சமீபத்தில் நடந்த ராம நவமி பேரணியின்போது பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று நாட்டையே பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பீகாரில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

ராம நவமி பேரணியில் வன்முறை:
கடந்த மார்ச் 31-ம் தேதி பீகாரில் நடைபெற்ற ராம நவமி பேரணியின்போது இரு மதப் பிரிவினரிடையே மோதல் வெடித்தது. குறிப்பாக, சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் வீடுகள், சாலையோரக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே ஷரீப், நளந்தா பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நீண்டன.
இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. காவல்துறை கட்டுப்பாடுகள், 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோதும்கூட சசாராம் பகுதில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 160-க்கும் மேற்பட்டோரை பீகார் காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
பரவும் போலி வீடியோக்கள்:
இந்த நிலையில், `கலவரம் காரணமாக பீகாரிலுள்ள இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவருவதாக' சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் போலி வீடியோக்களை பரப்பிவிட்டு பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தனர். இது குறித்துப் பேசிய பீகார் காவல்துறையினர், ``வன்முறையால் இந்துக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவருவதாகப் பரப்பப்படும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. அடிப்படை ஆதரமற்ற வதந்தி. எந்த மக்களும் தங்கள் பகுதிகளைவிட்டு வெளியேறவில்லை. இது போன்ற வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம்!" எனத் தெரிவித்திருக்கிறது.

ஐ.ஓ.சி வேதனை:
ராம நவமி வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), ``இந்தியாவில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில், இஸ்லாமியர்கள்மீது காழ்ப்புணர்ச்சியுடன் வன்முறைச் செயல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த மார்ச் 31-ம் தேதி பீகாரில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களின் மதரஸாவும், நூலகமும் எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற காழ்ப்புணர்ச்சி நிகழ்வுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதன் வெளிப்பாடாகவே இதைக் கருதுகிறோம். இது போன்ற செயல்களைத் தூண்டுபவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "ராம நவமி கொண்டாட்டத்தின்போது பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகம் குறிவைக்கப்பட்டதாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இந்தியாவின் நற்பெயருக்குச் சேதம் விளைவிக்கிறது.
இந்த அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வகுப்புவாத மனநிலை, இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டத்துக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவில் நடந்த பிரச்னைகளில் தவறான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.
அமித் ஷா ஆவேசம்:
இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, பீகாரில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,`` பீகாரின் ஷெரீப்பும், சசாராமும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் கலவரக்காரர்கள் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு மக்கள் கொல்லப்படுகிறார்கள். தோட்டாக்கள் சுடப்படுகின்றன. நான் காலையில் ஆளுநரை அழைத்துப் பேசினேன். பீகார் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருக்கு கோபம் வந்துவிட்டது. பீகாரை கலவரம் இல்லாத மாநிலமாக மாற்றவேண்டுமென்றால், இங்கிருக்கும் நாற்பது தொகுதிகளிலும் பா.ஜ.கவை வெற்றிபெறச்செய்யுங்கள். பீகாரில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் கலவரக்காரர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள்!" என ஆவேசமாகப் பேசினார்.

நிதீஷ் குமார் நடவடிக்கை:
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், ``வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறோம். இந்த வன்முறைச் சம்பவங்கள் இயற்கையானவை அல்ல! சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சிலர் இயற்கைக்கு மாறான ஒன்றை வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். இது குறித்து தீவிர விசாரணை நடத்தவும், பேரணி மோதல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்!" எனக் கூறியிருக்கிறார்.

கலவரத்துக்குப் பிறகு தேர்தல் என்பதுதான் ஒவ்வொருமுறையும் இங்கு பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வகுப்புவாதக் கலவரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவருகின்றன. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க-வின் `வாக்கு அறுவடை' இருக்கிறது' என்ற குற்றம்சாட்டும் சில அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.