Published:Updated:

`செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் புகழேந்தியா?' - `அமைதி’ புகழேந்தியின் பதில்

ஒவ்வொரு சிறைச் சந்திப்பின்போதும் தினகரனுடன் புகழேந்தியும் உடன் சென்றுவந்தார். கடந்த 2 சந்திப்புகளிலும் புகழேந்தியைத் தவிர்த்துவிட்டுத்தான் தினகரன் செல்கிறார்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

சசிகலாவை இன்று சிறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். `செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் இணையப்போகிறார். அந்தளவுக்குத் தினகரனின் செயல்களால் கொதித்துப் போயிருக்கிறார் புகழேந்தி' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.

தினகரன்
தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவை சந்திக்கச் சென்றார் தினகரன். அவருடன் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளர் திருச்சி மனோகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தஞ்சை ரங்கசாமி, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் உட்பட உறவினர்கள் சிலரும் உடன் சென்றனர். இந்தச் சந்திப்பில், சசிகலாவை வெளியே கொண்டு வருவது தொடர்பான சட்டரீதியான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சிறைச் சந்திப்பை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டி.டி.வி.தினகரன்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம், அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற நிலைப்பாடு போன்ற கேள்விகளுக்கெல்லாம் நழுவியபடியே பதில் அளித்த தினகரனிடம், பெங்களூரு புகழேந்தி குறித்துக் கேட்கப்பட்டது. `கடந்த சில நாள்களாகப் பெங்களூரு புகழேந்தி தென்படுவதில்லை. அவர் வேறு கட்சிக்குப் போகப்போவதாகச் சொல்கிறார்களே?' எனக் கேட்டபோது, `அதை அவரிடமே கேளுங்கள்' எனக் கூறவே, `செந்தில் பாலாஜி பற்றிக் கேட்டபோதும் தங்க தமிழ்ச்செல்வன் பற்றிக் கேட்டபோதும் இப்படித்தான் சொன்னீர்கள். அவர் வேறு கட்சிக்குப் போகப்போவது உண்மையா, பொய்யா?' எனக் கேட்டபோது, `என்னுடைய நண்பரைப் பற்றிக் கேட்கிறீர்கள். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரிடம் பேசி ஒரு வாரம் ஆகிவிட்டது' எனக் கூறியிருக்கிறார்.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

தினகரனின் இந்தப் பதில் புகழேந்தி ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன். அந்தக் காலகட்டத்தில் அவருக்காகப் புகழேந்தி நடத்திய போராட்டங்களை அ.ம.மு.க தொண்டர்கள் அறிவார்கள். டெல்லியில் போராட்டம் நடந்தபோது வெற்றிவேல் மட்டுமே கலந்துகொண்டார். பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் எங்கே போனார் எனத் தெரியவில்லை. தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்கசாமி கலந்துகொள்ளவில்லை. இவர்களைத்தான் தனக்கு அருகில் வைத்திருக்கிறார் தினகரன். கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்தும் அவர் சசிகலாவிடம் ஆலோசிப்பது கிடையாது. வேலூர் மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். எந்தக் கட்சியின் வெற்றிக்காக தினகரன் வழிவிட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்" எனக் கொதித்தவர்கள்,

"மூன்று வாரங்களுக்கு முன்பு சிறையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், `இந்தக் கட்சியிலிருந்து புகழேந்தி வெளியேறுகிறார் என்றால் நான் நிச்சயமாக வருத்தப்படுவேன். கட்சிக்காக அவர் தன்னுடைய சொத்துகளையே கொடுத்தவர். அவர் வெளியேறினால் அதுகுறித்து அவரிடம் கேட்பேன்' என உருக்கமாகப் பேட்டியளித்தார். ஆனால், அடுத்தநாளே கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்திக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டிருந்தார். இது புகழேந்தி தரப்பினருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திவிட்டது. சிறை வளாகத்தில் புகழேந்தி குறித்து உருக்கமாகப் பேசிய தினகரன், அடுத்துவந்த நாள்களில் அவரைப் புறக்கணிக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வழக்கமாக, ஒவ்வொரு சிறைச் சந்திப்பின்போதும் தினகரனுடன் புகழேந்தியும் உடன் சென்றுவந்தார். கடந்த 2 சந்திப்புகளிலும் புகழேந்தியைத் தவிர்த்துவிட்டுத்தான் தினகரன் செல்கிறார்" என விவரித்தவர்கள்,

சசிகலா
சசிகலா

"அ.ம.மு.க பொதுச் செயலாளராகத் தினகரன் பதவியேற்றதில் இருந்தே இந்த முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. ஆனால், அவை அனைத்தும் மறைமுக பனிப்போராகவே இருந்து வந்தது. இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய புகழேந்தியும், `அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக ஆகிவிட்டார் தினகரன். அவரைத் தலைவராகவும் நீண்டகால நண்பராகவும் பார்த்து வருகிறேன். அவர் எந்த உயர் பதவிக்குச் சென்றாலும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்த்துகள் உண்டு. அதேநேரத்தில், `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை சசிகலா வழிகாட்டுதலுடன் மீட்டெடுப்பதே லட்சியம்' என்ற முழக்கத்தின் அடிப்படையில் தற்காலிக ஏற்பாடாகத்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கினோம். `கட்சியை மீட்போம், இரட்டை இலையை மீட்டெடுப்போம்' என முழக்கமிட்ட தினகரனின் வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன.

சின்னம்மா வழியில் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதில் எந்தவித சுணக்கமும் இல்லை. இதை அடிப்படையாக வைத்து என்னுடைய பணிகள் தொடரும்' எனப் பேசியிருந்தார். இந்தப் பேச்சை தினகரன் ரசிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகப் புகழேந்தியைக் கட்டம் கட்டும் வேலைகளையும் அவர் தொடங்கினார். அதுதான் இந்தளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. தினகரனின் வார்த்தைகளால் கொதித்தவர், `இந்தக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னிடம் விளையாண்டால் நன்றாக இருக்காது' எனவும் கொதித்தார் புகழேந்தி. மாற்றுக் கட்சிக்குச் செல்வது குறித்த சிந்தனை தற்போது அவரிடம் இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்" என்கின்றனர் உறுதியாக.

புகழேந்தி
புகழேந்தி

தினகரனின் கருத்து தொடர்பாக பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். "மூன்று வாரங்களுக்கு முன்னால் இதே இடத்தில் நின்றுகொண்டு தினகரன் சொன்ன பதிலையும் இன்று அவர் தெரிவித்திருக்கும் பதிலையும் நினைத்துப் பார்க்கிறேன். தற்சமயம், நான் அமைதியாக இருக்கிறேன். அவ்வளவுதான்" என்றதோடு முடித்துக் கொண்டார்.