Published:Updated:

ஆன்லைன் சூதாட்டம்: கருத்து கேட்பதை எதிர்க்கும் எடப்பாடி; விளக்கம் சொல்லும் திமுக!

ஆன்லைன் சூதாட்டம் ( Representational Image )

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைத் தடை செய்ய குழு அமைத்ததோடு மக்களிடம் கருத்தும் கேட்டு வருகிறது. கால தாமதம் செய்யவே அரசு இதைச் செய்கிறதா?

ஆன்லைன் சூதாட்டம்: கருத்து கேட்பதை எதிர்க்கும் எடப்பாடி; விளக்கம் சொல்லும் திமுக!

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைத் தடை செய்ய குழு அமைத்ததோடு மக்களிடம் கருத்தும் கேட்டு வருகிறது. கால தாமதம் செய்யவே அரசு இதைச் செய்கிறதா?

Published:Updated:
ஆன்லைன் சூதாட்டம் ( Representational Image )

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாகக் குறுகிய காலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதைத் தடை செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசும் ஆன்லைன் சூதாட்ட ஆப்களைத் தடை செய்வதற்குச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டம் இயற்றுவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு.

அதில், ``ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்துகளைப் பகிர விரும்புவோர் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்துகளைப் பகிர விரும்புவோர், தங்களுடைய கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரியில் 12.08.2022க்குள் தெரிவிக்கலாம். ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளைப் நேரடியாகப் பகிர விரும்பும் நிறுவனங்கள், 09.08.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்தும் தெரிவிக்கலாம்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

கருத்துக் கேட்புக் கூட்டம் 11.08.2022 அன்று மாலை 04.00 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு அரசின் கருத்துக்கேட்பு விவகாரம் குறித்து, “ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், இதுவரை தடைச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆன்லைன் சூதாட்ட ஆப்கள் தடை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதாகக் கூறுகின்றனர். சூதாட்டத்தைத் தடைசெய்ய யாராவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவார்களா? ஆன்லைன் நிறுவனங்கள் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றன. இந்தச் சம்பாத்தியத்தில் தி.மு.க-வுக்கான பங்கும் இருப்பதால் இதுவரை தடைச் சட்டம் கொண்டு வரவில்லை.” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2020 நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் கேம்களைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“1930 தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1888 சென்னை மாநகர காவல் சட்டம், 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2020 தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் அவசரச் சட்டம் கடந்த 2020 நவம்பர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டு, நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

இந்த அவசர சட்டத்தை சில மாற்றங்களுடன் சட்டமாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதசிறைத் தண்டனை, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை” என ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்ட மசோதாவை 2021 பிப்ரவரி 4ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது அப்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள் இவை... இது பின்னர் பிப்ரவரி 25-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட சில ஆன்லைன் கேம் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் ‘ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது; சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

‘ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்’ எனக் கூறி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டுவந்தார்களே அதை ஏன் நீதிமன்றம் தடை செய்தது? அதேபோல நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு என அனைத்துக்கும் அ.தி.மு.க சென்று அடிவாங்கி திரும்பி வந்திருப்பார்கள். ஜெயலலிதா 2005ல் நுழைவுத் தேர்வு வேண்டாம் எனச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தீர்மானத்தை ரத்து செய்தது. அதன்பிறகு தலைவர் கலைஞர் ஒரு குழு அமைத்து, மக்களிடம் கருத்து கேட்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நுழைவுத்தேர்வுக்குத் தடை வந்தது.

நீட் தேர்வு விவகாரத்திலும் குழு அமைத்து, மக்களிடம் கருத்து கேட்டு தடை கேட்டிருக்கிறோம். ஆனால், எடப்பாடி காலத்தில் நீட் தேர்வு ரத்து மசோதாவை நிராகரித்ததுபோலத் தற்போது அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. 2020-ல் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதுவும் ரத்து செய்யப்பட்டது. இப்போது தி.மு.க அரசுஇ சட்ட வல்லுநர்கள், பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்கேட்டு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும், நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாத அளவு அது வலுவானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மக்கள் கருத்து கேட்க முடிவு செய்திருக்கிறோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

சட்டம் இயற்ற இன்னும் ஒரு மாதம்கூட அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதை மீண்டும் ரத்து செய்ய முடியாதபடிக்கு இயற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் வலுவான சட்டம் கொண்டு வருவோம்.” என்றார்.