Published:Updated:

'ஆன்லைன் ரம்மிக்கு தடை' - பிரிவு 162-ஐ பயன்படுத்துவதில் என்ன சிக்கல்?!

ஆன்லைன் ரம்மி

தமிழக அரசு பிரிவு 162-ஐ பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யலாம் என அரசியல் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, இதை பயன்படுத்துவது சாத்தியமா?, என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

'ஆன்லைன் ரம்மிக்கு தடை' - பிரிவு 162-ஐ பயன்படுத்துவதில் என்ன சிக்கல்?!

தமிழக அரசு பிரிவு 162-ஐ பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யலாம் என அரசியல் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, இதை பயன்படுத்துவது சாத்தியமா?, என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

Published:Updated:
ஆன்லைன் ரம்மி

அதிகரிக்கும் தற்கொலை:

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அத்தகைய விளையாட்டுக்களை தடை செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இதுகுறித்தான சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அரசு தரப்பில் இருந்து உடனடியாக பதில் அனுப்பப்பட்டது. இருப்பினும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

பிரிவு 162 என்ன சொல்கிறது?

இந்நிலையில் மீண்டும் பலர் தமிழகத்தில் இந்த விளையாட்டுக்களில் சிக்கி உயிரிழப்பை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து அரசியல் கட்சிகள் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசு பிரிவு 162-ஐ பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யலாம் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை யாருக்கு என்ன பவர் இருக்கிறது என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தந்த பிரிவுகளில் மாநில அரசு சட்டம் நிறைவேற்ற முடியும், மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுக்கள் மாநில அரசின் கீழ் தான் வருகிறது.

வழக்கறிஞர் கார்த்திக்கேயன்
வழக்கறிஞர் கார்த்திக்கேயன்

பிரிவு 226-ஐ பயன்படுத்தி உடைக்க முடியும்:

ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்றால் முதலில் சட்டசபையில் வைக்க வேண்டும். அங்கு அதிகம் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு தான் சட்டமாக மாறும். சட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றால் சட்டசபை கூடியிருக்க வேண்டும். எல்லா நேரத்திலும் சட்டசபை இருக்காது. குறிப்பிட்ட நேரத்தில் தான் இருக்கும். உடனடியாக சட்டம் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை வரும் போது சட்டசபை இல்லாமலும் இருக்கும்.

அப்போது பிரிவு 162-ஐ பயன்படுத்தி ஒரு சட்டத்திற்கான வரையறையை தயார் செய்து, கவர்னரிடம் கொடுக்கும் பட்சத்தில் அவர் கையெழுத்து போட்டுவிட்டால் அது சட்டமாக மாறிவிடும். ஆனால் பிரிவு 226-ன் படி நீதிமன்றம் இந்த சட்டத்தில் தவறு இருக்கிறதா இல்லையா என்று எப்போது வேண்டுமானாலும் விசாரணை மேற்கொள்ள முடியும். எனவே பிரிவு 162-ஐ பயன்படுத்தி சட்டம் இயற்றுவது பெரிய விஷயம் அல்ல. எப்படி செயல்படுத்துவோம் என்பதில் தான் பிரச்னை இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்
Representational Image

மத்திய அரசால் முடியாதது ஏன்?

இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள். எனவே அதை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை தான் கண்டறிய முடியும். ஆனால் மாநில அரசு ஒரு சட்டம் இயற்றியதும் 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை இந்த விளையாட்டுகளை நீக்க மாட்டார்கள். அவர்களுக்கு இதற்கான உத்தரவு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து வந்தால் மட்டுமே செய்வார்கள். முன்னதாக சீன 'ஆப்'க்களை அப்படி தான் தடை செய்தோம்.

அப்படிப் பார்த்தால் மத்திய அரசு தான், 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்'க்கு வழங்க வேண்டும். மத்திய அரசால் ஏன் இதை செய்ய முடியவில்லை என்றால் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் விளையாட்டுகள் இரண்டுவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படாத தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆன்லைன் கேம்
ஆன்லைன் கேம்

எடுத்துக்காட்டாக சீனா:

அப்படி இருக்கும்போது சட்டவிரோதம் என்று சொல்லப்படாத விஷயத்தை நீங்கள் எப்படித் தடைசெய்ய முடியும்? இதன்படிதான் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வழக்கு தொடரப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முதலில் சம்மந்தப்பட்ட விளையாட்டுக்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும்.

இதற்கு சீனாவை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். அங்கு விளையாட்டு செயலிகளுக்கு அனுமதி இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதன்படி நீங்கள் சம்மந்தப்பட்ட 'ஆப்' ஐ பதிவிறக்கம் செய்யலாம், விளையாடலாம். ஆனால் காலை 6 - இரவு 10 மணி வரை மட்டுமே விளையாட முடியும். அப்போது பகலில் மட்டுமே விளையாட முடியும். மேலும் ஒரு நாளைக்கு 10 டாலர் மட்டுமே செலவு செய்ய முடியும்.

சீனா
சீனா

நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்:

மாதத்திற்கு 150 டாலர் மட்டுமே செலவிட முடியும். அதற்கு மேல் செலவு செய்ய முடியாது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும். இந்த கட்டுப்பாடுகளை உருவாக்கி அதை மக்களிடம் கொடுக்காமல், சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் கொடுத்து விட்டார்கள். அப்போது இந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் முதலில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, அதை மீறுவோர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.