Published:Updated:

சசிகலா: ''நான்கு வருட பாரத்தை இறக்கிவைத்தேன்!'' - அவர் சொல்ல வருவது என்ன?

ஜெ. நினைவிடதில் சசிகலா
News
ஜெ. நினைவிடதில் சசிகலா

அப்படி நான்காண்டுகளாக அவரின் மனதில் இருந்த பாரம் என்ன அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்,

நான்காண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா சமாதிக்குச் சென்று இன்று மரியாதை செலுத்தினார் சசிகலா. 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற சசிகலா, நினைவிடத்தில் மலர்தூவி ஏதோ முணுமுணுத்து, மூன்று முறை சமாதியில் அடித்து சபதம் செய்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அதற்குப்பிபிறகு இன்றுதான் மீண்டும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார் சசிகலா. அங்கு கண்ணீர் மல்க சில நிமிடங்கள் அமைதியாக நின்று மலர்தூவி அஞ்சலியையும் செலுத்தினார்.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தபோதே, ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தமிழகம் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் திடீரென மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மூடப்படுவதாக அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பொதுப்பணித்துறை ஒரு விளக்கமளித்தது.

அதிமுக கொடி கட்டியக் காரில் சசிகலா
அதிமுக கொடி கட்டியக் காரில் சசிகலா

சிறையிலேயே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருந்ததால், பதினைந்து நாள்கள் வெளியில் வராமல் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியில் வந்தார். ``சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்'' என்றும் பேசினார். அதனால், அதிமுக தலைமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதை அமோதிக்கும் விதமாக, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மீண்டும் தன் ஆட்டைத்தை ஆரம்பித்தார்.

அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேசுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டார். அப்படி வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்'' போன்ற கருத்துகளே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குறிப்பாக அ.ம.மு.க நிர்வாகிகளான காமராஜ், உமாதேவன் ஆகியோரிடம் சசிகலா பேசியபோது, ‘அக்கா சமாதிக்குப் போயிட்டு வந்தவுடனேயே தமிழ்நாடு முழுவதும் டூர் கிளம்பலாம்னு இருக்கேன்’ என்றார். அவர் சொல்லியபடியே, சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடிகட்டிய காரில் சென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். இதுஒருபுறமிருக்க செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா,

''நினைவிடத்துக்கு நான் ஏன் இத்தனை நாள் கழித்து தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை இன்று இறக்கி வைத்துள்ளேன். அதிமுக கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதிமுக-வையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” என்றார்.

சசிகலா
சசிகலா

அப்படி நான்காண்டுகளாக அவரின் மனதில் இருந்த பாரம் என்ன அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்,

'' சின்னம்மா முதல்வராவதை மத்திய பா.ஜ.க அரசு தடுத்தது. சிறைக்குச் செல்வதற்கு முன்பாக சமாதிக்குச் சென்ற சின்னம்மா, அது தொடர்பாகத்தான் சபதம் செய்தார். ஆனால், இந்தமுறை அவர் பாரம் என்று சொல்லவருவது, அவர் முதல்வராக்கிவிட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமியும் சின்னம்மாவால் அதிமுகவில் பதவிகளைப் பெற்றவர்களும் அவருக்குச் செய்த துரோகத்தைப் பற்றியதுதான். சின்னம்மா சிறைக்குச் சென்ற ஆரம்ப காலங்களில், பல அமைச்சர்கள் அவரை நேரில் சென்று பார்த்தார்கள். அவரைச் சந்தித்து கண்ணீர் வடித்துவிட்டு வந்தார்கள். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சின்னம்மாவைச் சென்று சந்திப்பதாக இருந்தது. ஆனால், பா.ஜ.கவின் ஆதரவு கிடைத்தவுடனே எடப்பாடி தன் ரூட்டை மாற்றிக்கொண்டார். அவரைப்போலவே மற்ற நிர்வாகிகளும் அம்மாவைக் கண்டுகொள்ளாமல் இருக்கத் தொடங்கினர். 2017 செப்டம்பரில் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் சின்னம்மாவை நீக்கினார்கள். ஆனால், பா.ஜ.கவுக்குப் பயந்துதான் எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் இப்படி நடந்துகொள்கிறார்கள் என சின்னம்மா அப்போது நினைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், நாள்கள் செல்ல செல்லத்தான் பா.ஜ.கவே சேர்க்கச் சொன்னாலும் வேண்டாம் என முட்டுக்கட்டை போடுவது எடப்பாடிதான் என்று தெரிந்துகொண்டார். தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தன் தீவிரமான விசுவாசிகள் பலர் இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமியை நம்பி முதல்வராக்கிவிட்டுச் சென்றார் சின்னம்மா. அவர் இப்படியொரு துரோகத்தைச் செய்வார் என்று சின்னம்மா எதிர்பார்க்கவேயில்லை. அதுமட்டுமல்ல, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் சின்னம்மாவுக்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லை என கடுமையான பல கருத்துகளைச் சொல்வதில் அவருக்குப்ப் பெரிய வருத்தமில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, 'சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை. அவரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை' என்று பேசியதைக் கேட்டபோது சின்னம்மாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
Photo: Vikatan

தேர்தல் நேரத்தின்போதும், சின்னம்மா, தினகரனிடம் பேசிவிட்டுதான் டெல்லி மேலிடம், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. கட்சியில் இல்லாவிட்டாலும் கூட்டணியிலாவது அ.ம.மு.கவைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டுப் பார்த்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, சின்னம்மா நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோக்கள் வெளியான போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு எதிராக தீர்மானம் போடச்சொன்னார் எடப்பாடி. அதில் எடப்பாடி செயலாளராக இருக்கும் மாவட்டத்தில், மிகக் கடுமையான வார்த்தைகளால் தீர்மானம் நிறைவேற்றினார். இதையெல்லாம் சின்னம்மாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எடப்பாடி பேச்சைக் கேட்டுக்கொண்டு மற்றவர்களும் செயல்பட்டதை சின்னம்மாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. நான்காண்டுகளில் இவர்கள் செய்த துரோகத்தைத்தான், பாரத்தை என சின்னம்மா சொல்லியிருக்கிறாரே தவிர வேறொன்றும் இல்லை'' என்கிறார்க.