Published:Updated:

`இனி, அவரின் பாடலை மிஸ் பண்ணுவோம்' - மாநிலங்களவையில் கலங்கிய மைத்ரேயன், டி.ராஜா!

மைத்ரேயன்
மைத்ரேயன்

ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இந்த அவையில் காட்டப்படவில்லை. இந்த விஷயம் இன்று மட்டுமல்ல, என்றுமே என் நெஞ்சில் முள்ளாய் தைத்துக்கொண்டே இருக்கும்.

மூன்று முறை ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த மைத்ரேயன், சிபிஐ அகில இந்திய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள டி.ராஜா, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜுனன் உட்பட தமிழகத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவையில், இன்று அவர்கள் தங்கள் கடைசி உரையை கண்ணீர் மல்க நிகழ்த்தினர். மைத்ரேயன் பேசும்போது, ``அ.தி.மு.க வரலாற்றில் மூன்று பதவிக்காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு எம்பி நான் மட்டுமே. இதனை சாத்தியமாக்கியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு என்றும் விசுவாசம் உள்ளவனாக இருப்பேன். ராஜ்ய சபாவில் 14 ஆண்டுகால நீண்ட சேவை இன்றுடன் முடிகிறது.

மைத்ரேயன்
மைத்ரேயன்

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை எனக்கு இது அஸ்தமன நேரம். இந்த அவையைப் பொறுத்தவரை நான் ஒருவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். அவர், இந்த அவையில் என்னை ஒரு சகோதரரைப் போல வழிநடத்தியவர். அவர் வேறு யாருமில்லை. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான். விரைவில் உடல்நலம் பெற்று என்னைப் போல மேலும் சிலரை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறேன். இந்த 14 ஆண்டுகளில் தமிழர்களின் நலனுக்காக, மீனவர்களின் உரிமைக்காக, ஈழத்தமிழர்களின் நிலைகுறித்து ஒவ்வொரு முறையும் உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறேன். ஆனால், இன்று வரை என் மனதில் உறுத்துகிறது ஒரே ஒரு விஷயம்.

இந்த அவை, எத்தனையோ பேர் மறைவுக்கு, பேரிடர்களில் மறைந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டு தமிழ் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இரங்கல் தெரிவிக்கவில்லை. இரங்கல்கூட வேண்டாம், அவர்கள் இறந்ததை கவனத்தில்கூட எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் சோகமே. ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இந்த அவையில் காட்டப்படவில்லை. இந்த விஷயம் இன்று மட்டுமல்ல, என்றுமே என் நெஞ்சில் முள்ளாய் தைத்துக்கொண்டே இருக்கும். அதனால், நான் இறந்தால் எனக்காக இரங்கலோ, மௌன அஞ்சலியோ செலுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாகப் பேசினார். இதற்கிடையே, ரத்தினவேல் தமிழில் தனது உரையை நிகழ்த்தினார்.

டி.ராஜா
டி.ராஜா

டி.ராஜா பேசுகையில், ``மாநிலங்களவையில் இதுவே எனது கடைசி பேச்சாக இருக்கலாம். இந்த அவையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால், மக்கள் பணியில் இருந்து அல்ல. நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். பன்முகம் சார்ந்த நமது நாட்டில், மக்கள் சமூக ரீதியாகப் பிரிந்துகிடப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, வர்க்க ரீதியாக, சாதிய ரீதியா ஓரம்கட்டப்பட்டவர்களையும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த நாடாளுமன்றம், மக்களை மனிதர்களாகக் கருதி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரசியலமைப்பு, ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும். சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட வேண்டும்" என்று பேசினார்.

விடைபெற்ற இவர்களை அவையில் இருந்த மற்றவர்கள் வாழ்த்திப் பேசினர். அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, ``இவர்கள் அனைவரும் தமிழகம் தொடர்பாக, தேசியப் பிரச்னைகள் தொடர்பாக சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். விடைபெறும் அனைவரும் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, தேசத்துக்காக இன்னும் பல வருடங்கள் சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார். இதேபோல் பேசிய திருச்சி சிவாவும் சமாஜ்வாடி உறுப்பினர் ராம் கோபால் யாதவ்வும், மைத்ரேயனைக் குறிப்பிட்டு பேசினர். அதில், ``நாங்கள் இருவரும் குறுக்கு வாள்களாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பொதுவான பிரச்னையில் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம், செயல்பட்டோம்.

ரத்தினவேல்
ரத்தினவேல்

மைத்ரேயன் நன்றாகப் பாடக்கூடியவர் மட்டுமல்ல, இந்தி மற்றும் மராத்தி மொழி போன்ற பல்துறைத் திறன்கொண்டவர்" என்றார் திருச்சி சிவா. ராம் கோபால் யாதவ், ``நான் எப்போதெல்லாம் பாடல் கேட்க விரும்பினாலும் நானும் மைத்ரேயனும் சென்ட்ரல் ஹாலுக்குச் சென்றுவிடுவோம். நான் ஹம்மிங் செய்ய, மைத்ரேயன் முழுப்பாடலையும் பாடுவார். இனி அவரையும் அவரின் பாடலையும் மிஸ் செய்வேன். நான் மட்டுமல்ல இங்குள்ள எல்லோரும் மிஸ் பண்ணுவோம்" என உருக்கமாகப் பேசினார்.

பின் செல்ல