Published:Updated:

பறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி?

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை மத்திய அரசு பதவிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பகத்சிங் கோஷியாரி
பகத்சிங் கோஷியாரி ( Twitter / Governor of Maharashtra )

ஒரு வழியாக, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பரபரப்பு காட்சிகள் ஓய்ந்து, புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிர அரசியல் குழப்பத்துக்கு அஜித் பவார் ஒரு காரணமென்றால், ஆளுநர் பகத்சிங் கோஷியாரியும் ஒரு காரணம். இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை பதவியிலிருந்து நீக்க மோடி முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிர அரசியலில், உச்சக்கட்ட குழப்பம் நவம்பர் 22-ம் தேதி இரவு தொடங்கியது. அன்று, அஜித் பவார், பட்னாவிஸ் இருவருமே உறங்கவில்லை. ஆளுநரையும் உறங்கவிடவில்லை. `ஆதரவுக் கடிதங்களுடன் வந்துவிடுகிறோம் ' என்று அஜித் பவாரும் தேவேந்திர பட்னாவிஸும் ஆளுநரிடத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், சொன்னதுபோல நள்ளிரவு 12.10 மணிக்கு (23-ம் தேதி) ஆளுநரைச் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட அஜித் பவாரிடத்தில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று இருந்தது. அதை ஆதரவுக் கடிதம் என்று மகாராஷ்டிர ஆளுநரிடத்தில் கொடுத்தார், அஜித் பவார்.

ஆளுநர் பகத்சிங் கோஷியாரி
ஆளுநர் பகத்சிங் கோஷியாரி
Twitter / Governor of Maharashtra

அப்போதே, மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார் ஆளுநர். குடியரசுத்தலைவரும் பிரதமரும், ஆளுநரின் பரிந்துரையைடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிரத்திலிருந்து குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 23-ம் தேதி காலை 7.50 மணிக்கு, தேவேந்திர பட்னாவிஸ் தன் சகா அஜித் பவாருடன் முதல்வராகப் பதவியேற்றுக்கொள்கிறார். `ஆஹா... அமித் ஷாவின் உத்தியே உத்தி' என்று பாரதிய ஜனதாவினர் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், வெறும் 80 மணி நேரத்தில், தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி முடிவுக்கு வர, `ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப்போனதே' என்று நொந்துகொண்டனர் பாரதிய ஜனதா கட்சியினர். இந்த விவகாரத்தில், மக்களிடத்தில் கெட்ட பெயரையும் பாரதிய ஜனதா சம்பாதித்துக்கொண்டது என்பதையும் மறுக்க முடியாது!

மகாராஷ்டிர விவகாரத்தில், ஆளுநர் செய்த தவறில் முதன்மையானது, அஜித் பவார் கொடுத்த கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்துசெய்ய பரிந்துரைத்தது. அடுத்ததாக, அதிகாலை 7.50 மணிக்கே பதவிப் பிரமாணம் செய்துவைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ், நல்ல நாள், நேரம் குறித்து வான்கடே மைதானத்தில் பிரமாண்டமாக நடந்த விழாவில் பதவியேற்றார். மத்தியில் தங்கள் ஆட்சி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வளர்ந்த ஆளுநர் பகத்சிங்குக்கு பட்னாவிஸ் பல நெருக்கடிகளைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. `விடிவதற்கு முன்னரே தங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு' ஆளுநருக்கு பட்னாவிஸ் அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு நிகழ்வு
தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு நிகழ்வு

ஆளுநரோ, அதை மறுத்து `காலை 6 மணிக்கு முன்னதாக தன்னால் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது' என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, காலை 7.50 மணிக்கு பட்னாவிஸ் , அஜித் பவார் பதவியேற்றனர். காலை 5.47 மணிக்குத்தான் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்ய கையொப்பமிடுகிறார் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். `மத்தியில் தங்கள் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது' என்ற எண்ணத்தில்தான் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநருக்கு இத்தகையை நெருக்கடியைக் கொடுத்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் பேச்சைக் கேட்டு, விடிவதற்குள் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததால் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும்.

``மாட்டாமல் இருந்திருந்தால் தமிழின் சிறந்த படத்தைத் தயாரித்திருப்பேன்'' - திருவாரூர் முருகன் பகீர்!

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை அணுகின. வழக்கு விசாரணையின் போது, சிவசேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், `மகாராஷ்டிர ஆளுநர் தீய நோக்கத்துடன் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளார்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். நீதிமன்ற விவாதத்தின் போதே, `குடியரசுத்தலைவர் ஆளுநர் பகத்சிங்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும்' எனவும் கபில்சிபல் ஆவேசம் காட்டினார்.

தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆளுநர்
தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆளுநர்
`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

சிவசேனாவோ 162 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் பவனை முற்றுகையிடப் போவதாக சொன்னது. பலவிதங்களில் மகாராஷ்டிரத்தில் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர்.

பகத்சிங் கோஷ்யாரி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பா.ஜ.க-வில் போட்டியிட்டு உத்தரகாண்ட் முதல்வராகவும் இருந்தார். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர் இத்தனை விஷயங்களை செயல்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. எனினும் கண் துடைப்பாகவேனும் மத்திய அரசு கோஷ்யாரியை மஹாராஷ்டிராவில் இருந்து மாற்றும் என்றும் இவருக்கு பதிலாக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்கப் போவதாகவும் வடமாநில ஊடகங்கள் பதிந்து வருகின்றன.