Published:Updated:

'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது?

ஏழு மாவட்டங்களும்தான் தமிழக அரசியலில், பா.ம.க-வை தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க வைத்திருந்தன. அந்த அடிப்படைக் கட்டமைப்பையே அசைத்துப் பார்த்துவிட்டது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு, பா.ம.க-வை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கான உதாரணமாக நடந்து முடிந்திருக்கிறது அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்!

`பா.ம.க பெற்ற வெற்றி கௌரவமானது; மரியாதைக்குரியது. தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து தமிழகத்தின் 3-வது பெரிய அரசியல் சக்தி பா.ம.க என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவு நிரூபித்திருக்கிறது' என்று அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் பா.ம.க நிறுவனத் தலைவரான மருத்துவர் ராமதாஸ். ஆனால், அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலோ, தேர்தல் முடிவு தனக்கு ஏற்படுத்தியிருக்கும் மனக் காயத்தை கோப வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

`துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள்', `மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா?' என்றெல்லாம் குமுறிவந்தவர் ஒருகட்டத்தில் 'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்' என உணர்ச்சித் துடிப்புடன் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபோது, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாகிவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருசேர சுருட்டி வீசியிருக்கும் இந்தத் தேர்தல் முடிவு மற்ற எந்தக் கட்சியைவிடவும் பா.ம.க-வை பலமாகவே பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதற்கு முக்கியக் காரணம், `பா.ம.க-வின் கோட்டை'யாகக் கருதப்பட்டுவந்த மாவட்டங்களிலேயே எதிர்பாராத தோல்வியை சந்தித்திருப்பதுதான்.

தேர்தல் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களில், நெல்லை, தென்காசி தவிர்த்து வட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு மாவட்டங்களிலும் பா.ம.க பலமான கட்சி. வன்னியர் சமூக வாக்குகளைப் பெரும்பான்மையாகக்கொண்டிருக்கும் இந்த ஏழு மாவட்டங்களும்தான் தமிழக அரசியலில், பா.ம.க-வை தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கவைத்திருந்தன. அந்த அடிப்படைக் கட்டமைப்பையே அசைத்துப் பார்த்துவிட்டது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்!

இந்த நிலையில், பா.ம.க பொதுக்குழுக் கூட்டம் குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``மருத்துவர் ராமதாஸ், பல தேர்தல்களைச் சந்தித்தவர். எனவே, பா.ம.க என்ற குட்டையில் நான்கைந்து அடிக்கு மேல் தண்ணீர் ஊறாது என்ற உண்மை அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

'இனி யாரோடும் ஒட்டுண்ணியாகக் கூட்டணி கிடையாது. தனித்துப் போட்டியிட வேண்டும்' என்று தன் ஆசையைப் பேசியிருக்கிறார் அல்லது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகப் பேசியிருக்கிறார். இதுபோல் கடந்த காலங்களிலும் பலமுறை பேசியிருக்கிறார். ஆனால், இந்த முறை அது போன்று கிடையாது என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்.

ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க தேவையில்லை. ஏனெனில், வி.சி.க என்ற கட்சிக்குக் குறைந்த தொகுதிகளைக் கொடுத்தே அதிக தொகுதிகளை வென்று வெற்றிக் கூட்டணியாக இருந்துவருகிறது தி.மு.க கூட்டணி. பா.ம.க-வை தங்கள் கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டு, ஏற்கெனவே தாங்கள் வெற்றிபெற்ற தொகுதிகளை் பா.ம.க-வுக்கு இலவசமாக தூக்கிக் கொடுக்க வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை.

`சொகுசு கார் முதல் தண்ணீர் தொட்டி வரை!' - விஜயபாஸ்கர் மாமனார் வீட்டை சல்லடை போட்ட அதிகாரிகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், எப்போதுமே மக்களவைத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். 1999- மக்களவைத் தேர்தலின்போதே மூப்பனார் தலைமையிலான த.மா.கா-வை அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்திருக்கலாம். ஆனால், 'தனித்து நிற்கட்டும். 2001 சட்டமன்றத் தேர்தலில் சேர்த்துக்கொள்ளலாம்' என்று சொல்லிவிட்டது அ.தி.மு.க தலைமை. அதேபோல், 2009-லும் தே.மு.தி.க-வை சேர்த்துக்கொள்ளாமல் இருந்துவிட்டு 2011 சட்டமன்றத் தேர்தலில்தான் கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டார்கள்.

இப்போதும்கூட, வரப்போகிற மக்களவைத் தேர்தலின்போது, 'பா.ம.க-வும் கூட்டணிக்குள் வர வேண்டும்' என பா.ஜ.க வேண்டுமானால் அழுத்தம் கொடுக்கலாமே தவிர, அ.தி.மு.க விரும்பாது. மாறாக, 'மக்களவைத் தேர்தலில் பா.ம.க பலகீனப்படட்டும். அடுத்து சட்டமன்றத் தேர்தலின்போது வேறு வழியில்லாமல் நம் கூட்டணிக்கு வரட்டும்' என்றே அ.தி.மு.க நினைக்கும்'' என்கிறார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

'என் மூச்சுள்ளபோதே கோட்டையில் அன்புமணி' என்ற மருத்துவர் ராமதாஸின் கருத்து குறித்து, பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணன் பேசுகிறபோது, ``பா.ம.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பிக்கும்போது, இதே மருத்துவர் ராமதாஸ்தான், 'வாரிசு அரசியல்' குறித்து என்னென்ன சொல்லியிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒருவர், இன்றைக்கு எந்த அளவு வளர்ந்திருக்கிறார், எந்தத் திசையில் வளர்ந்திருக்கிறார் என்பதையெல்லாம்தான் இப்போதைய அவரது பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது.

'என்னுடைய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர்தான் பா.ம.க-வைக் காப்பாற்ற வேண்டும்; கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்றெல்லாம் அவர் பேசியிருப்பது என் போன்றவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறது. ஏனெனில், மருத்துவர் ராமதாஸ் அரசியலுக்குள் வரும்போது எந்த நல்ல நோக்கத்துக்காக கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நிலை மாறி, 'பா.ம.க வன்னியர்களுக்கான கட்சி' என்று நாளடைவில் மாறியது. இப்போது அது இன்னும் சுருங்கி 'குடும்பக் கட்சி'யாகவே மாறியாகிவிட்டது என்பதைத்தான் அவரது பேச்சு உணர்த்துகிறது'' என்கிறார் வருத்தமாக.

தனது கல்லீரலைத் தானமளித்துத் தந்தையைக் காப்பாற்றிய மகன்... நடந்தது என்ன?

இதையடுத்து பா.ம.க பொருளாளரான திலகபாமாவிடம், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் குறித்தான அரசியல் விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டபோது, ``தமிழகத்திலுள்ள மற்ற கட்சிகளெல்லாம் பணத்தை மூலதனமாக வைத்து கட்சி நடத்திவரும்போது, மக்களை மட்டுமே மையப்படுத்தி இயக்கம் நடத்திவருகிறார் மருத்துவர் ஐயா. மக்களுக்கான நல்ல அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐயா ஆசைப்படுகிறார். எனவே, அவரது வலி என்னவென்று எங்களாலும் உணர முடிகிறது. அதனால்தான் அவரோடு நாங்களும் துணை நிற்கிறோம்.

'பா.ம.க குடும்ப அரசியலாகச் சுருங்கிவிட்டது' என்று விமர்சிக்கிற தகுதி இங்கே யாருக்கும் கிடையாது. உதயநிதி, கனிமொழி என மற்றவர்களைப் பார்த்து பா.ம.க-வையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல. பா.ம.க-வின் முக்கியப் பொறுப்புகளில் பல்வேறு சமூகத்தினரும் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பொறுப்பாளர்கள் ஏதோவொரு காலகட்டத்தில் தங்கள் சுயநலத்துக்காக இயக்கத்தைவிட்டு வெளியேறிவிட்ட வரலாறும் உண்டு.

திலகபாமா
திலகபாமா

இந்தச் சூழ்நிலையில்தான், 'தான் வளர்த்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்கு யார் வருவார்' என்ற ஏக்கம் மருத்துவர் ஐயாவுக்கு உருவாகிறது. அதுவரையில் கட்சியிலும் அன்புமணி ராமதாஸ் எந்த இடத்திலும் முன்னிறுத்தப்படவில்லை. இப்போதும்கூட அன்புமணி ராமதாஸ் போன்ற திறமைமிக்க தலைவர் தமிழக அரசியலில் வேறு யார் இருக்கிறார்கள்? மருத்துவர் ஐயாவின் மகனாக மட்டுமே ஏன் இன்னும் அவரைப் பார்க்கிறீர்கள்? மருத்துவர் ஐயாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய தகுதிகளையெல்லாம் குறைத்துக்கொண்டு அன்புமணி ராமதாஸ் வெளியே நிற்க வேண்டுமா?

தகுதியில்லாத ஒரு நபரை, தன் மகன் என்பதற்காகவே ஐயா அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார் என்று நீங்கள் சொன்னால், நானும் அந்தக் கருத்தை வரவேற்பேன். ஆனால், அன்புமணி ராமதாஸ் போன்ற விவரமான, எல்லா தகவல்களையும் அறிந்து வைத்திருக்கிற, பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தெரிந்து வைத்திருக்கிற தலைவர் தமிழக அரசியலில் யாரேனும் உண்டா? எனவே, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், கண்டிப்பாக பா.ம.க தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராகப் பதவியேற்பார்!'' என்கிறார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு