Published:Updated:

`பா.ஜ.க-விடம் எச்சரிக்கையாகவே இருங்கள்!' - அமைச்சர்களை அலர்ட்டாக்கிய உத்தவ் தாக்கரே

``இந்த அரசாங்கத்தின் வலிமையை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான தூரத்தை இந்த அரசு சென்றடையும்" என்று உத்தவ் தாக்கரே அமைச்சர்கள் மத்தியில் பேசினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆட்சி அமைத்து ஒருமாதம் ஆன நிலையில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி மகாராஷ்டிராவின் அமைச்சரவையை விரிவுபடுத்தினார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களை முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று சந்தித்துப் பேசினார்.

அமைச்சரவை
அமைச்சரவை

அமைச்சர்களின் மத்தியில் உத்தவ் தாக்கரே பேசுகையில், ``பா.ஜ.க-விடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களையும் இந்த ஆட்சியையும் இழிவுபடுத்த பா.ஜ.க-வினர் முயற்சி செய்வார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்துவிடக் கூடாது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பா.ஜ.க தன்னுடைய தந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது. கடுமையாக நாம் உழைக்க வேண்டும். பா.ஜ.க-வின் செயல்களால் நமது கவனத்தை திசை திருப்பிவிடக் கூடாது. இந்த அரசாங்கத்தின் வலிமையை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான தூரத்தை இந்த அரசு சென்றடையும்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``பா.ஜ.க தனது முழுமையான பலத்துடன் பிரச்னைகளை உருவாக்க முயற்சி செய்யும். பிரச்னைகளை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை" என்றார். ``நீங்கள் அமைச்சர்கள், பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக எழும் பிரச்னைகளுக்கு தேவையில்லாமல் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது" என்று துணை முதல்வர் அஜித் பவார் பேசினார்.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

``பா.ஜ.க ஏற்கெனவே கடன் தள்ளுபடி பிரச்னையைக் கையிலெடுத்து எங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. எங்களுடைய அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுகிறது. அமைச்சரவையில் உள்ளவர்கள் வெவ்வேறு பின்புலம் மற்றும் கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து உழைப்போம். மாநிலத்தின் நலனையே மனதில் வைத்திருக்கிறோம்" என்று கூட்டத்துக்குப் பின் அமைச்சர் ஒருவர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.