Published:Updated:

பீகார்: கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு; நிதிஷ் அரசைச் சாடும் பாஜக!

நிதிஷ் குமார் ( ட்விட்டர் )

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக மாநில அரசை வலியுறுத்தியிருக்கிறது.

பீகார்: கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு; நிதிஷ் அரசைச் சாடும் பாஜக!

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக மாநில அரசை வலியுறுத்தியிருக்கிறது.

Published:Updated:
நிதிஷ் குமார் ( ட்விட்டர் )

பீகார் மாநிலத்தில் கடந்த 2016 ஏப்ரலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ‘மகாத்பந்தன்’அரசால் மது விலக்கு சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அங்கு தொடர்ந்து மது அருந்தி கைதாவோரின் எண்ணிக்கையும், கள்ளச்சாராயத்தால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பீகாரின் சரண் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்
கோப்புப் படம்

கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்கள் தொடர்பாக, சரண் மாவட்ட சிவில் சர்ஜனும், மருத்துவ அதிகாரியுமான டாக்டர் சாகர் துலால் சின்ஹா பேசுகையில், “செவ்வாய்க்கிழமை காலை முதல் சாப்ராவிலுள்ள மருத்துவமனைக்கு பலர் இறந்த நிலையில்தான் கொண்டுவரப்பட்டனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இறந்த அனைவரும் போதைப்பொருளை உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் உள்ளுறுப்புகள் முசாபர்பூரிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும்" என்று தெரிவித்தார்.

மது
மது

இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களுக்குச் சென்று, கள்ளச்சாராயம் வழங்கியவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திக்கவிருக்கின்றனர்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பீகார் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில், ``கள்ளச்சாராயத்தை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குற்றங்கள் அதிகரித்துவருவதால், அரசு தன்னுடைய மதுவிலக்கு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கோஷங்களை எழுப்பிவருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இது தொடர்பாக மத்திய பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங், "பீகாரில் ஒவ்வொரு நாளும் கள்ளச்சாராயத்தால் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். அதேநேரம் முதல்வர் நிதிஷ் குமார் தனது தோல்வியடைந்த கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார். அதனால் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நிதிஷ் குமார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வெற்றிபெறாத கொள்கையை மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

அதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ``பா.ஜ.க பீகாரில் ஆட்சியில் இருந்தபோதும் கள்ளச்சாராயத்தால் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை பா.ஜ.க நினைவில்கொள்ள வேண்டும். பா.ஜ.க தலைவர்கள் பலர் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றனர். பாசாங்குத்தனமாகச் சத்தம் போடாமல், மக்கள் மது அருந்துவதைத் தடுக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளும் அரசுக்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, "பீகாரில் மது அருந்துவது குற்றம் என்பதை பா.ஜ.க உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் மரணங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் அரசு மது அருந்துவதை ஆதரிப்பதற்குச் சமமாக இருக்கும்" எனக் கூறினார்.