Published:Updated:

கன்னியாகுமரி: `வசந்தகுமாரின் மகனுக்கே சீட் கொடுக்கணும்!’ - பாலபிரஜாதிபதி அடிகளார்

பாலபிரஜாபதி அடிகளார்
பாலபிரஜாபதி அடிகளார்

'வசந்தகுமாருக்கு ஆட்சி செய்ய நாம கொடுத்த அந்தக் காலத்தை அவர் மகனுக்கு கொடுக்கணும்னு எனக்குத் தோணுது' என்கிறார் அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. எம்.பி-வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வசந்தகுமார் இறந்து சில நாள்களே ஆன நிலையில் இடைத்தேர்தல் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தோ வெளிப்படையாக எந்தக் கட்சியினரும் பேசவில்லை. ஆனால், அடுத்த வேட்பாளர் ரேஸுக்கு மறைமுகமாக சிலர் தயாராகிவருகின்றனர். இந்த நிலையில் `கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மூத்த மகன் விஜய் வசந்துக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் வழங்க வேண்டும்’ என அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வசந்தகுமார்
வசந்தகுமார்

இது குறித்து பாலபிரஜாதிபதி அடிகளார் நம்மிடம் கூறுகையில், ``மண்ணுக்கு நன்மை செய்யணும்னா, வசந்தகுமார் மகன் அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும்னு எனக்கு மனசுக்கு தோணுது. அதைத்தான் நான் சொல்லுறேன். மண்ணை அழிக்கிற யாரும் எம்.பி-யாக வரக் கூடாது. ஏற்கெனவே கடல் அழிச்சுச்தான் குமரி கண்டம் மிஞ்சியிருக்கு. இந்தச் சின்ன மாவட்டத்துல மக்களைச் சுதந்திரமா வாழ விடாம கனரக திட்டங்களை கொண்டுவந்து, கார்ப்பரேட்டுகளை கொண்டு வாறதெல்லாம் கூடாது. இந்த மண்ணை மண்ணின் மைந்தர்கள்தான் ஆளணும். பணத்தாலோ வேறு ஏதாலோ அதை வீழ்த்தவும் கூடாது.

வசந்தகுமாருக்கு ஆட்சி செய்ய நாம கொடுத்த அந்தக் காலத்தை அவர் மகனுக்கு கொடுக்கணும்னு எனக்குத் தோணுது. அவங்க தகப்பனார் உருவாக்கிவெச்சது அழிஞ்சுபோகக் கூடாது. திருப்பியும் கமிஷன் அரசியலும், கைநீட்டுற அரசியலும் கன்னியாகுமரி மாவட்டத்துல வளர்ந்திரக் கூடாது. இப்போ எங்கே வாரிசு அரசியல் இல்லை... நேருவுக்க மக இந்திரா காந்தி தகுதி இருந்து வந்தாங்க. இப்போ தகுதி இல்லாம அடிபோட்டுட்டு கெடக்காங்க. பி.ஜே.பி வாரிசு அரசியல் இல்லைன்னு பேசுவாங்க. அவங்களுக்கு வயசு குறைவுதான். இன்னும் கொஞ்சம் நாளுல பாருங்க, அவங்க பிள்ளைங்களும் அரசியல்ல இருப்பாங்க.

பாலபிரஜாபதி அடிகளார்
பாலபிரஜாபதி அடிகளார்

காந்தியக் கொள்கை தன்மையும், காமராஜரின் செயலாற்றலும் உள்ளவர்கள் வரணும். நான் வாழுற வாழ்க்கையில எண்டுக்கு போயாச்சு. அதனால முடிவெடுக்க தாமதிக்கக் கூடாதுங்கிறது என்னுடைய எண்ணம். இது நான் மட்டும் சொல்லுறது இல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருகிட்ட கருத்து கேட்டுட்டுதான் சொல்லுறேன். காங்கிரஸ் இயக்கம் சம்மதிச்சா சம்மதிக்கட்டும். ஏன்னா காங்கிரஸ்காரங்க மட்டும் ஓட்டுப்போட்டா வசந்தகுமார் வந்தாரு... மாற்றம் வேணும்னு நினைச்ச நடுநிலையாளர்கள் முடிவு எடுத்ததுனாலதான் வந்தார். எவ்வளவு பணபலம், அச்சுறுத்தலை மீறி வெற்றி பெற்றார்... இதைச் சொல்லிட்டா அவரு எதுத்திருவாரோ, இவரு எதுத்திருவாரோன்னு நினைச்சு தயங்கக் கூடாது. நம்ம கருத்தைச் சொல்லியிருக்கோம்" என்றார் அவரது பாணியில்.

அடுத்த கட்டுரைக்கு