Published:Updated:

`ஒன் மேன் ஷோவாக இபிஎஸ்; கொதித்த ஓபிஎஸ்!' - ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை வெளிவந்த பின்னணி

முதல்வர், துணை முதல்வர்
முதல்வர், துணை முதல்வர்

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டும்தான் எல்லா இடங்களிலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா விவகாரத்தில் ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகள் மற்றும் விளம்பரங்களைத் தவறாமல் மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. அந்த வகையில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறும் விவகாரத்திலும் ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`ஸ்டாலின் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அறிக்கை விடுங்கள்' எனத் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர். அதற்கு அவர் `இதையும் உங்கள் முதல்வர் வைத்துச் செய்யவேண்டியதுதானே. இவ்விவகாரத்துக்கு மட்டும் எதற்காக என்னை அழைக்கிறீர்கள்' எனக் கோபப்பட்டதாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 15வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.1,928.56 கோடி என்ற குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் தமிழகத்தை அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.

இதை எதிர்த்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``முந்தைய ஆண்டு தணிக்கைத்துறை தலைவரால் சான்றளிக்கப்பட்ட, இறுதி வருவாய் ஈட்டல் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் விடுவிக்க வேண்டிய தொகைகள், சரி செய்யப்படும். அந்த அடிப்படையில்தான், 2019 - 2020ம் ஆண்டு, திருத்திய மதிப்பீடுகளில், தமிழகத்துக்கு வரவேண்டிய வருவாய் பங்குத் தொகை குறைந்துவிட்டது. இதற்கும், 15வது நிதிக்குழு பரிந்துரைகளுக்கும், எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலேயே, எதிர்க்கட்சி தலைவர், தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம் - எடப்படி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம் - எடப்படி பழனிசாமி

இந்திய நாடும் தமிழகமும், கொடூரமான கொரோனா நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மக்களுக்குச் செய்ய வேண்டிய, உடனடி பணிகள் குறித்துக் கவலைப்படாமல், பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்னைகள் குறித்து, தேவையில்லாத சர்ச்சைகளை, மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கத்தக்கது. முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் செயல்படும், தமிழக அரசு, எப்போதும் தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் யாருக்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்" எனக் கூறியிருந்தார்.

ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகப் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``கட்சி மற்றும் ஆட்சி என முழுமையாக தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார் முதல்வர். கொரோனா விவகாரத்திலும் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் ஒன் மேன் ஷோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டும்தான் எல்லா இடங்களிலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வரின் ஆதரவாளர்கள் சிலர் முதல்வர் அணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

இதனால் ஓ.பி.எஸ் தரப்போ, நாங்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஒதுக்கப்பட்டு விட்டோம் என நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியினரை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் துணை முதல்வரை நாடியிருக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

அதற்கு அவர் `இந்த விவகாரத்தை மட்டும் எதற்காக என்னிடம் கொண்டு வருகிறீர்கள். இதையும் உங்கள் முதல்வரிடமே சொல்ல வேண்டியதுதானே' எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அவர் `நீங்கள்தான் நிதியமைச்சர். நீங்கள் பேசினால்தான் சரியாக இருக்கும். இவ்விவகாரத்தில் மற்றவர்களைப் பேசவைத்தால் எதிர்க்கட்சியினர் சொல்வது போல் உண்மையாகிவிடும். நீங்களே பேசுங்கள்' என அவரை சமரசம் செய்து பேசவைத்தார்" என்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு