அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தின் வான்பரப்பிற்குள் நேற்று அனுமதிக்கப்படாத விமானம் ஒன்று தவறுதலாக நுழைந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள டெலாவேரின் ரெஹோபோத் கடற்கரையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அதிபர் ஜோ பைடன், அவர் மனைவி ஜில் பைடன் இருவரையும் அந்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிபரின் பாதுகாப்புக்கோ அவர் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு ஜோ பைடன், அவர் மனைவி இருவரும் மீண்டும் அவர்களது இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தை ஓட்டிய விமானியிடம் அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
