர பா.ஜ.க முயன்றதன் விளைவாக, பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மைச் சமூகங்களுக்கு மத்தியில் பெரிய அளவில் பா.ஜ.க-வால் நுழைய முடியவில்லை என்ற கருத்து அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, குஜராத்தில் பட்டாதேர் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக நியமிக்கப்பட்டதும், மத்திய அமைச்சரவையில் பிறபடுத்தப்பட்டோர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்தச்சூழலில்தான் பஞ்சாப்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரை முதல்வராக நியமித்திருக்கிறது காங்கிரஸ்.

சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்
twitter

பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களில் எந்த ஒரு தலித் முதல்வரின் நியமனமும் இல்லாத நிலையில், வரப்போகும் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமின்றி 2024-ல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்களுக்கு மிகப்பெரிய மைலேஜாக இந்த நியமனம் அமையும் என காங்கிரஸ் திட்டமிட்டிருக்கலாம். அதனால்கூட சரண்ஜித் சிங்கை பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸ் நியமித்திருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவிகிதம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், சரண்ஜித் சிங் சன்னிதான் தலித் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சர். ஆனால், 20 சதவிகிதமே உள்ள சீக்கியர் மற்றும் ஜாட் சமூகங்களிலிருந்து இதுவரை 13 முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தலித் வாக்குகளை மட்டுமல்ல, 10 சதவிகித வாக்குவங்கியை உடைய ராமதாசியா சமூகத்தின் நம்பிக்கையையும் பெறவே சன்னியை முதல்வராக காங்கிரஸ் நியமித்திருக்கலாம் என்கின்றன தேசிய ஊடகங்கள். ஏனெனில் சரண்ஜித் சிங் சன்னியும், ராமதாசியா சமூகத்தைச் சேர்ந்தவர். இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணிவைத்திருக்கும் அகாலிதளத்தின் நம்பிக்கையைச் சிதைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கலாம். தமிழ்நாட்டைப்போல பஞ்சாப்பிலும் பா.ஜ.க-வுக்கு பெரிய அளவில் வாக்குகள் இல்லையென்பதால் இந்த ரேஸில் பா.ஜ.க இடம்பெறவில்லை. பஞ்சாப் தேர்தலில் வெற்றிபெற்றால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதியுடன் 2017-ல் தேர்தலைச் சந்தித்தது ஆம் ஆத்மி. அதன் பலனாகக் கிட்டத்தட்ட 20 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்துக்கு வந்தது ஆம் ஆத்மி.

ராகுல் காந்தி, சித்து, சன்னி - பஞ்சாப்
ராகுல் காந்தி, சித்து, சன்னி - பஞ்சாப்
twitter

தேர்தலுக்கு முன்பே தற்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கியதன் மூலம் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை பலமாகத் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

பஞ்சாப்பில் பல உட்பிரிவுகளோடுதான் தலித் சமூகம் இருக்கிறது. இதில் ராமதாசியா, மஜாபி சீக்கியர்கள் 10 சதவிகிதம் பேர். இவர்கள் தவிர பால்மிகி, பஜிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான உள்ளனர். இவர்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது அகாலிதளத்துக்குத்தான் செல்லும். 2017 சட்டமன்றத் தேர்தலில் 34 தலித் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 22 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும், இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பிலோ, அகாலிதளம் சார்பிலோ தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க முன்வரவில்லை. தற்போது அந்தத் தயக்கத்தை உடைத்திருக்கிறது காங்கிரஸ். இது, நிச்சயம் ஜாட் மற்றும் இதர சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். இதெல்லாம் தலித் சமூகத்தினரோடு தன்னை இணைத்துக்கொண்டு சன்னி எப்படி ஆட்சியை நடத்துகிறார் என்பதில்தான் இருக்கிறது.

பஞ்சாப் காங்கிரஸ்
பஞ்சாப் காங்கிரஸ்
twitter

தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்து சன்னி செயல்பட்டால் நிச்சயம் ஒட்டுமொத்த தலித் வாக்குகளில் பெரும்பகுதியைக் காங்கிரஸ் பக்கம் இழுக்க வாய்ப்பு உண்டு. பஞ்சாப் காங்கிரஸில் தவிர்க்க முடியாத தலைவராக சன்னி மாறிவிடுவார். காங்கிரஸின் இந்தக் கணக்குகளெல்லாம் கைகொடுத்தால் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு