Published:Updated:

புதுச்சேரி: `ஆன்லைன் ரம்மி செயலிக்குத் தடை’ - மத்திய அரசுக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி ( Representational Image )

`ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளைத் தடைசெய்யுங்கள்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமாருக்கு இரு குழந்தைகள். செல்போன் ரீசார்ஜ் கடைவைத்திருந்த அவர், படிப்படியாக முன்னேறி, தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டு மொத்த விற்பனையாளரானார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கியவர், அதற்கு அடிமையாகியிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.38 லட்சம் ரூபாயை இழந்த அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

அதற்கு முன்பு, அவர் தனது மனைவிக்கு அனுப்பிய ஆடியோவில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நிறைய பேர் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், எப்படியாவது தடை செய்துவிடும்படியும் உருக்கமாகப் பேசி கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல, ரம்மி நிறுவனத்துக்கும் கோரிக்கை வைத்திருந்தார். அவரது ஆடியோ பேச்சுகளும், விகடன் இணையப் பக்கத்தில் வெளியான அவர் மனைவி மதுமிதாவின் கதறலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

`ஆன்லைன் சூதாட்டம் பக்கம் போகாதீங்க; குடும்பம் நடுத்தெருவுல நின்னுடும்’ - விஜயகுமாரின் மனைவி கண்ணீர்

அதன் அடிப்படையில் பல்வேறு தனிநபர்களும், சமூக அமைப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுப்பினர். அத்துடன் முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதேபோல, ``ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் லாட்டரி போன்றவற்றைச் சட்டபூர்வமாகத் தடைசெய்வதுடன், அவற்றை சைபர் குற்றமாக அறிவித்து சூதாட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன், முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மது!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``புதுவையில் ஒருவர் 40 லட்சம் ரூபாய் வரை ரம்மி விளையாட்டால் இழந்து, உயிரையும் மாய்த்துக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. அதனால், அவற்றை உடனே தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். ரம்மி மட்டுமல்லாமல் அனைத்துச் சூதாட்ட செயலிகளையும் தடை செய்யும்படி வலியுறுத்தியிருக்கிறேன். அதேபோல, ரம்மி விளையாட்டில் விளையாட மக்களைத் தூண்டும் விளம்பரங்களையும் தடைசெய்ய வேண்டும்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு