Published:Updated:

பவாரின் `பவர்' அரசியல்; விட்டுக்கொடுத்த உத்தவ்! - இலாகா பிரிப்பில் சிவசேனா போட்ட `பிஎம்சி' கணக்கு

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன் என்பது குறித்தும், இலாகா ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களும் வெளிவந்துள்ளன.

உத்தவ் - பவார்
உத்தவ் - பவார்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது அவருடன் சேர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி சார்பில் ஏக்நாத் ஷிண்டே, நிதின் ராவத், சுபாஷ் தேசாய், சாஹன் பூஜ்பால், ஜெயந்த் பாட்டீல், பாலசாஹேப் தோரட் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். ஆனாலும் இவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தன.

பின்னர் கடந்த வாரம் மகாராஷ்டிராவின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு என்.சி.பி-யின் மூத்த நிர்வாகியான அஜித் பவார் துணை முதல்வராகவும் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராகவும் பதவியேற்றனர். அன்றைய தினம் மட்டும் மொத்தம் 36 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

அஜித் பவார், ஆதித்ய தாக்கரே
அஜித் பவார், ஆதித்ய தாக்கரே

இவர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குத் துறையும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித் துறையும் உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மகாராஷ்டிராவின் சுற்றுலா மற்றும் புரோட்டாகால் துறையும் காங்கிரஸின் அசோக் சவானுக்குப் பொதுப்பணித்துறை, என்.சி.பி-யின் ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்ப்பாசனம், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட்டுக்கு வருவாய்த் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன் என்பது குறித்தும், இலாகா ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களும் வெளிவந்துள்ளன.

நீர்ப்பாசனத் திட்டம்; ரூ.70,000 கோடி ஊழல்! - அஜித் பவாருக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரம்

முதல்வர் பதவியை சிவசேனாவுக்குக் கொடுத்ததால் அமைச்சரவையில் முக்கியத் துறைகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் குறியாகவே இருந்தன. அதுவே, இழுபறிக்குக் காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக துணைமுதல்வர் பதவியைப் பெற்ற என்.சி.பி-க்கு நிதி அல்லது உள்துறையைக் கொடுக்க வேண்டும் என்று சிவசேனாவின் முக்கிய நிர்வாகிகள் சொல்லிவந்துள்ளனர்.

ஆனால் என்.சி.பி-யோ நிதி, உள்துறை ஆகியவை அமைச்சரவையின் முக்கியத் துறைகள் என்பதால் அதைக் கைப்பற்றிவிட வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை பார்த்துள்ளது. காங்கிரஸும் இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்துள்ளது.

சரத் பவார்
சரத் பவார்

நீண்ட இழுபறிக்குப் பிறகு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிலும் சரத் பவாரின் கையே ஓங்கியிருந்தது என்கின்றன மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள். முதல்வர் உத்தவ் தாக்கரே முதலில் கொடுத்த பட்டியலில் நிதித் துறையை அஜித் பவாருக்கு ஒதுக்கியும் உள்துறையை சிவசேனாவுக்கு ஒதுக்கியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சரத் பவார் இந்தப் பட்டியலை மாற்றிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவை பிரிப்பில் அதிக லாபம் பெற்றது சரத் பவாரின் என்.சி.பி தான்.

`போனமுறை இங்கு வந்தேன்... சி.எம் ஆகிவிட்டேன்!'- உத்தவ் தாக்கரே-யின் சத்ரபதி சிவாஜி சென்டிமென்ட்

மொத்தம் உள்ள 36 துறைகளில் 16 துறைகளை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. இதில், நிதி, உள்துறை, கிராம அபிவிருத்தி, தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை எனப் பல முக்கியத் துறைகள் அடங்கும். முதல்வர் பதவியைத் தவிர, சிவசேனா 14 அமைச்சகங்களைப் பெற்றிருந்தாலும், நகர்ப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் தொழில் துறையைத் தவிர்த்து மற்ற துறைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. முந்தைய பா.ஜ.க அரசின்போது வைத்திருந்த பல துறைகளை மீண்டும் சிவசேனா பெற்றுள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இலாகா பிரிப்பில் சரத் பவாரின் கை ஓங்கியிருந்தாலும், காங்கிரஸை சமாளிப்பதற்காக அக்கட்சிக்கு பொதுப்பணித்துறை, வருவாய் உள்ளிட்ட ஒரு சில முக்கியத் துறைகளைக் கொடுத்துள்ளது சிவசேனா.

`தற்போதைய நிலவரப்படி உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவையை சரத் பவாரின் என்.சி.பி தான் முன்னெடுத்துச் செல்லும்' என்கின்றனர் அம்மாநில ஊடகங்கள்.

`இறுதியாக ஒன்று; கற்பிப்பது உங்கள் வேலை இல்லை’- ஃபட்னாவிஸ் மனைவியைச் சாடிய சிவசேனா

ஆனால், `என்.சி.பி-க்கு இவ்வளவு முக்கியத் துறைகளை சிவசேனா விட்டுக்கொடுத்தற்கு சில அரசியல் கணக்குகளும் இருக்கின்றன' என சிவசேனா நிர்வாகிகள் பேசியுள்ளனர். சிவசேனாவின் பலமே மும்பை, தானே, புனே ஆகிய நகரங்கள்தான். இந்த நகரங்களில் முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடுகளில் சிவசேனா எப்பவும் முதலிடம். கடந்த முறை இந்தப் பகுதிகளில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டதால் அங்கு தற்போது பா.ஜ.க-வும் பெரிய அளவில் காலூன்றிவிட்டது.

தற்போது பா.ஜ.க எதிரியாகிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் அந்தக் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும்விதமாக என்.சி.பி-க்கு அதிகாரமிக்க துறைகளை விட்டுக்கொடுத்துள்ளது. அதன்காரணமாகவே நகர்ப்புற மேம்பாடு துறையை சிவசேனா தன்வசம் வைத்துள்ளது. நகர்ப்புறங்களுக்கு நடைபெறும் பி.எம்.சி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. மும்பை நகரங்களில் அரசியல்ரீதியாக கோலோச்சுவதற்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானது.

சிவசேனா
சிவசேனா

பி.எம்.சி தேர்தல்களை மனதில் வைத்தே நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறைகளை சிவசேனா கேட்டுவாங்கியது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மும்பை மிரர்க்குப் பேசியுள்ள சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், ``நாங்கள் ஒரு நகர்ப்புறக் கட்சி. எங்களின் முக்கியக் கவனம் மும்பை, தானே போன்ற நகரங்களில்தான் இருக்கிறது. இங்கு வேலை செய்ய, பி.எம்.சி, சேரி மறுவாழ்வு ஆணையம் (எஸ்.ஆர்.ஏ) ஆகிய துறைகளைக் கட்டுப்படுத்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறைகள் எங்களுக்குத் தேவை. இதனாலேயே என்.சி.பி-யோடு சமரசம் செய்துகொண்டோம். நாங்கள் இப்போது முதல்வரின் நாற்காலியில் இருந்து எங்கள் அதிகாரத்தைச் செலுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

`பா.ஜ.க-விடம் எச்சரிக்கையாகவே இருங்கள்!' - அமைச்சர்களை அலர்ட்டாக்கிய உத்தவ் தாக்கரே