Published:Updated:

ஜும்மா மசூதியில் `பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்!’ - ஜாமீன் விதிமுறைகளை மீறினாரா?

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

``நான் அம்பேத்கரை பின்பற்றுபவன். நான் வழக்கறிஞரும்கூட. சட்டத்துக்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை. நம்முடைய நாட்டிலேயே அடிமைகளைப்போல நாம் நடத்தப்படக் கூடாது” என்று சந்திரசேகர் ஆசாத் பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள ஜும்மா மசூதியிலிருந்து ஜந்தர் மந்தர் வரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு `பீம் ஆர்மி’ அமைப்பு அழைப்பு விடுத்தது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் பேரணி நடைபெறுமா என்ற குழப்பத்துக்கு மத்தியிலும் மதப்பாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள, இந்தப் பேரணி நடைபெற்றது. இதில், அரசியலமைப்பின் பிரதியுடன் தலைமை தாங்கிய `பீம் ஆர்மி’ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்பட்டார்.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

ஒரு மாதத்துக்குப் பிறகு நேற்று ஜாமீனில் வெளியாகியுள்ளார். தலைநகரிலிருந்து நான்கு வாரங்களுக்கு வெளியேற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜும்மா மசூதியில் நடைபெறும் தொழுகையிலும் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திரசேகர் ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அமைதியாகப் போராடுவதுதான் நம்முடைய பலம். இந்தப் போராட்டம் இஸ்லாமியர்களால் மட்டும் வழி நடத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பெருமளவில் இணைய வேண்டும். ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். குறிப்பாக, இஸ்லாமிய பெண்கள் போராட்டத்துக்கான ஆன்மாவாக இருந்துள்ளனர். 370 சட்டம், முத்தலாக், அயோத்தி தீர்ப்பு ஆகிய பிரச்னைகளின்போது பேசாத இஸ்லாமிய பெண்கள், தேசத்தை உடையச்செய்யும் சட்டம் ஒன்று வந்தபோது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்” என்றார்.

`டெல்லியை உலுக்கிய பேரணி... ஒற்றைத் தலைமை!' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

தொடர்ந்து அவர் பேசும்போது, ``நான் அம்பேத்கரை பின்பற்றுபவன். நான் வழக்கறிஞரும்கூட. சட்டத்துக்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை. நம்முடைய நாட்டிலேயே அடிமைகளைப்போல நாம் நடத்தப்படக் கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் பலம்பெற வேண்டும். அப்போதுதான், நாம் ஒவ்வொருவரும் இந்த சட்டங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்பதை மத்திய அரசு உணரும்.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

எனது வேலைதான் எனது வீடு. இந்த சமூகம்தான் எனது குடும்பம். ஏழைகள், பழங்குடிகள், பட்டியலின மற்றும் இஸ்லாமிய மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பேன். சமூகத்தில், தங்களுடைய பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க போதிய வாய்ப்பு கிடைக்காத மக்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுப்பேன். நான் மோடியை மதிக்கிறேன். மோடி அரசியலமைப்பை மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Vikatan

சந்திரசேகர் ஆசாதுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி காமினி லாவ் ரவீந்திரநாத் தாகூரின் `Where the Mind is Without Fear’ என்ற வரியை மேற்கோள்காட்டி, ``குடிமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த அடிப்படை உரிமை உள்ளது. இதை அரசால் தடுக்க முடியாது. ஆசாத் வன்முறையில் ஈடுப்பட்டதுக்கோ தவறான முறையில் பேசியதுக்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவர் அரசியலமைப்பின் முன்னுரையைதான் படித்துள்ளார். இந்தியாவின் புனிதமான ஆவணம் இது” என்று பேசியுள்ளார்.

ஜாமீன் தொடர்பான அறிக்கை
ஜாமீன் தொடர்பான அறிக்கை

இந்நிலையில், ஜாமீனில் வெளியான சந்திரசேகர் ஆசாத்தின் ஜும்மா மசூதி வருகை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர், ஜாமீன் தொடர்பான விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஜாமீன் அறிக்கையில் நீதிமதி காமினி ``ஜும்மா மஸ்ஜித், ஜோர் பாக், குரு ரவிதாஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், ``திகார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த ஆசாத்துக்கு டெல்லியை விட்டு வெளியேற 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அவர் ஜும்மா மசூதியில் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை” என்று கூறியுள்ளனர்.

`குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள்!' - ஜே.பி. நட்டா #CAA
அடுத்த கட்டுரைக்கு