Election bannerElection banner
Published:Updated:

`திடீர் பதவி, தினகரனுக்கு `செக்' வைக்கவா?- புகழேந்தி களமிறக்கப்பட்ட பின்னணி

பன்னீர், தினகரன், எடப்பாடி
பன்னீர், தினகரன், எடப்பாடி

``தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பத்திரிகை பேட்டிகளில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசவேண்டும். அதோடு, தினகரன் எப்படிப்பட்டவர், ஆர்.கே நகர் விவகாரம் ஆகியவற்றை பத்திரிகையின் வாயிலாகப் பேசவேண்டும் என்பது கூடுதல் அறிவுறுத்தல்''.

கொரோனா விவகாரத்தால் தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகளும் வீதியில் இறங்கி பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், சத்தமே இல்லாமல் பெங்களூரு புகழேந்தியை செய்தித்தொடர்பாளராக அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. களத்தில் அமைதியாக இருந்துவந்த தினகரனும் ஆளும்கட்சியை எதிர்த்து குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில், புகழேந்தியைக் களம் இறக்க என்ன காரணம் என்று பரபரப்பான பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளன.

டி. டி. வி. தினகரன்,  புகழேந்தி
டி. டி. வி. தினகரன், புகழேந்தி

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டவர், பெங்களூரு புகழேந்தி. அ.ம.மு.க தொடங்கப்பட்டபோது, அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார். ஒருகட்டத்தில், பொதுச்செயலாளர் தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. அதனால் கடந்த ஆண்டு அ.ம.மு.க-வில் இருந்து விலகினார் புகழேந்தி. பின்னர், ``அ.தி.மு.க-வில் சேரத் தயாராக இருக்கிறேன், முதல்வர் நேரம் கொடுத்தால் அவரை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்று பத்திரிகைகளில் பேட்டிகொடுத்தார். ஆனால், ஓ.பி.எஸ்ஸுக்கு உடன்பாடு இல்லையாம். காரணம், சசிகலா வகையறாக்களிடம் ஓ.பி.எஸ் எப்படி நெருக்கமாக இருந்தார் என்பதை முழுமையாகத் தெரிந்தவர் என்பதால், ஆரம்பம் முதலே அவரை கட்சியில் இணைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் என்கிறார்கள்.

ஆனால், தினகரனுக்கு செக் வைக்க புகழேந்தி தான் சரியான துருப்புச் சீட்டு என ஓ.பி.எஸ்ஸிடம் சமரசம் பேசியபிறகு, வேறு வழியில்லாமல் ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஜனவரி மாதம் அ.தி.மு.க-வில் இணைந்தார் புகழேந்தி. அதன் பிறகு, அவருக்கு கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பதவி வழங்கப்படாமல் இந்தநிலையில், நேற்று திடீரென கட்சிப் பதவி வழங்கப்பட்டது. அசாதாரண சூழல் நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவருக்குப் பதவி கொடுக்க என்ன காரணம் என்று விசாரித்தோம்.

’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!
’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!

``டி.டி.வி.தினகரனுக்கு தளபதிபோல் செயல்பட்ட பெங்களூரு புகழேந்தி, தற்போது தீராத பகையாளியாக மாறிவிட்டார். இதைத்தான் அ.தி.மு.க தலைமை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறது" என்கிறார்கள், அரசியல் உள்விவகாரம் அறிந்தவர்கள். ``நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க படுதோல்வி அடைந்தது. அதோடு, தினகரனின் அதிரடி முடிவுகளால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, பெங்களூரு புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சசிரேகா என தினகரனின் படைத்தளபதிகளாக வலம் வந்தவர்கள் எல்லோரும் கட்சியிலிருந்து வெளியேறியது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தினகரனால் பாதிக்கப்பட்ட புகழேந்தி சிறையிலிருக்கும் சசிகலாவிடம் மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார். அதன்பின்பு, சசிகலா தினகரனிடம் கடுமையாக முகத்தைக் காட்டியதோடு, கட்சி விகாரத்தில் ஒருங்கிணைத்துப் போகவேண்டும் என்று கறாரான உத்தரவைப் பிறப்பித்தால்தான் அவர் கொஞ்சக் காலம் அமைதியாக இருந்தார்.

பன்னீர், தினகரன், எடப்பாடி
பன்னீர், தினகரன், எடப்பாடி

இந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்ட விவகாரம், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சிய பதில்களால் அ.தி.மு.க தலைமை மீது அதிக அளவில் கெட்ட பெயர்கள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதை வைத்து எதிர்க்கட்சிகள் உட்பட, தினகரனும் ஆளும் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

"கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் உலகமே நெருக்கடியான சூழலைச் சந்தித்து வரும்போது, மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில் தமிழக அரசு எண்ணிலடங்காத குழப்பங்களுடன் இயங்குவது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பில் தொடக்கம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக ஆட்சியாளர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று அரசுக்கு எதிராக தினகரன் பேச ஆரம்பித்துள்ளார்.

``எதிர்க்கட்சிகள் பேசுவதை ஆளும் கட்சியினர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தினகரன் பேசுவதுதான் அவர்களுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது. அவரது பேச்சைத் தடுக்க வேண்டும் என்றால் புகழேந்தியைக் களத்தில் இறக்க வேண்டும் என்ற தகவலை முக்கிய அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முதல்வரும் ஓகே சொன்ன பின்புதான், அவருக்கு செய்தித்தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பத்திரிகை பேட்டிகளில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளைப் பற்றி புகழ்ந்து பேசவேண்டும் என்பதுதான் அவருக்குக் கொடுத்த அறிவுரை.

புகழேந்தி
புகழேந்தி

அதோடு, தினகரன் எப்படிப்பட்டவர், ஆர்.கே நகர் விவகாரம் போன்ற தகவல்களைப் பத்திரிகையின் வாயிலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கூடுதல் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், தினகரனுக்கு செக் வைப்பதற்காகப் புகழேந்தியை களத்தில் இறக்கியிருக்கிறார்கள். இனி, தினகரனின் உள்விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரப்போகிறது" என்றனர் நம்மிடம் பேசிய சீனியர்கள் சிலர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு