Published:Updated:

முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனை..! அமைச்சர்கள் - ஆளுநர் சந்திப்பின் பின்னணி

ஆளுநர்-முதல்வர்
ஆளுநர்-முதல்வர்

ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் இருப்பதால்  கலந்தாய்வு  அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாமல் வைத்துள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதா மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் ஆளுநர். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. விரைவில் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை துவங்கவேண்டிய நெருக்கடி அரசுக்கு உள்ளது. ஆனால், இந்த ஆண்டு பிறப்படுத்தப்பட்டே்ாருக்கான இடஒதிக்கீடு வழங்குவதிலே தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள உள் இடஒதுக்கீட்டின் நிலை என்னவாகும் என்கிற கேள்வி அனைத்து தரப்பிலும் இருந்தது.

மருத்துவ கல்வியில் ஏழை மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்கிற நோக்கில் தமிழக அரசு இந்த உள்ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் இருப்பதால் கலந்தாய்வு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ட்விட் செய்திருந்தார் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரின் தாயார் மறைவு குறித்த விசாரிக்க, திங்கள் அன்று முதல்வர் வீட்டிற்கு வருகை தந்தார். வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் ஆளுநர். அதன்பிறகு ஆளுநரை முதல்வர் தனது வீட்டில் உள்ளே உள்ள அறைக்குள் அழைத்துச் செனறார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அங்கு ஆளுநரிடம் முதல்வர் மருத்துவக்கல்வி இடஒதுக்கீடு விவகாரம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். ஆளுநரின் ஒப்பதல் வந்தால் மட்டுமே கலந்தாய்வு நடத்தக்கூடிய நிலை இருப்பதை அப்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் முதல்வர். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஆளுநர், “இதில் உள்ள சட்ட விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு ஒப்புதல் அளிக்கிறேன்” என்று சொல்லியுள்ளார், உடனடியாக முதல்வர் தனது உதவியாளர் மூலம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தனது வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார். பத்து நிமிடத்தில் முதல்வர் வீட்டில் சி.வி.சண்முகம் என்ட்ரி கொடுத்து நேராக ஆளுநரும், முதல்வரும் இருந்த அறைக்குள் சென்றார்.

தமிழக அரசு கொண்டுவந்த சட்ட மசோதா பற்றியும் அதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பலன்களையும் ஆளுநரிடம் விளக்கியிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். சரி, “நான் நாளை இதுகுறித்து பார்க்கிறேன்” என்று ஆளுநர் சொன்னபிறகே, “அமைச்சர்களை நாளை உங்களைச் சந்திக்கச் சொல்கிறேன்” என்று முதல்வர் சொல்லியுள்ளார்.

இந்த சந்திப்பு முடிந்து ஆளுநர் கிளம்பியப் பிறகு முதல்வரும், சி.வி.சண்முகமும் ஆளுநரைச் சந்திப்பது குறித்துப் பேசியுள்ளனர். எந்நெதந்த அமைச்சர்கள் ஆளுநரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் சென்று நேரடியாக ஆளுநரிடம் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரிக்கை வைத்தனர்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

ஆளுநரும் அவர்களிடம், “விரைவில் ஒப்புதல் வழங்குகிறேன். மத்திய அரசிடமும் இதுகுறித்து தெரிவித்து விட்டேன்” என்று பதில் அளித்துள்ளார். விரைவில் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு தமிழகத்தில் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு தொடங்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு