Published:Updated:

தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், `சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது. நீட் தேர்வு குறித்து விளக்கவே சென்றதாக தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. உண்மை என்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மின்வெட்டு, சட்ட விரோத கனிமக் கொள்ளை என்று 2006 - 2011 தி.மு.க ஆட்சியில் நடைபெற்றவை மீண்டும் நிகழத் தொடங்கியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு வெற்றிமாறன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார். கடலூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் கொலை வழக்கில் சரணடைந்துள்ளார். திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம், பா.ஜ.க நிர்வாகி ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய தி.மு.க எம்.பி-யைக் கைதுசெய்யாமல், நீதி கேட்டுப் போராடிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். எனவே, இந்த விவகாரங்களில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தி.மு.க எம்.பி-க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுக்கொடுத்திருக்கிறார். அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ``நாங்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்றிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி  - அண்ணாமலை சந்திப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி - அண்ணாமலை சந்திப்பு

அக்டோபர் 13-ம் தேதி மாலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். அண்ணாமலை கொடுத்த புகார் தொடர்பாக விளக்கமளிக்கவே மு.க.ஸ்டாலின் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் ஆளுநருடன் தமிழ்நாடு முதல்வர் நடத்திய ஆலோசனை என்ன என விசாரித்தோம்...

‘தீர்மான’ ஸ்டாலின் Vs திடீர் கவர்னர்

``அண்ணாமலை கொடுத்த புகார் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருடன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் சுமார் 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். விடுதலை செய்யப்படவிருக்கும் கைதிகளின் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால், விடுதலை செய்யத் தேர்வு செய்யப்பட்ட கைதிகளில் சிலர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். `வழக்கமாக அண்ணா பிறந்தநாள் அன்று நடைபெறும் நடைமுறைதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் தண்டிக்கப்பட்டபோது, கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தை அ.தி.மு.க தொண்டர்கள் தீவைத்து எரித்ததில் மூன்று மாணவிகள் உடல் கருகி இறந்தனர். இந்த வழக்கில், மரண தண்டனை பெற்று, பிறகு அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பெற்ற மூன்று அ.தி.மு.க-வினரை அ.தி.மு.க அரசு முன்கூட்டியே விடுவித்திருக்கிறது. அதைவிட நாங்கள் தேர்வு செய்த கைதிகள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருப்பதால் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 14 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுக்க வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தீர்மானம் குறித்தும் விளக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டினார். மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு முறையாகக் கிடைக்கவேண்டியதைக் கேட்டுப் பெற உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது” என்றனர் நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு