Published:Updated:

ஒரு ரெக்வொஸ்ட்... அதேநேரம் ஒரு வார்னிங்.. முரளிதரராவ் - எடப்பாடி சந்திப்பில் என்ன நடந்தது?!

முரளிதரராவ்
முரளிதரராவ்

இந்தச் சந்திப்புகளில் அதுகுறித்து பேசப்படவில்லை என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.....

தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அதேநேரம், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்துப் பேசினர். ராஜ்யசபா சீட் கேட்டு இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் சிஏஏ விவகாரம் குறித்தும் இந்த மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்தச் சந்திப்புகளில் அதுகுறித்து பேசப்படவில்லை என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில். இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முரளிதர ராவ் தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ராஜ்யசாபா எம்.பி சீட் குறித்து பேசப்படவில்லை. மாறாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்தச் சட்டங்கள் நிறைவேறுவதற்கு அ.தி.மு.க முழுமையான ஆதரவைத் தர வேண்டும் என்ற அஜெண்டாவே சந்திப்பின் அடிநாதமாக இருந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றோ, திரும்பப் பெற வேண்டும் என்றோ கோரிக்கைகள் எதையும் வைக்க வேண்டாம் எனவும் அந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. அப்படி உங்களுக்கு இருக்கும் அதிருப்திகளை எங்களிடம் தெரிவியுங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் அதற்குத் தீர்வு காணலாம். மற்றபடி ஊடகங்களிடம் சொல்வதோ, பொதுவெளியில் பேசுவதோ வேண்டாம் என்றும் முரளிதர ராவ் கூறியிருக்கிறார்.

உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் மத்திய அரசுக்கு எதிராக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலை நீடித்தால் நாங்கள் பிரஷர் கொடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். வரும் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட இருக்கும்நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு சிறப்பான சட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் நீங்களே வரவேற்கும் விதத்தில் அவற்றில் சில மசோதாக்கள் இருக்கும் எனவும் முரளிதர ராவ், எடப்பாடி பழனிசாமியிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அதேபோல், ராஜ்யசபா எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பில் தி.மு.க - காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். கூட்டணிக் கட்சியான தங்களை ஆலோசிக்காமல் வேட்பாளரை தி.மு.க தரப்பில் திடீரென அறிவித்துவிட்டதாகக் கருதுகிறார்களாம் தமிழகக் காங்கிரஸ் கமிட்டியினர். மூன்று இடங்களில் ஒன்றை கே.எஸ்.அழகிரி அல்லது பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரில் ஒருவருக்குக் கேட்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்தத் தகவல் தி.மு.க கூட்டணியிலும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு