கட்டுரைகள்
Published:Updated:

பாரத் ஜோடோ யாத்திரை... பலன் தருமா காங்கிரஸுக்கு?

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

3,500 கி.மீட்டர்... 150 நாள்கள்...

`ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடைக்கோடி கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 3,500 கி.மீட்டராக நீண்ட பாதயாத்திரை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகரில் முடிவடையவிருக்கிறது. சுமார் 150 நாள்களாகப் பல்வேறு தடைகள், இயற்கை இடர்கள், பா.ஜ.க-வின் விமர்சனங்களைச் சமாளித்து, பல்வேறு மாநில மக்களையும் சந்தித்துவிட்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரம்மாஸ்திரமாகக் கருதப்படும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ சாதித்தது என்ன... ராகுல் காந்தியின் இமேஜ் கூடியிருக்கிறதா... ஓர் விரிவான அலசல்!

பாரத் ஜோடோ யாத்திரை...
பலன் தருமா காங்கிரஸுக்கு?

“நாட்டின் குரலைக் கேட்கவே பயணம்!”

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து, மீட்டுருவாக்கம் செய்வதற்காக கடந்த ஆண்டு, மே மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் `காங்கிரஸ் சிந்தனை அமர்வு’ மாநாடு நடத்தப்பட்டது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், 2024 தேர்தலுக்கான புதிய தேர்தல் வியூகங்கள் வகுப்பது, கட்சிக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியை வலுப்படுத்துவதற்காக மூன்று முக்கியக் குழுக்களை உருவாக்கி, அதற்கான பணிகளையும் பட்டியலிட்டார். அவற்றில் ஒன்றுதான் அகில இந்திய அளவிலான ‘பாரத் ஜோடோ’ யாத்திரை. அதன்படி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தனது பாத யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி.

பாரத் ஜோடோ யாத்திரை...
பலன் தருமா காங்கிரஸுக்கு?

அரசியல் + ஆன்மிக யாத்திரை?!

கேரளாவில் படகுப்போட்டி, கர்நாடகாவில் லிங்காயத் மடாதிபதிகளுடன் சந்திப்பு, தெலங்கானா பழங்குடி மக்களுடன் இணைந்து பாரம்பர்ய நடனம், மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மரியாதை, மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜயினி மஹாகாலேஸ்வர் கோயிலில் சாமி தரிசனம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்மிகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் யாத்திரையை வடிவமைத்துக்கொண்டார் ராகுல். பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பால், இந்த வியூகம் அவருக்கு ஓரளவு கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகுலின் திடீர் ஆன்மிகச் செயல்பாடு களால், ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், மூத்த அறங்காவலர் கோவிந்த் தேவ் கிரி போன்றவர்களே ராகுலின் யாத்திரையைப் பாராட்டிப் பேசியதோடு, தங்கள் ஆதரவையும் வழங்கினார்கள். இதையெல்லாம் சற்றும் எதிர்பாராத பா.ஜ.க-வினர், ``இந்துக்களை அவமானப்படுத்தினால், இந்து மக்களிடமிருந்து ஒரு ஓட்டுக்கூடக் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட காங்கிரஸாருக்கு இப்போது இந்து தர்மம் நினைவுக்கு வந்திருக்கிறது” எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பாரத் ஜோடோ யாத்திரை...
பலன் தருமா காங்கிரஸுக்கு?

பெருகிய ஆதரவு; கைகோத்த பிரபலங்கள்!

இந்த விமர்சனங்கள் ராகுல் காந்தியின் பாதையில் பெரிய தடை எதையும் போடவில்லை. பொதுமக்கள், மாணவர்கள், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் தாண்டி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க எம்.பி கனிமொழி, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர், இசையமைப்பாளர்கள், திரைப்பட நடிகர் நடிகைகள் எனப் பல்வேறு அரசியல் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல ஆளுமைகளும் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் கரம் கோத்தனர். இதை பா.ஜ.க எதிர்பார்க்கவில்லை.

‘‘இந்த யாத்திரையில் நிகழ்ந்திருக்கும் பல மாற்றங்களில் முக்கியமானது, ராகுல் எனும் ஆளுமைக்குள் நிகழ்ந்திருக்கும் உள்முக மாற்றம்” என்கிறார்கள் ராகுலுக்கு நெருக்கமானவர்கள். அதன் வெளிப்பாடாக, யாத்திரையின் இடையே பத்திரிகை யாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “அதிகமான பொறுமையையும், மற்றவர்களின் கருத்துகளை நிதானத்துடன் கேட்கக்கூடிய பக்குவத்தையும் இந்த யாத்திரை எனக்குக் கொடுத்திருக்கிறது. உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறாரோ, அந்த ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன். அந்த ராகுல் என் நினைவில் இல்லை. அவர் மறைந்துவிட்டார்” என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரை...
பலன் தருமா காங்கிரஸுக்கு?

மாற்றங்கள் தேர்தலில் எதிரொலிக்குமா?

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “இந்த யாத்திரை மக்கள் மத்தியில் வரவேற்பையும், ராகுல் காந்திக்கு நல்ல இமேஜையும் பெற்றுத் தந்திருக்கிறது. கூட்டணிக் கட்சியினர், ஏன்... சில எதிர்க் கருத்துகொண்ட தலைவர்களேகூட பாராட்டும்விதமாக யாத்திரை முடிந்திருக் கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் எந்த மாற்றமும் இல்லை. கட்சிக்குள்ளாக நடக்கும் `கோஷ்டிப்பூசல்’ எள்ளளவும் குறைந்த பாடில்லை. அத்தனை தரப்பின் ஆதரவு இருந்தாலும், முதலில் கட்சிக்காரர்களின் ஒற்றுமையில்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பது சாத்தியமில்லை” என்கிறார்கள்.

ஸ்ரீநகரில் ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க, நாடு முழுவதுமுள்ள 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது காங்கிரஸ். ‘பாரத் ஜோடோ’ யாத்திரை காங்கிரஸ் கட்சியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறதா என்கிற கேள்விக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் விடையளிக்கும்!