Published:Updated:

`டி.டி.வி-யை நம்பி வீணாய்ப் போனோம்; எடப்பாடி வீறுநடை போடுகிறார்!'- முதல்வரை சந்தித்த புகழேந்தி

``சின்னம்மா இந்த வெற்றியைத்தான் விரும்பினார். நான் மனமார வாழ்த்து சொல்லுவதற்காக வந்தேன். முதல்வரை வீட்டில் சந்தித்து வாழ்த்தினேன்.''

புகழேந்தி
புகழேந்தி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனுக்கும், செய்தி தொடர்பாளர் புகழேந்திக்கும் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவருடைய வீட்டில் புகழேந்தி சந்தித்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர்
முதல்வர்
எம்.விஜயகுமார்

சேலம் திருமகள் பைபாஸ் அருகே உள்ள முதல்வரின் வீட்டுக்குள் சென்று முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த பெங்களூரு புகழேந்தி, ``எங்க மாமியார் வீடு சேலத்தில் இருக்கிறது. தீபாவளிக்கு அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் நெஞ்சார்ந்த இதயபூர்வமாக முதல்வருக்கு வாழ்த்துகளைக் கூறினேன். அம்மாவுக்காக ஶ்ரீரங்கம் தொகுதியில் பணியாற்றினேன். அப்போது 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டோம். அதேபோன்று தற்போது இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அம்மா இருந்திருந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமோ அந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர்.

`டி.டி.வி தினகரன் சிப் என்னிடம் இருக்கிறது; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்!’ - கொந்தளித்த புகழேந்தி

இப்போது நான் அ.தி.மு.க-வில் சேர்வதற்காக வரவில்லை. வாழ்த்துச் சொல்லவே வந்தேன். இந்த வெற்றி தொடர வேண்டும். சின்னம்மா இரண்டு காரியங்களைச் செய்துவிட்டுச் சென்றார்கள். துணைப் பொதுச் செயலாளர் பதவி ஒருவரிடம் கொடுத்தார். அது தற்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். ஆட்சி பொறுப்பை முதல்வரிடம் ஒப்படைத்தார். ஆட்சிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் வீறு நடைபோட்டு வெற்றி பெற்றிருக்கிறது. அண்ணன் எடப்பாடி பழனிசாமியை இன்று நேற்றல்ல 35 ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரிக்கல் பொருள்கள் வாங்குவதற்குப் பெங்களூரு வருவார். அப்போதிலிருந்து எனக்கு முதல்வரை நன்றாகத் தெரியும்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனை நம்பி நாங்கள் வீணாகப் போனோம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி. யுத்த காலத்தில் வரலாறு காணாத அளவு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. சின்னம்மா இந்த வெற்றியைத்தான் விரும்பினார். நான் மனமார வாழ்த்து சொல்லுவதற்காக வந்தேன். முதல்வரை வீட்டில் சந்தித்து வாழ்த்தினேன். அவர் நன்றி சொன்னார். `மாமியார் வீட்டுக்கு வந்தீர்களா' என்றார். ஆமாம் என்றேன். அவரிடம் நான் அரசியல் எதுவும் பேசவில்லை. நான் அ.தி.மு.க-வில் இணைவதாக இருந்தால் உங்களிடம் சொல்லுவேன். நாங்கள் அ.ம.மு.க-வுக்காக எவ்வளவு உழைத்தோம். உழைப்பைப் பற்றி தெரியாதவர் டி.டி.வி.தினகரன்'' என்றார்.