Published:Updated:

`நம்பகமற்ற, மோசடிக்கட்சி காங்கிரஸ்!’ - எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவலால் கொதித்த மாயாவதி

ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மொத்த எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியுள்ளனர்.

Mayawati - sonia
Mayawati - sonia

ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. `இதில் 101 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்கலாம்' என்ற நிலையில் காங்கிரஸ் 99 இடங்களிலும் பா.ஜ.க 73 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும் சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சில சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது.

Mayawati
Mayawati

அங்கு முதல்வராகக் காங்கிரஸின் அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ-க்களும் நேற்று காங்கிரஸில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று அம்மாநில சபாநாயகரை நேரில் சந்தித்து தங்களின் கட்சி மாற்றம் குறித்துத் தெரிவித்துள்ளனர்.

கட்சி உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏ - அதிரடி காட்டிய மாயாவதி!

``பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் தொடர்பிலிருந்தனர். இதையடுத்து அவர்கள் தற்போது காங்கிரஸில் இணைந்துவிட்டனர்” எனக் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Bahujan Samaj Party mla
Bahujan Samaj Party mla

கட்சித் தாவல் குறித்துப் பேசியுள்ள பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ ராஜேந்திர குட், `` வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடவே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் நிலையான அரசு அமைய வேண்டும் என்றும் விரும்பினோம். அசோக் கெலாட்தான் சிறந்த முதல்வர். ராஜஸ்தானில் அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரது அரசியல் பணி மற்றும் அமைதியால் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

Vikatan

இந்தநிலையில், தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-க்களின் கட்சித் தாவல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மாயாவதி, “ ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு மீண்டும் ஒருமுறை பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை உடைத்து நம்பகமற்ற, மோசடிக் கட்சி என்பதை நிரூபித்துவிட்டது.

வெளியிலிருந்து எப்போதும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் பகுஜன் சமாஜுக்கு செய்யப்பட்ட துரோகம் இது. காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கசப்பான சம்பவங்களுக்கு எதிராகப் போராடாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளையே காயப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.