உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரிலுள்ள மன்சூர்பூர் காவல் நிலையத்தில் மோட்டார் பைக் திருடும் கும்பலைச் சேர்ந்த அங்கூர் என்பவர் சரணடைந்திருக்கிறார். அவர் சரணடையும்போது,"என்னை மன்னியுங்கள் முதல்வர் யோகி, நான் தவறு செய்துவிட்டேன்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்துக்கொண்டே சரணடைந்திருக்கிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ரோஜந்த், "குற்றம்சாட்டப்பட்டவர் நேற்று காலை அவருடைய கிராமத் தலைவர், அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து, தான் திருந்திவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அவர்களும் செய்த குற்றத்துக்காக காவல் நிலையத்தில் சரணடைய வலியுறுத்தியிருக்கின்றனர். அதனடிப்படையில், எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என பயந்து மன்னிப்புப் பதாகையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். மேலும், இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என உறுதியளித்திருக்கிறார். எங்களிடம் சரணடைந்தது குறித்து அவரிடம் விசாரித்தோம். அப்போது அவர் என்கவுன்ட்டருக்கு பயந்து திருந்தியதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் செய்த குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கொள்ளை (ஐபிசி பிரிவு 390), கொலை முயற்சி (ஐபிசி பிரிவு 307) உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் தேடப்பட்டவர். அந்த வழக்குகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையின் தரவுகளின்படி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டர்களில் கிட்டத்தட்ட 160-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்த என்கவுன்ட்டர்கள் குறித்து மனித உரிமைகள் குழுக்களும், நீதித்துறையும் பல்வேறு கேள்விகளை யோகி ஆதித்யநாத் அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.