பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், கடந்த 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மது அருந்தி கைதாகுவோரின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1.27 லட்சம் பேர் இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு சட்டத்தை மீறியதற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 40,000 பேர் கைது செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 47,000 பேர் இந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கலால் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் சுனில் குமார் பீகார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மது அருந்துபவர்கள் பெரும்பாவிகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், ``மது அருந்துபவர்கள் மகா பாவிகள். அவர்களை இந்தியர்களாகவே நான் கருதமாட்டேன். மகாத்மா காந்தி மதுவைக் கடுமையாக எதிர்த்தார்.
அவரின் பேச்சை மீறுபவர்கள், அவரது கொள்கைக்கு எதிராக நடப்பவர்கள் பெரும்பாவிகள். சமீபத்தில் ஒருவர் மது அருந்தச் சென்று விஷ சாராயம் குடித்து மரணித்துள்ளார். மதுவிலக்கு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் யாரும் அதைப் பின்பற்றுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு முன்னதாக நீதிமன்றங்களிலும், சிறைகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நிதிஷ் குமார் அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்தநிலையில், நேற்று பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் தடை சட்டத் திருத்தம் 2022 கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில், மது அருந்துவோருக்கு நேரடியாகச் சிறைத் தண்டனை இல்லாமல், குற்றவாளியை ஒரு நீதிபதி முன் முன்னிறுத்தப்பட்டுக் குற்றத்தின் தீவிரம் கணிக்கப்பட்டு தண்டனை முடிவு செய்யப்படும். முதன்முறை தவறு செய்பவருக்கு அபராதமும் விதிக்கலாம், சிறைத் தண்டனையும் வழங்கலாம் எனச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.