Published:Updated:

பீகார்: சித்தப்பாவால் வீழ்த்தப்பட்ட சிராக் பஸ்வான்! - ராம் விலாஸ் பஸ்வான் கட்சியில் என்ன நடக்கிறது?

சிராக் பஸ்வான் - பசுபதி குமார்
சிராக் பஸ்வான் - பசுபதி குமார்

ஆறு எம்.பி-க்கள் உள்ள கட்சியில் ஐந்து பேர் சிராக் பஸ்வானின்  தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால், கடந்த சில தினங்களாகவே பீகார் அரசியல் களம் கொதிப்புடன் காணப்பட்டுவந்த நிலையில், உச்சகட்ட கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறியுள்ளது.

பீகாரில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த லோக் ஜன சக்தி கட்சி ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தநிலையில், மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அதையடுத்து, கட்சியை அவரது மகன் சிராக் பஸ்வான் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்தியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட தலைவர்கள் லோக் ஜனசக்தியிலிருந்து வெளியேறி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தது சிராக் பஸ்வானுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

உட்கட்சிப் பூசல் நிலவிவந்த நிலையில், சட்டசபைத் தேர்தலைச் சந்தித்த அக்கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது. பாஜக-வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலத்தில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மறுபக்கம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி சுமார் 75 இடங்களில் வெற்றிபெற்று வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்

லோக் ஜன சக்தி கட்சிக்கு ஆறு எம்.பி-க்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியில் நிலவிவந்த கட்சிப் பூசல் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஆறு எம்.பி-க்கள் மட்டுமே உள்ள கட்சியில் ஐந்து பேர் சிராக் பஸ்வானின் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால் கடந்த சில தினங்களாகவே பீகார் அரசியல் களம் கொதிப்புடன் காணப்பட்டுவருகிறது. சிராக் பஸ்வானின் சித்தப்பாவும், அக்கட்சியின் எம்.பி-யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அணி திரண்டுள்ள லோக் ஜன சக்தி கட்சி எம்.பி-க்கள் மற்றும் நிர்வாகிகள் சிராக் பஸ்வானின் தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், சமீபத்தில் சிராக் பஸ்வானுக்கு பதிலாக, பசுபதி குமாரை லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக்க வேண்டும் என மொத்தமுள்ள ஆறு எம்.பி-க்களில் பசுபதி குமார் உட்பட ஐது பேர் கையெழுத்திட்டு சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சிராக் பஸ்வானைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கவும் ஐந்து எம்.பி-க்களும் சேர்ந்து முயன்றுவந்தனர். இது தொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, பசுபதி குமார் தலையிலான அணியினர் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

தனக்கு எதிராகச் செயல்பட்டுவரும் சித்தப்பா பசுபதி குமாரைச் சமாதானம் செய்யும் முயற்சிகளிலும் சிராக் பஸ்வான் இறங்கிப் பார்த்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. சிராக் பஸ்வான் தனது சித்தப்பா பசுபதி குமாரைச் சந்தித்து சமாதானம் பேசுவதற்காக சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவரது வீட்டில் காத்திருந்ததாகவும் பிறகு பசுபதி குமார், நிதிஷ் குமாருடனான தொடர்பை சிராக் அவமானப்படுத்தியதாகக் கூறிக் கொதித்ததாகவும் கூறப்படுகிறது.

சித்தப்பா பசுபதியின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த சிராக் பஸ்வான், "அவர் என் சொந்த ரத்தம் இல்லை. கட்சியைத் தன்னுடைய சுயநலத்துக்காக உடைக்கப் பார்க்கிறார். அவர் கூடிய விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்" என்று கூறினார்.

சிராக் பஸ்வானின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய பசுபதி குமார், "இப்போதே உன் சித்தப்பா இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்" என்று கூறினார். லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவைத் தொடர்ந்து பாஜக-வின் அமைச்சரவையில் தனக்குப் பதவி கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த பசுபதி குமாரின் கனவு, மாநிலத்தில் பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு சிராக் தேர்தலைச் சந்தித்ததால் பொய்த்துப்போனது. அதில் தொடங்கிய மோதல்தான் தற்போது கட்சியை உடைக்கும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள்.

லோக் ஜன சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை
லோக் ஜன சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்தநிலையில், பசுபதி குமார் தலைமையில் கூடிய செயற்குழு கூட்டத்தில், சிராக் பஸ்வானைக் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிராக் பஸ்வான் தனது சித்தப்பா பசுபதிக்குக் கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் ஒன்றை ட்விட்டரில் ஷேர் செய்து தான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக பதிவிட்டிருக்கிறார். அந்த ட்விட்டர் பதிவில் சிராக், "என் தந்தை மற்றும் குடும்பத்தினர் உருவாக்கிய கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முயன்றேன். ஆனால் அதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இந்தக் கட்சி எங்களுக்குத் தாய் போன்றது. இதற்கு ஒருபோதும் துரோகம் செய்யக் கூடாது" என்று பதிவிட்டிருந்தார்.


சிராக் பஸ்வான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் சூரஜ் பான் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்படவிருப்பதாகவும், அடுத்த ஐந்து நாள்களில் அவரே தேர்தல் நடத்தி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. சிராக் பஸ்வான் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பாட்னாவிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பசுபதி குமாருக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க?

இது ஒருபுறமிருக்க, கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிராக் பஸ்வானுக்கு, பீகாரில் நடைபெறவிருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முழு அதிகாரம் இருப்பதாகவும், பசுபதி குமார் உள்ளிட்ட ஐந்து எம்.பி-க்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் லோக் ஜன சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் கலீக் அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியில் யார், யாரை வெளியேற்றியிருக்கிறார்கள் என்பது இதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு